தஞ்சாவூர் ரயிலடியில், கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளை மற்றும் மர்ம நிகழ்வுகள் குறித்து துரிதமாக உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர தி.மு.க அரசை வலியுறுத்தி அ.தி.மு.க ஓ.பி.எஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அ.ம.மு.க-வின் துணை பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ரெங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ரெங்கசாமி, வைத்திலிங்கம்

இதில் பேசிய ரெங்கசாமி, “கொடநாடு பங்களாவில் கொலைசெய்து, ஆவணங்கள் மற்றும் பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற கூட்டத்தை நான்காண்டுகள் ஆட்சியிலிருந்த எடப்பாடி பழனிசாமி கண்டுபிடிக்கவில்லை. பொதுமக்களுக்குத் தெரியும் யார் குற்றவாளி என்று, ஆனால் முதலமைச்சராக இருந்த அவருக்குத் தெரியவில்லை. அதற்கு பிறகு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் தேர்தலின்போது வாக்குறுதி கொடுத்தார்.

90 நாள்களில் கொலை குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டனை பெற்றுத் தருவோம் என்றார். அதேபோல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை எடுத்து தண்டனை பெற்றுத் தருவேன் என்றார். சொல்வதைச் செய்வோம், சொல்லாததையும் செய்வோம் என்பார் ஸ்டாலின். ஆனால், அவரால் எதையும் செய்ய முடியாது.

தஞ்சாவூர் ஆர்ப்பாட்டம்

பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்து, உங்கள் குடும்பத்தை வளப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதை நாங்கள் சொல்லவில்லை. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ரூ.30,000 கோடி கொள்ளையடித்திருக்கின்றனர் என்று உங்கள் சக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்கிறார். இரண்டாண்டுகள் ஆட்சியில் இரண்டு லட்சம் கோடி ரூபாய் தி.மு.க ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது, இதை மறுக்க முடியுமா?

இப்படி செய்கின்ற உங்களிடம், கொடநாட்டில் கொலைசெய்து கொள்ளையடித்தவர்களை நீங்கள் கண்டுபிடித்து மக்கள் முன்பு நிறுத்த வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். இதில் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. அ.தி.மு.க-வுக்கு பழனிசாமி போல் ஒரு டம்மி தலைவர் இருக்க வேண்டும் என ஸ்டாலின் கருதுவதால்தான், உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை என பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகிறேன்.

அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் ரெங்கசாமி

மக்களின் நலனுக்காக ஓ.பி.எஸ்ஸும், டி.டி.வி.தினகரனும் கரம் கோத்திருக்கின்றனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலை ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்து அ.ம.மு.க எதிர்கொள்ளும். இதை தினகரனே சொல்லியிருக்கிறார். எந்தத் தேர்தலாக இருந்தாலும் நாங்கள் இல்லாமல், எந்தக் கொம்பனாலும் ஓர் இடத்தில்கூட வெற்றியைப் பெற முடியாது. விடியா அரசு விரைவில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து மக்கள் முன்பு நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/DwOYlTa