தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகளைப் பார்வையிடுவதற்காகச் சென்ற தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, “தென் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு சூழலை, தமிழக அரசு இன்னும் எச்சரிக்கையுடன் கையாண்டிருக்க வேண்டும். எச்சரிக்கை முன்னேற்பாடுகளைச் சரியாக எடுத்திருக்க வேண்டும். தமிழக மழை வெள்ளத்தில் திராவிட மாடல், திண்டாடும் மாடலாக மாறிவிட்டது” என்று தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தமிழிசையைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பேசியிருக்கும் புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க அமைப்பாளருமான எம்.எல்.ஏ சிவா, “புதுச்சேரி பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை, தான் இன்னும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் என்ற நினைப்பிலேயே தினம் தினம் அரசியல் விமர்சனம் செய்து வருகிறார். அவரது பேச்சில் தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற பழைய  துருபிடித்த வார்த்தை மட்டும்தான் இல்லை.

தமிழக முதல்வர் ஸ்டாலின்

மற்றபடி அவர் பா.ஜ.க தலைவராக இருந்தபோது என்னவெல்லாம் அரசியல் பேசினாரோ, அதே பேச்சைத்தான் தற்போது ஆளுநராக இருக்கும்போதும் பேசி வருகிறார். ஆளுநர் என்ற பதவியின் கௌரவத்தையும், தகுதியையும் குழிதோண்டி புதைத்து வருகிறார். திராவிட மாடல் என்பது சமூகநீதியாகும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கப் பெறுவது. தமிழிசை போன்ற சூத்திர சமூகம், டாக்டராக, இன்ஜினீயராக, பட்டதாரியாக, ஆட்சியாளராக உயர்வதற்கான அடித்தளம் அது. கடந்த 100 ஆண்டுக்கால தமிழக முன்னேற்றமே அதுதான். அதைக்கண்டு அலரும் பா.ஜ.க–வினர், எதற்கெடுத்தாலும் திராவிட மாடலை ஒப்பிடுவதும், குறை காண்பதும் அற்பத்தனமானது. இவ்வளவு பேசும் தமிழிசை அவர்களே, நீங்கள் பொறுப்பில் உள்ள இந்த புதுச்சேரியின் யோக்கியதை என்ன… தலைமைச் செயலர், துறை செயலர் உள்ளிட்ட எந்த அதிகாரியும் வேலையே செய்வதில்லை என்று, உங்களை மேடையில் வைத்துக் கொண்டே முதல்வர் ரங்கசாமி குற்றப்பத்திரிகை வாசித்தாரே… நீங்கள் தானே புதுச்சேரி மாநில தலைமை நிர்வாகி, அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.

இதற்கு முன்பே சட்டப்பேரவைத் தலைவர் அதிகாரிகளின் செயல்பாடு அரசுக்கு எதிராக இருக்கிறது என்று எச்சரித்தாரே, தினம் தினம் நிர்வாகம் முடங்கிக் கிடப்பதாக ஆளும் அரசு புலம்புகிறதே. அதற்கு உங்கள் பதில் என்ன… உங்கள் நிர்வாகத்தின் சீர்கேடுகளை பட்டியல் போடவா… புதுச்சேரி நகர்ப் பகுதி நிலத்தடியில் கடல் நீர் உட்புகுந்து, உப்புத் தன்மை கலந்துவிட்டதும், இன்னும் சிறிது காலத்தில் கிராமப் பகுதியிலும் நிலத்தடி நீர் உப்பு கலந்துவிடும் நிலையால் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதற்காக ஏதேனும் நீங்கள் கவலைப்பட்டீர்களா?… புதுச்சேரியில் உள்ள 85 ஏரிகளின் நிலை குறித்தோ, 8 படுகை அணைகளின் பராமரிப்பு குறித்தோ, 400 குளங்கள் பறிபோனது பற்றியோ உங்களுக்கு ஏதாவது அக்கறை உண்டா… போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து மக்கள் அல்லல்படுவதை தீர்க்கவோ, நெரிசலை தவிர்க்க ரூ.30 கோடியில் பாதியில் நிற்கும் உப்பனாறு மேம்பாலத்தை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டீர்களா ?

புதுச்சேரி திமுக அமைப்பாளர், எதிர்க்கட்சித் தலைவர் சிவா

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படித்து வேலைக்காக அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகும் அவலத்தை போக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டீர்களா… அரசுத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதாவது முயற்சிகள் உண்டா… நாள்தோறும் புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் குவிகிறார்களே அவர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டம் உண்டா? அவசர கோலத்தில் ஒன்றிய அரசின் புதிய கல்வித் திட்டத்தை மாணவர்களுக்கு திணித்தீர்களே.. அதனை முன்னெடுக்க சரியான பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உண்டா? 100 நாள் வேலை 20 நாள் வேலையாக சுருங்கிக் கிடக்கிறதே அதை மீட்டெடுக்கும் வழிவகை உண்டா? கடல் அரிப்பில் இருந்து மீனவ மக்களை காப்பாற்ற விரிவான திட்டம் இருக்கிறதே ? புதுச்சேரி – திண்டிவனம், புதுச்சேரி – சென்னை, புதுச்சேரி – காரைக்கால் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை இருக்கிறதா… அட்டவணை இனத்தவர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற சிறப்புக் கூறு நிதி மடைமாற்றி விடப்படுகிறதே, அதுபற்றி கவலை உண்டா?

வேலைவாய்ப்பை உருவாக்க, புதிய தொழிற்சாலைகள் உருவாக்குவது குறித்து சிந்தித்து இருக்கிறீர்களா… புதுச்சேரியில் உற்பத்தி நிறுவனங்களாக பல ஆயிரம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த ரோடியர், சுதேசி, பாரதி மில்களை மீட்டெடுக்க நடவடிக்கை உண்டா? ரேஷன் கடைகளை திறந்து மக்களுக்கு தரமான அரிசி வழங்க நடவடிக்கை உண்டா ? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ. 944 கோடிக்கு 96 பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளதாகவும், இதுவரை ரூ. 356 கோடி ஒதுக்கப்பட்டு ரூ. 44 கோடிக்கு 31 பணிகள் முடிந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. அப்படி என்றால் மீதி பணிகள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவாயிற்று என்று கவலைப்பட்டீர்களா ? கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டெழுந்த மக்களுக்கு, ப்ரீபெய்டு மின் கட்டண திட்டத்திற்கு அனுமதியளித்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளீர்களே அது நியாயமா? புதுச்சேரியில் ரெஸ்டோ பார்கள், மசாஜ் சென்டர்கள், ஸ்பா போன்றவை மூலம் கலாசாரம், பெண்கள் பாதுகாப்பு சீரழிக்கப்பட்டுள்ளதைப் பற்றி உங்களுக்கு  கவலையில்லையா?

இளைஞர்கள், மாணவர்கள் நாள்தோறும் சீரழிந்து வருவதற்கு காரணமாக இருக்கும் கஞ்சாவை ஒழிக்க உறுதியான நடவடிக்கை உண்டா ? இதையெல்லாம் தாண்டி பெஸ்ட் புதுச்சேரியை ஃபாஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவதாக கூறுகிறீர்களே அதற்கான புதிய முயற்சிகள் உண்டா? 16–வது நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்காமல் அலட்சியமாக இருந்ததால், மிகப்பெரிய நிதி இழப்பையும், பொருளாதார வளர்ச்சியும் தடைபடும் நிலைக்கு புதுச்சேரி மாநிலம் தள்ளப்பட்டுள்ளது பற்றி கவலை இருக்கிறதா?

தமிழிசை சௌந்தரராஜன்

இப்படி எண்ணற்ற சவால்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் நிலையில், இதில் எல்லாம் கவனம் செலுத்தாமல், தமிழ்நாட்டு அரசியலில் தலையை நுழைப்பதற்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது… முதலில் ஆளுநர் என்ற கடமையை ஆற்ற முயலுங்கள். பிறகு அரசியலுக்கு வரலாம். உங்கள் ஆளுநர் பதவியை துறந்துவிட்டு அரசியல் அரங்கிற்கு வந்தால், நாங்களும் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். வரும் தேர்தலிலாவது நீங்கள் டெபாசிட் வாங்குவதை உறுதி செய்ய பாருங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

from Tamilnadu News https://ift.tt/F8VZq37