மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆகஸ்ட் 2-ம் தேதி 51 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாகக் கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தின்போது, இணையவழி விடுதிகள்(கேசினோ), விளையாட்டுகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பது தொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட ஜி.எஸ்.டி சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்துக்களை தெரிவித்தார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இணையவழி விளையாட்டுக்கள், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றின் மீது ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவு, கூட்ட நடவடிக்கைப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழ்நாட்டில், சமீபத்தில் இயற்றப்பட்ட தமிழ்நாடு இணையவழி சூதாட்ட தடை மற்றும் இணையவழி விளையாட்டுக்கள் ஒழுங்குபடுத்தும் சட்டத்தினை கருத்தில் கொண்டு, இக்கூட்டத்தில் முன்மொழியப்பட்ட சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவின் சில கூறுகளுக்கு எதிராக தங்கம் தென்னரசு வலிமையான கருத்துக்கள் எடுத்துரைத்தார்.
இணையவழி சூதாட்டம், பணம் அல்லது பிற ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் மற்றும் குறிப்பிட்ட வாய்ப்புள்ள இணையவழி விளையாட்டுக்கள் ஏற்கெனவே தடை செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் தண்டனைக்குரிய குற்றங்களாக கருதப்படுவதால், தற்போது முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்களை அத்தகைய மாநில சட்டங்களுக்கு இணக்கமான முறையில் அமைய வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார். சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் குறிப்பிட்ட கூறுகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இணையவழி பண விளையாட்டுக்கான சட்ட வரையறையில், தற்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டம், அல்லது அதன் கீழ் தடைசெய்யப்பட்ட, அல்லது வாய்ப்பின் அடிப்படையில் செயல்திறன் அல்லது விளைவுகள் இருக்கும் விளையாட்டுக்களை கொண்டுவரக்கூடாது என தெரிவித்தார்.
மேற்கூறிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள சட்டத்திருத்த வரைவில் சேர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் சட்டம் மற்றும் விதிகளின் திருத்த வரைவில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரிமன்றத்தால் உறுதியளிக்கப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஜி.எஸ்.டி கவுன்சிலின் 50-வது கூட்டத்தில் ‘ஆன்லைன் சூதாட்டங்கள் மீது 28% ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் ’என முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெல்லி அரசு கோரிக்கை வைத்தது. அத்துடன் கோவா மற்றும் சிக்கிம் மாநிலங்கள் சூதாட்டம் நடைபெறும் கேசினோ அமைப்புகள் மீதான வரி விதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கைகள் 51-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்டன.
ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “தமிழ்நாடு அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்கள் மீது விதித்துள்ள தடையை வரிவிதிப்பு நீர்த்துப்போக செய்யக்கூடாது என்ற கோரிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. ஆன்லைன் ரம்மி சூதாட்டங்களில் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு இத்தகைய சூதாட்டங்களை தடை செய்துள்ளது.

சூதாட்டங்களை நடத்தும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவதை சுட்டிக்காட்டி தங்கள் நடவடிக்கைகளை நியாயப்படுத்த கூடாது என தமிழ்நாடு அரசு கருதுகிறது. ஆகவேதான் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தனது நிலைப்பாடு குறித்து தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அத்துடன் முந்தைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு தனது கருத்தை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆன்லைன் கேமிங் மீதான தடைக்கு இந்த வரி விதிப்பில் மூலம் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. தமிழ்நாட்டில் தடை தொடரும். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை மனதில் கொண்டு அதற்கேற்ற வகையில் ஜிஎஸ்டி கவுன்சில் நடவடிக்கை எடுத்து வரி விதிப்பு தொடர்பான அறிவிப்புகளை வெளியிடும்.
சூதாட்டங்கள், குதிரை பந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றிற்கு வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சி.ஜி.எஸ்.டி சட்டம், 2017-ன் அட்டவணை 3-ல் திருத்தம்; சி.ஜி.எஸ்.டி சட்டம் 2017, ஐ.ஜி.எஸ்.டி சட்டம் 2017 ஆகியவற்றில் சில திருத்தங்களை ஜிஎஸ்டி கவுன்சில் தனது 51வது கூட்டத்தில் பரிந்துரைத்தது. ஐ.ஜி.எஸ்.டி சட்டம், 2017-ல் ஒரு குறிப்பிட்ட விதியை சேர்க்கவும் கவுன்சில் பரிந்துரைத்தது. இது இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒரு நிறுவனம் இந்தியாவில் உள்ள ஒரு நபருக்கு ஆன்லைன் சூதாட்ட கேமிங்கை வழங்குவதில் ஜிஎஸ்டி செலுத்துவதற்கு வழிவகுக்கும்.

மேலும் பதிவு செய்தல் மற்றும் வரி செலுத்துதல் விதிகளுக்கு நிறுவனம் இணங்கத் தவறினால், அத்தகைய நிறுவனத்தால் ஆன்லைன் சூதாட்ட கேமிங்கை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு கணினிப் பொறியியலாலும் அனுப்பப்பட்ட, பெறப்பட்ட அல்லது பரிமாறப்பட்ட டிஜிட்டல் சொத்துக்களை முடக்குவதற்கும் பரிந்துரை செய்துள்ளது. ஆகவே இந்திய வாடிக்கையாளர்கள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு செலுத்தும் பணத்துக்கு வெளிநாட்டு நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி கட்டுவது உறுதி செய்யப்படும்.
சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கான நடைமுறையை விரைவாக முடித்து, 2023 அக்டோபர் 1 முதல் திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது” என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதற்கான சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக ஆன்லைன் கேமிங் துறை சார்ந்தவரகள் பேசுகையில், “கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான 28% வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பல விமர்சனங்கள் வந்தது மட்டும் அல்லாமல் பெரிய ஆன்லைன் கேமிங் நிறுவனங்களும் அவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளும், நியுஏஜ் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இது பெரும் தடையாக இருக்கிறது என தெரிவித்தனர்.

அதோடு பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி கவுன்சில், வர்த்தக அமைச்சகம், நிதியமைச்சகத்திற்கும் கடிதம் எழுதியது. இத்துறையில் இருக்கும் சிக்கல் மற்றும் இந்த 28 சதவீத ஜிஎஸ்டி மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் விவரித்தனர். அதன்படி, ஆன்லைன் கேமிங் துறையில் ஒருவர் ரூ.100 செலுத்துகிறார் எனில் இதில் 28 சதவீத ஜிஎஸ்டி போக ரூ.72 மட்டும் தான் பெட்டிங் செய்ய முடியும். இந்த பெட்டிங்-ல் போட்ட பணத்தை முழுமையாக வெல்கிறார். அதாவது ரூ.72 வெற்றி பெற்று திரும்ப எடுக்கிறார் எனில் அவருக்கு platform fees போக ரூ.54 தான் கிடைக்கும். இதில் 30 சதவீதம் TCS வரி பிடித்தம் உள்ளது” என்கிறார்கள்.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பின் வருவாய்த்துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா பேசுகையில், “ஆன்லைன் சூதாட்டம் ஏற்கனவே ஜிஎஸ்டிக்கு உட்பட்டது, ஆனால் அது இன்னும் சட்டப்பூர்வமாக்கப்படவில்லை. ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது என்பதால் தடை செய்யப்பட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டம் சட்டவிரோதமானது இல்லை என்று கூற முடியாது. அது இப்போதும் சட்ட விரோதமானதுதான். ஆன்லைன் கேமிங்கிற்கு வரி விதிப்பதால் அதை தடை செய்த மாநிலங்களில் ஆன்லைன் கேம் சட்டப்பூர்வமாகிவிடும் என்று கூற முடியாது. எந்தெந்த மாநிலங்களில் தடை இருக்கிறதோ அந்தந்த மாநிலங்களில் தடை தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
from Tamilnadu News https://ift.tt/azMjWUT
