மக்களவையில் டிசம்பர் 13-ம் தேதி நடந்த பாதுகாப்பு மீறல் தொடர்பாகப் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், 141 பேர் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்துவருகின்றன. இதில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்ய சபா தலைவர் ஜக்தீப் தன்கரைப் (குடியரசு துணைத் தலைவர்) போல மிமிக்ரி செய்ய, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார்.

ஜக்தீப் தன்கர் – மோடி

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவ, நாட்டின் குடியரசு துணைத் தலைவரை எதிர்க்கட்சியினர் அவமதிக்கின்றனர் எனப் பா.ஜ.க விமர்சிக்கத் தொடங்கியது. ஜக்தீப் தன்கர்கூட, கடந்த 20 ஆண்டுகளாக தானும் இது போன்ற அவமானங்களுக்கு ஆளாகியிருப்பதாகக் கூறி மோடி தன்னை ஆறுதல் படுத்தியதாகவும், எந்த அவமானமும் தன் பாதையை மாற்றாது என பதிலளித்ததாகவும் ட்வீட் செய்திருந்தார்.

இன்னொருபக்கம், ஜக்தீப் தன்கரின் ஜாட் (Jat) சமூகத்தைச் சேர்ந்த சிலர், எதிர்க்கட்சிகள் தங்கள் சமூகத்தையே அவமதித்தாக போராட்டதிலும் ஈடுபட்டனர். இத்தகைய சூழலில், ராஜ்ய சபாவில் இந்த விவகாரம் குறித்து இன்று பேசிய ஜக்தீப் தன்கர், “ஜக்தீப் தன்கரை நீங்கள் (எதிர்க்கட்சிகள்) எவ்வளவு அவமானப்படுத்தினாலும் எனக்கு கவலையில்லை.

https://platform.twitter.com/widgets.js

ஆனால், குடியரசு துணைத் தலைவரை, விவசாய சமூகத்தை, என்னுடைய சமூகத்தை அவமானப்படுத்துவதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. என்னுடைய பதவியின் கண்ணியத்தைக் காக்க முடியவில்லை என்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். இந்த அவையின் கண்ணியத்தைப் பாதுகாப்பது என் கடமை” என்று கூறினார்.

இந்த நிலையில், சாதிரீதியாக மக்களைத் தூண்டும் வகையில் ஜக்தீப் தன்கர் பேசக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார்.

ராஜ்ய சபாவில் ஜக்தீப் தன்கர் பேசியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “நடந்த அவமதிப்பு சாதி அடிப்படையிலானது என்றும், விவசாயிகளும் இதில் இழிவுபடுத்தப்பட்டனர் என்றும் அவைத் தலைவர் கூறினார்.

மல்லிகார்ஜுன கார்கே

அவைக்குள் எம்.பி-க்களுக்கு பாதுகாப்பு அளிப்பதே அவைத் தலைவரின் பணி. மாறாக, அவைக்குள் சாதிரீதியாகப் பேசி, வெளியில் மக்களைத் தூண்டிவிடக் கூடாது. அதைத் தவிர்க்க வேண்டும். எனது சாதி எப்போதும் தாக்கப்படுகிறது. எனக்கும்கூட அவையில் பேச அனுமதி கிடைப்பதில்லை. அதனால், நான் ஒரு தலித் என்பதால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று கூறலாமா… ஆனால், நான் அப்படி எதுவும் கூற மாட்டேன்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/1xESmWu