திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை மிரட்டி ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மதுரை அமலாக்கத்துறை மண்டல துணை அதிகாரி அங்கிட் திவாரி, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி சிவஞானம் முன் இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “அங்கிட் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கிட் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தொடர்புள்ளது கண்டறியப்படும்.

மேலும், அங்கிட் திவாரி மடிக்கணினியில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது, அதில் தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கியுள்ள 75 பேரை பெயருடன் பட்டியலிட்டுள்ளார். இது அதிர்ச்சி உண்டாக்குவதாக உள்ளது. எனவே, இது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக அங்கிட் திவாரியே காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். அங்கிட் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் மீது வழக்கு இல்லை என குறிப்பிட்டு ஜாமீன் கோருகிறார். ஆனால், திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு மற்றும் அவரது மனைவி மீது மதுரை மண்டல அலுவலகத்தில் வழக்கு உள்ளது. 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட வேண்டியுள்ளது.

அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரில் அங்கிட் திவாரி பணம் பெறும்போது அவருடைய குரல்பதிவு மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இது உண்மையா என்பதை கண்டறிய அவருடைய குரலை பதிவு செய்து ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கிட் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அங்கிட் திவாரியை பாதுகாக்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இதுவரை அவர் மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறை அதிகாரிகள் அங்கிட் திவாரியை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர். மேலும், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது விசாரணையை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே இவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

அங்கிட் திவாரி தரப்பில் “அங்கிட் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை, அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. இது பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசு அதிகாரி என்பதால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று அங்கிட் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/KWlgoNJ
