`இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் `தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும்` என நிதிஷ் குமார் பேசியதாக வெளியான கருத்துக்கு தி.மு.க கருத்தோ, கண்டனமோ தெரிவிக்காதது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது. இந்தி திணிப்பை எதிர்ப்பதில் ஓரவஞ்சணை காட்டுகிறதா தி.மு.க என கேள்வியையும் எழுப்பியுள்ளது. இதுகுறித்த விரிவாக விசாரித்தோம்.

`இந்தியா’ கூட்டணியின் டெல்லிக் கூட்டத்தில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியில் பேசியிருக்கிறார். அவரின் பேச்சை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும்படி தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு கேட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து மொழியெயர்ப்பு செய்யப்பட்டது. இதனிடையே அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும்” எனப் பேசியதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், “நிதிஷ் குமாரின் இந்த பேச்சால் தி.மு.க தலைமை கடும் அப்செட் ஆனது. இருந்தாலும் இதுகுறித்து எந்த எதிர்வினையும் தி.மு.க தரப்பில் ஆற்றவில்லை. `இந்தியா’ கூட்டணிக்குள் ஏற்கனவே 108 பிரச்னை இருக்கும்போது, நிதிஷ் குமாரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தால் மேலும் விரிசலை ஏற்படும். இது பா.ஜ.க-வுக்கு ஒரு நல்வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதால் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்காமல் கடந்துவிட்டது தி.மு.க. இந்த விஷயம் பொதுவெளிக்கு வரவே, தமிழ்நாடு பா.ஜ.க-வும் நாம் தமிழர் கட்சி தரப்பிலும் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. பெரும் பேசுபொருளாக மாறியபோதும், தி.மு.க தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.” என்றனர்.

நம்மிடம் பேசிய பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, “நிதிஷ் குமாரின் கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். அவர் சொல்லியதில் தவறு எதுவுமில்லை. ஆனால் நிதிஷ் குமாரின் இந்த பேச்சின்மூலம் தி.மு.க-வின் இரட்டை நாக்கு அம்பலப்பட்டுவிட்டது. கூட்டணிக் கட்சியினர் பேசினால் வாய்மூடி தி.மு.க வேடிக்கை பார்க்கும், பா.ஜ.க எதாவது பேசினால் நிலத்துக்கும் வானத்துக்கும் குதிப்பார்கள். இப்போது டி சர்ட் அணிந்து எதிர்க்க வேண்டியதுதானே, `இந்தி தெரியாது போடா` என கூச்சலிட்டிருக்க வேண்டாமா” என காட்டமாக வினவினார்.

நம்மிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பாத்திமா ஃபர்கானா, “கடந்த வாரம், கோவா விமான நிலையத்தில் தமிழ்ப்பெண் ஒருவரிடம் அங்குள்ள பாதுகாப்புப்படை வீரர் இந்தியில் பேசச் சொல்லி வற்புறுத்தியதோடு, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழியென கூறியதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை அப்பாதுகாப்புப் படை வீரருக்குத் தெரிவித்தார். தற்போது அதே கருத்தை INDIA கூட்டணியின் கூட்டத்தில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியிருக்கிறார்.

பாதுகாப்புப்படை வீரருக்குக் கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், நிதிஷ் குமார் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காது, வாய்மூடிக் கிடப்பதேன்? இதன்மூலம் தி.மு.க-வின் இரட்டை வேடம் வெளிப்பட்டுவிட்டதென சொல்லமுடியாது. உண்மைமுகம் அம்பலமாகியுள்ளது. இந்தி எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு, ஜனநாயகம் காப்போம் என வாய்க்கிழிய பேசுவதெல்லாம் பா.ஜ.க எதிர்ப்பு அரசியல்தானே தவிர கொள்கையல்ல. தி.மு.க-வுக்கு பா.ஜ.க-வுக்கு எந்த வித்தியாசமுமில்லை என நாம் தமிழரின் கூற்றுக்கு இதுவொரு சான்று. கூட்டணிக்காக இந்தி திணிப்பையே வேடிக்கை பார்க்கும் இவர்களா மக்களுடன் நிற்கப் போகிறார்கள்.
இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்ற பதவி வெறிதான் நிதிஷ் குமார் பேச்சை பொறுத்துக் கொள்ள செய்கிறது. நாளை அவர்கள் அணி ஆட்சிக்கு வந்து இந்தி திணித்தால்கூட இப்படியே மெளனமாகத்தான் இருப்பார் ஸ்டாலின்” என்றார் கொதிப்புடன்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தி தொடர்பாளர் சல்மா, “முதலில் `இந்தியா’ கூட்டணி அந்த கூட்டத்தில் என்ன நடந்ததென்றே தெரியாது. அதுகுறித்த காணொளியோ, பதிவுகளோ இல்லை. இந்நிலையில் அதுகுறித்து எப்படி பேசுவது?. இதன்பின்னே பா.ஜ.க வழக்கம்போல் கையாளும் சித்தரிப்பு அரசியல் இருக்குமோ என்ற சந்தேகமும் இருக்கிறது. தி.மு.க-வை பொறுத்தவரை எதற்காகவும் கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத ஒர் இயக்கம். இந்தி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம். நம்மீது இந்தியை திணித்து கொண்டிருக்கும் பா.ஜ.க-வை கடுமையாக எதிர்க்கிறோம். வரும்காலத்தில் யார் திணித்தாலும் எதிர்ப்போம். மற்றபடி மேலும் பா.ஜ.க கருத்துருவாக்கம் செய்யும் அனைத்துக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பது எங்கள் வேலையல்ல. அப்படி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பேசியிருந்தால்கூட நடைமுறையில் அது நமக்கென்ன பாதிப்பை தரப்போகிறது..?” என்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
from Tamilnadu News https://ift.tt/oi5KXL1
