திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ‘சிப்காட் – மூன்றாவது தொழில் வளாகம்’ அமைப்பதற்காக மேல்மா, நர்மபள்ளம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து 3,174 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை, தமிழக அரசு தீவிரப்படுத்தியது. விளைநிலங்களை அழிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக விவசாயிகள் மேல்மா கிராமத்தில், 125 நாள்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தினர். கடந்த நவம்பர் 4-ம் தேதி காவல்துறை லத்தியோடு களத்தில் இறங்கியது. 54 விவசாயிகள்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதில், 7 விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டடு… வெவ்வேறு சிறைச்சாலைகளிலும் அடைக்கப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகத் தமிழ்நாடே கொந்தளித்ததால், 6 பேர் மீதான குண்டர் சட்டம் உடனடியாக ரத்துசெய்யப்பட்டு, கைதானவர்கள் நிபந்தனை ஜாமீனிலும் விடுதலைச் செய்யப்பட்டனர்.

அருள் ஆறுமுகம் விடுதலை

ஆனாலும், விவசாயிகளுக்கு ஆதரவாக முன்னின்று போராடிய உழவர் உரிமை இயக்கத்தின் தலைவர் அருள் ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புக் காவல் மட்டும் தளர்த்தப்படாமலிருந்தது. பாளையங்கோட்டை சிறையிலேயே அடைக்கப்பட்டிருந்தார். அருள் ஆறுமுகம் மீதான நடவடிக்கையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. கடந்த 4-ம் தேதி நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, அருள் ஆறுமுகம் மீதான குண்டர் சட்ட வழக்கைத் திரும்பப் பெறும் முடிவில் தமிழக அரசு இருப்பதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, மறுநாளே அருள் ஆறுமுகம் மீதான குண்டர் தடுப்புக் காவலை, தமிழக அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், பாளையங்கோட்டை சிறையில் இருந்து அருள் ஆறுமுகம் இன்றைய தினம் விடுதலை ஆனார். விவசாயிகள் அவரை வரவேற்றனர்.

அடுத்தகட்ட நகர்வு குறித்து நம்மிடம் போனில் பேசிய செய்யாறு சிப்காட் எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், ‘‘மிகுந்த மனதைரியத்துடன் வெளியில் வந்திருக்கிறேன். சிறைக்குச் செல்லும் முன்பு எப்படியிருந்தேனோ… அதைவிட பலமடங்கு மக்களுடன் இணைந்துப் போராட்டக்களத்தில் நிற்கப் போகிறேன். சிப்காட் விரிவாக்கத் திட்டத்தையே அரசு கைவிட வேண்டும். எ.வ.வேலு சுயரூபத்தைக் காட்டிவிட்டார். மாவட்ட ஆட்சியரைத் தி.மு.க மாவட்ட துணைச்செயலாளரைப்போல வைத்துக்கொண்டும்… எஸ்.பி-யை கூலிப்படை தலைவராகவும் இயக்கியிருக்கிறார். வேளாண்குடி மக்களை தொடர்ந்து பயமுறுத்தக்கூடிய வேலையை மட்டுமே போலீஸ் செய்துகொண்டிருந்தது. ஏதாவது என்றால்… ஆயிரம் போலீஸாரை ஊருக்குள் இறக்குகிறார்கள். சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்ததே காவல்துறைதான்.

அமைச்சர் எ.வ.வேலு

எங்களால், துளியளவுகூட சமூக அமைதி சீர்குலையவில்லை. பயங்கரவாத இயக்கங்கள்தான் மக்களை பிணைக் கைதிகளாக பிடித்துவைத்துக் கொண்டு கோரிக்கை வைக்கும். அதுபோல, விவசாயிகள்மீது குண்டாஸ் போட்டுவிட்டு வீட்டில் இருக்கிற மனைவி, குழந்தைகளை அழைத்துசென்று காலில் விழ வைத்து, ‘அருள்தான் பண்ண வைத்தார்’ என்றும் அமைச்சர் சொல்ல வைத்திருக்கிறார். ‘சூத்ரதாரி’ அமைச்சர் எ.வ.வேலு மட்டும்தான். சிப்காட் கொண்டுவந்தால், கான்டிராக்ட் பணிகள் கிடைக்கும். அங்கு வரும் கம்பெனிகளால் நன்கொடை கிடைக்கும் என்பதுதான் அவரின் திட்டமும்கூட. எ.வ.வேலுவை விவாதத்துக்கு வரச்சொல்லுங்கள். நான் பேசவில்லை. படிக்காத, இயல்பான பாமர விவசாயி ஒருவரோடு அவர் விவாதம் செய்யட்டும். அவருக்கு விவசாயிகளின் வலித் தெரியாது. என் மீதான குண்டாஸ் உடைந்ததற்கு முதலமைச்சரின் பரிந்துரை என்று சொல்வதே தவறு. நீதிமன்றம் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டதால், நடவடிக்கையை ரத்து செய்திருக்கிறார்கள்’’ என்றார் கொதிப்போடு.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/KUJH1yL