கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி, தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது அமலாக்கத்துறை. காலை 7 மணிக்குத் தொடங்கிய இந்தச் சோதனை, அடுத்த நாள் வரை தொடர்ந்தது. இறுதியாக அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். அப்போது நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அது தொடங்கி இப்போதுவரை… `அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடிப்பது சரியா?’ என்னும் கேள்வி எழுப்பட்டு, விவாதிக்கப்பட்டுவருகிறது.
இலாகா இல்லாத அமைச்சர்!
அவர் கைதுசெய்யப்பட்ட பிறகு, செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்த மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமிக்கும் கொடுக்கப்பட்டது. அந்த இலாகா மாற்றப் பரிந்துரையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் துறையை மாற்றி வழங்கப் பரிந்துரைத்ததாக தமிழக அரசு கூறியிருந்தது. ஆனால், அவர்மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பதால், இலாகா மாற்றத்துக்கு மறுப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகை பதில் கடிதம் வெளியிட்டது.

அதன் பிறகு, இலாகா மாற்றத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடரும் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடிக்கக் கூடாது எனக் கடிதம் அனுப்பிய அன்றிரவே, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அப்போது அந்தச் சிக்கல் ஓய்ந்தது.
ஆனால், அது தொடர்பான விவாதங்கங்கள் நீண்டன. குறிப்பாக, அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட பின்பும், செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர்வது விமர்சனத்துக்குள்ளானது. குறிப்பாக, அவர் மருத்துவமனையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்ட பின்பும், அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக்கப்படவில்லை. மேலும், அவருக்குச் சிறையில் அறை, ஏ.சி., படுக்கை வசதி எனப் பல வசதிகள் செய்துதரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “செந்தில் பாலாஜிக்கு ஏ.சி வசதி செய்து தரப்படவில்லை” என விளக்கமளித்தார். இப்படி ஒரு பக்கம் விமர்சனம் கிளம்ப, மற்றொரு பக்கம், `செய்யாத அரசுப் பணிக்கு செந்தில் பாலாஜிக்குச் சம்பளம் கொடுக்கிறது அரசு’ என்னும் விமர்சனமும் கிளம்பியது.

அமைச்சர்களுக்குக் குறைந்த சம்பளமா?
இந்த நிலையில், ’இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார்’ என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில், `அமைச்சர்மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர் தொடருவதில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதுமட்டுமல்லாமல் எம்.எல்.ஏ-க்களைவிட அமைச்சர்கள் குறைவான சம்பளத்தைப் பெறுகின்றனர்’ என்ற வாதம் தமிழக அரசு சார்பாக வைக்கப்பட்டது. `சிறையில் இருப்பவரால் எப்படிப் பணிகளை மேற்கொள்ள முடியும்?’ என்னும் கேள்வி எதிர்த்தரப்பு வாதமாக வைக்கப்பட்ட நிலையில், எழுத்துபூர்வமாக வாதங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லி வழக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் வரிப்பணம் வீண்!
தமிழகத்தில், எம்.எல்.ஏ சம்பளம் 1.5 லட்சம் ரூபாய். அமைச்சராகப் பதவி உயரும் ஓர் எம்.எல்.ஏ-க்கு ரூ.76,800 மட்டுமே சம்பளமாகக் கொடுக்கப்படுகிறது. ஆனால், அவர்களுக்குக் கூடுதலாக அரசாங்க வீடு, பயணம் என நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும்கூட, சகல வசதிகளுடன் இருக்கிறார். அரசுப் பணிகள் எதையும் மேற்கொள்வதில்லை. ஆனாலும் அவருக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது. மக்கள் வரிப்பணத்திலிருந்து பணி செய்யாத அமைச்சருக்கு எதற்காகச் சம்பளம் கொடுக்க வேண்டும் என்னும் விமர்சனம் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படுகிறது.

இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க-வைச் சேர்ந்த கோவை சத்யன், “சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியில் தொடர்வதால் மக்களின் வரிப்பணம் வீண். இலாகா இருந்தாலே சிறையில் இருந்துகொண்டு வேலை செய்ய முடியாது. இதில், இலாகா இல்லாதவர் எதற்காக அமைச்சராக நீடிக்க வேண்டும்… தார்மிக அடிப்படையிலாவது அவரை அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும்.
ஆனால், அவர் வாயைத் திறந்தால் தலைமை வரை சில முக்கியப் புள்ளிகள் மாட்டிக்கொள்வார்கள். அது முதல்வராகவோ, அவரின் மகனாகவோ, மருமகனாகவோ இருக்கலாம். இதனால்தான் முதலமைச்சர் அவரைப் பாதுகாக்கிறார். இதில் சில தகவல்களைக் கஷ்டப்பட்டு மூடிமறைக்க முயல்கிறார். அதுமட்டுமல்லாமல், இந்த விவகாரத்தின் வீரியம் புரிந்துதான் செந்தில் பாலாஜி சிறைக்குச் சென்றதிலிருந்து அமைதியாக இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். ’ஒன்றிய அரசு’ என்னும் வார்த்தையைக்கூட அவர் கடந்த ஒரு வாரமாகச் சொல்வதில்லை. தற்போது, என்.எல்.சி விவகாரத்தில் முதலமைச்சர் வாய் திறக்கவில்லை. இவர்களின் ’சுய லாபம்’ கொழுந்துவிட்டு எரிய மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது” என்றார்.

இது குறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட செந்தில் பாலாஜி, குற்றம்சாட்டப்பட்டவரே. இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதனால், அவரை அமைச்சர் பதவிலிருந்து விலக்க வேண்டுமென சட்டரீதியாகச் சொல்ல முடியாது. ஆனால், தார்மிகரீதியாக முதலமைச்சர் ஸ்டாலின் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கியிருந்தால், தி.மு.க-வின் ’இமேஜ்’ உயர்ந்திருக்கும். அப்படி அவர் செய்திருந்தால், இப்படியான குற்றச்சாட்டுகள் வைக்கப்படாது. செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கலாமா என்பது பற்றி மக்களே விவாதிக்கும் அளவுக்கு, விவகாரம் சென்றுவிட்டது. இதை தி.மு.க உணர வேண்டும். இந்த விவகாரத்தில் தி.மு.க-வுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பதில் மாற்றுக்கருதில்லை. ஆனால், விமர்சனத்தைத் தடுக்க இதில் முதலமைச்சர் முடிவெடுக்க வேண்டும்.
அதேபோல், ஒரு வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது, அது பற்றி மேடையில் பேசாமல் இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாட்டின் உள்துறை அமைச்சராக இருந்துகொண்டு அமித் ஷா, தி.மு.க பற்றியும், செந்தில் பாலாஜி மீதான விசாரணை குறித்தும் தாக்கிப் பேசுகிறார். அப்படியானால், இந்த அமலாக்கத்துறை விசாரணையைவைத்து காரியம் சாதிக்க பா.ஜ.க முயல்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில், இரண்டு தரப்பும் உள்நோக்கம் கொண்டுதான் செயல்படுகின்றன. ஆனால், தொடர்ந்து அமைச்சராக செந்தில் பாலாஜியை நீடிக்கவைப்பது தி.மு.க அரசுக்குச் சிக்கலைத்தான் உருவாக்கும். அமைச்சர் பதவி, சம்பளம் எனப் பல விமர்சனங்களையும் தி.மு.க சந்திக்க நேரும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/HfSDM6X
