பா.ஜ.க-வின் முக்கிய திட்டங்களில் ஒன்றான அயோத்தி ராமர் கோயில், ஜனவரி 22-ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் இந்த திறப்பு விழா, கிட்டத்தட்ட ஓர் அரசு விழாவாக முன்னெடுக்கப்படுகிறது. பா.ஜ.க-வைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், ராமர் கோயில் கட்டுமானக் குழுத் தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா (விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்), டிசம்பர் 23-ம் தேதியன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) (சிபிஐ-எம்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்து, ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஆனால், இந்த அழைப்பை ஏற்க மறுத்த சீதாராம் யெச்சூரி, “நிரிபேந்திர மிஸ்ரா ஒருவருடன் வந்து எனக்கு அழைப்பைக் கொடுத்தார். சி.பி.ஐ (எம்)-ஐப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தனிநபருக்கும் அவரவர் தனிப்பட்ட மத நம்பிக்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம், பாதுகாக்கிறோம்.
ஆனால், ராமர் கோயில் திறப்பு விழா, அரசு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் மற்றும் அரசியல் சாசன பதவிகளை வகிக்கும் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். இந்த அரசியல் மயமாக்கல் சரியல்ல. மேலும், மதம் என்பது தனிப்பட்ட விருப்பம், அது அரசியல் ஆதாயத்துக்கான கருவியாக மாற்றப்படக் கூடாது. அரசியலமைப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தின்படி, அரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் கொண்டிருக்கக் கூடாது” என்று நேற்று ஊடகத்திடம் கூறினார்.

இந்த நிலையில், சீதாராம் யெச்சூரியின் கருத்தை உறுதிப்படுத்திய சி.பி.ஐ(எம்), ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், `அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்ள சி.பி.ஐ(எம்)-ன் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரிக்கு அழைப்பு வந்திருக்கிறது. சி.பி.ஐ (எம்)-ன் கொள்கையானது மத நம்பிக்கைகளுக்கு மதிப்பளிப்பதும், அதனைப் பின்பற்றும் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமையைப் பாதுகாப்பதும்.

அதேசமயம், மதம் என்பது அரசியல் ஆதாயத்துக்கான ஒரு கருவியாக மாற்றப்படக் கூடாது. எனவே, விழாவில் நாங்கள் பங்கேற்க மாட்டோம். மத விழாவை, பிரதமர், உத்தரப்பிரதேச முதல்வர் உட்பட அரசு அதிகாரிகள் நேரடியாகப் பங்கேற்கும் அரசு விழாவாக பா.ஜ.க-வும், ஆர்.எஸ்.எஸ்ஸும் மாற்றியிருப்பது மிகவும் துரதிஷ்டவசமானது. உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்ட இந்திய ஆட்சியின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், அரசியலமைப்பின் கீழ் இந்தியாவில் உள்ள அரசு மத சார்புடையதாக இருக்கக் கூடாது. ஆனால், ஆட்சியிலிருப்பவர்கள் விழா அமைப்பில் அதனை மீறுகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
from Tamilnadu News https://ift.tt/DVtyfG7
