ஹரியானாவில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய யாத்திரையின்போது அந்த மாநிலத்தில் ஏற்பட்ட கலவரமும், அப்போது நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்களும் நாட்டையே உலுக்கியிருக்கின்றன. ஹரியானாவின் நூஹ் பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 31) ஏற்பட்ட வன்முறை, குருகிராம் பகுதிக்கும் பரவியது. இந்த நிலையில், உளவுத்துறை போதிய முன்னெச்சரிக்கைகளை வழங்காததும், பாதுகாப்புக்காகப் போதுமான அளவுக்கு போலீஸார் குவிக்கப்பட்டாததுமே இந்த வன்முறைக்கு முக்கியக் காரணம் எனக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

“இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் 130 கி.மீ ‘பிரஜ் மண்டல் யாத்ரா’ கடக்கும்போது பிரச்னை ஏற்படும். இந்த யாத்திரை செல்லும்போது அந்தப் பகுதியில் வசிக்கும் இஸ்லாமிய மக்களைச் சந்திக்க நேரிடும். அவர்களைக் கடந்து செல்லும்போது முழக்கங்களை எழுப்பிக்கொண்டு, வாள்களைச் சுழற்றிக்கொண்டு செல்வார்கள். எனவே, இதை கவனத்தில்கொள்ள வேண்டும் என்று அரசாங்கத்துக்கு பத்து நாள்களுக்கு முன்பே இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தோம்” என்கிறார்கள் நூஹ் மாவட்டத்தில் இருக்கும் உளவுத்துறை சார்ந்த அதிகாரிகள்.

ஹரியானா கலவரம்

இந்தக் கலவரத்துக்கு முக்கியக் காரணியாக பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த மோனு மானேசர் என்கிற நபரைக் குறிப்பிடுகிறார்கள். இவர், பசுக்களுக்காக மனிதர்களை அடித்துக் கொன்ற வழக்கில் சிறைக்குச் சென்றவர். இவர், தானும் இந்த யாத்திரையில் பங்கேற்கவிருப்பதாக வீடியோ வெளியிட்டார். இதனால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அறிவுறுத்தலின் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை எனப் பின்னர் கூறப்பட்டது. ஆனால், அவர் குறித்த வதந்தி இந்த வன்முறை ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

இது பற்றி ஹரியானா மாநில காவல்துறை உயரதிகாரி ஒருவர், “மோனு மானேசர் வருவதாகப் பரவிய வதந்தியால் யாத்திரையை நிறுத்த ஊர் மக்கள் முடிவுசெய்தார்கள். அவர்கள் வரும் வழியை அடைக்க முயன்றார்கள். இந்தச் சூழலை தங்களால் கையாள முடியும் என மூத்த அதிகாரிகள் நினைத்தார்கள். இதைச் சாதாரணமாக நினைத்துக்கொண்டார்கள். ஊர் மக்களைச் சமாதானம் செய்துவிடலாம் என்றும் நம்பினார்கள். ஆனால், ஊர் மக்களும் ஒன்று கூடிவிட்டார்கள். 17 முதல் 22 வயது வரையிலான இளைஞர்கள் யாத்திரை வரும் பாதையில் பைக்குகளில் சென்றார்கள். அதேசமயத்தில் இந்த யாத்திரையின்போது வன்முறை ஏற்படும் என்று எந்த உளவுத்துறைத் தகவலும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. யாத்திரை என்பது ஓர் அவசரகால நடவடிக்கை கிடையாது. முன்பே தகவல் கிடைத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்போம்” என்று கூறியிருக்கிறார்.

மனோகர் லால் கட்டார்

இதற்கிடையே, “ஹரியானாவில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இதுவரை 116 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இரு தரப்பு மோதலில் இரு போலீஸார் உட்பட ஆறு பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்போதைய நிலைமை அமைதியாக இருக்கிறது. குற்றவாளிகள் தப்ப முடியாது” என்று முதல்வர் கட்டார் தெரிவித்திருக்கிறார். இதேபோல், “மோதல் குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும்” நூஹ் காவல்துறை துணை ஆணையர் பிரசாந்த் பன்வார் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில், ஹரியானா, டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழ்ந்த இரு தரப்புக்கிடையேயான கலவரம் தொடர்பான வழக்கு நேற்று (ஆகஸ்ட் – 02) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றம், “எந்த வெறுப்புப் பேச்சும் பேசப்படக் கூடாது என்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும். பதற்றம் நிறைந்த இடங்களில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். போதுமான அளவில் சிசிடிவி-க்கள் பொருத்தப்பட வேண்டும். அனைத்து விஷயங்களையும் பதிவுசெய்ய வேண்டும். பேரணி நடத்துவதாக வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வதை அனுமதிக்கக் கூடாது” என்று உத்தரவிட்டது. அதேபோல், வகுப்புவாதக் கலவரம் விவகாரத்தில் ஹரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய மூன்று மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.

சத்யபால் மாலிக்

நிலைமை இவ்வாறு இருக்க, இந்தக் கலவரம் அரசியல் காரணிகளுக்காகத் திட்டமிடப்பட்டதா அல்லது யதேச்சையாக அமைந்ததா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில், “ஹரியானா மாநிலம், நூஹ் பகுதியில் தொடங்கிய வன்முறை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பரவியது தன்னிச்சையானது அல்ல. ஏழெட்டு இடங்களில் இந்தக் காரணத்தைவைத்து வகுப்புவாதப் பிளவை உருவாக்கும் நோக்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டதுதான் இந்தக் கலவரம். இவர்களைக் கட்டுப்படுத்தாவிட்டால், நாடு முழுவதும் மணிப்பூர்போல் எரிந்துவிடும். இந்தப் போக்கு 2024 தேர்தல் நெருங்கும் நேரம் அதிகரிக்கும்” என்கிற கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார் முன்னாள் ஆளுநரும், பாஜக-வின் முக்கியத் தலைவருமான சத்யபால் மாலிக்.

இந்த விவகாரம் தொடர்பாக நம்மிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் லெனின், “எப்படி மணிப்பூரில் டபுள் இன்ஜின், டிரபுள் இன்ஜின் ஆனதோ, அதேபோல ஹரியானாவிலும் நடந்திருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸின் அஜண்டா மக்களை திசைதிருப்பவதற்கு மட்டுமல்ல… பெரும்பான்மைவாத அரசியல், வெறுப்பு அரசியலை உருவாக்குவது. இந்த வெறுப்பு அரசியல் மூலம் பலிகடாவாக்கும் வேலைகளைத்தான் இந்தக் கலவரங்களின் மூலம் நிகழ்த்துகிறார்கள். ‘அரசாங்கம்தான் இந்தக் கலவரத்தை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது’ என்று இதில் இருக்கும் நல்ல ஆட்கள் வெளியே வந்து சொல்லிவிடுகிறார்கள்.

லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஆரம்பகால வரலாற்றிலிருந்து இன்று வரை பார்த்தால் எல்லாக் கலவரங்களையும் திட்டமிட்டு, ஒரு நோக்கத்துக்காத்தான் செய்வார்கள். அதன் மூலம் அரசியல் அறுவடையை எடுப்பார்கள். முசாஃபர் நகரில் கலவரத்தை ஏற்படுத்தி, உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைப் பிடித்தார்கள். இந்தப் பகுதியில் அதிக அளவில் வாக்குகளை அறுவடையும் செய்தார்கள். இதுதான் அவர்களின் தேர்தல் வியூகம். எப்போதும் பிற மதத்தைக் காட்டுவார்கள். ஆனால், இப்போது சொந்த மதத்துக்குள்ளேயே பிரச்னைகளை உருவாக்குவது சேர்ந்து நடக்கிறது.

வெறுப்பு அரசியலின் விளைவாக வந்த கலவரப்படைதான் வி.ஹெச்.பி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகள். இந்து மதத்தின் நல்ல விஷயங்களைப் பரப்புவது இவர்களின் வேலை இல்லை. `இந்துத்துவா’ என்கிற பெயரில் பிரிவினைவாதத்தை முன்வைத்து பிளவு அரசிலை, வெறுப்பரசியலை கலவரங்கள் மூலம் விதைப்பதுதான் அவர்களின் வேலை. அதைத்தான் இப்போது ஹரியானாவில் நிகழ்த்தியிருக்கிறார்கள்” என்றார்.

இது போன்ற விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளிக்கும்விதமாக நம்மிடம் பேசினார் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி. “ஒருசில இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் திட்டமிட்டரீதியில் கலவரத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதில் காவலர்களைப் படுகொலை செய்ததோடு, அந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது கடும் தாக்குதல்களை நடத்தியிருக்கின்றனர். கோயில்களில் தஞ்சமடைந்தவர்களை அங்கிருந்து வெளியே வரவிடாமல் தடுத்து, பல நூற்றுக்கணக்கான மக்களைப் பதற்றமடையச் செய்திருக்கின்றனர். அங்கு மாற்று சமுதாயத்தைச் சார்ந்த ஒரு கொலைக்கு இன்று பொங்கி எழுவது என்பது, உண்மையிலேயே மனசாட்சியுடன்தான் ஊடகங்களும் எதிர்கட்சிகளும் நடந்துகொள்கின்றனவா என்று கேட்கத் தோன்றுகிறது. ஏனென்றால் பாதிக்கப்பட்ட பெரும்பான்மையினர் பற்றி யாரும் பேசவில்லை.

நாராயணன் திருப்பதி

`நாங்கள் மதச்சார்பற்றவர்கள்’ என்று சொல்கிறவர்கள் இன்று மதவாதிகளாக இருக்கிறார்கள். `சிறுபான்மை’ என்று சொன்னாலே அது மதச்சார்பற்ற என்கிற மோசமான சிந்தனை இவர்களிடத்தில் இருப்பது தவறானது. வன்முறையை யார் செய்தாலும் கண்டிக்கவேண்டிய பொறுப்பானவர்கள், பொறுப்பற்ற முறையில் இந்த விவகாரத்தில் நடந்துகொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் உண்மையிலேயே ஓட்டுக்காக மதவாதம் செய்பவர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்பது நிருபணமாகியிருக்கிறது. நடைபெற்ற ஊர்வலத்தில் மத அடிப்படைவாதிகள், தாங்களே கலந்துகொண்டிருக்கிறார்கள்.

அதேநேரத்தில் தனிப்பட்ட காரணத்துக்காக ரயிலில் நடந்த கொலைச் சம்பவத்தையும், `அவர்கள் தாடி வைத்திருந்தார்கள். அதனால்தான் கொலை செய்துவிட்டார்கள்’ எனப் போலியான வீடியோவை வெளியிட்டு, எப்படியெல்லாம் மதரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தலாம் என்று எதிர்க்கட்சிகள் துடித்துக்கொண்டிருக்கின்றன என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதையெல்லாம் பாஜக, நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதியாக ஓட்டுக்காக அல்லாமல் நாட்டுக்காக இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/Q3FpTtq