சென்னை மாநகராட்சியின் 51-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் நிரஞ்சனா, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்ததால் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம்-5-க்குட்பட்ட பகுதியின் 51-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் நிரஞ்சனா ஜெகதீசன். இவருடைய கணவர் ஜெகதீசன், தி.மு.க உறுப்பினராகவும், சென்னை வடக்கு மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றச் செயலாளராகவும் இருந்து வந்திருக்கிறார். தனது மனைவி கவுன்சிலரானதிலிருந்தே வார்டுக்குள் ஜெகதீசன், `நான்தான் கவுன்சிலர்’ என்ற ரீதியில் அட்டகாசங்களை செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்.

2022-ல் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்யும் ஜெகதீசன்

அதன் உச்சபட்சமாக கடந்த 2022-ம் ஆண்டு ஜெகதீசன் ராயபுரம் ஜே.பி.கோயில் தெருவில் இரவு நேரத்தில் தனது ஆதரவாளர்களும் நின்று அரட்டை அடித்திருக்கிறார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த காவல்துறையினர், `இந்த நேரத்தில் ஏன் கும்பலாக நிற்கிறீர்கள்?’ என்று கேள்வி கேட்டிருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெகதீசன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து காவல்துறையினரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக வெளியான வீடியோவில், “நான்தான் கவுன்சிலர்… வா மோதிப் பார்த்துக்கலாம்… உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ!” என்று ஜெகதீசன் காவல்துறையினரைப் பார்த்து கேட்டது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கழகக் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக ஜெகதீசனை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தது தி.மு.க தலைமை.

அதன்பிறகும் அடங்காத ஜெகதீசன் கடந்த 2022 டிசம்பரில் வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். இதுதொடர்பாக வியாபாரிகள் காவல்நிலையத்தில் புகாரளிக்க, வியாபாரிகளை மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கில் ஜெகதீசன் கைதுசெய்யப்பட்டு சிறையலடைக்கப்பட்டார். இந்த நிலையில், சமீபத்தில்தான் சிறையிலிருந்து ஜெகதீசன் வெளியில் வந்திருக்கிறார். வந்த உடனே தனது சித்து வேலைகளைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். அதாவது, 51-வது வார்டு உதவி செயல் பொறியாளரையே ஜெகதீசன் தாக்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அதாவது, வண்ணாரப்பேட்டை துணிக்கடைகளில் நன்கொடை வசூலிக்க வேண்டும், அதற்கு ரசீது புக் தயார் செய்து தர வேண்டும் என வார்டு உதவி செயல் பொறியாளரை கேட்டுக்கொண்டாராம். அதற்கு அவர் மறுக்கவே, அவரை தாக்கியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, 51-வது வார்டு கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் தனது மனையின் கவுன்சிலர் பதவியை தான் கையிலெடுத்துக்கொண்டு வரம்பு மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும், இவை எதையும் கவுன்சிலரான நிரஞ்சனா தட்டிக்கேட்காமல், கண்டுகொள்ளாமல் இருக்கிறார் எனவும் கட்சி மேலிடத்துக்கு புகார் சென்றிருக்கிறது.

51-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் நிரஞ்சனா மற்றும் அவருடைய கணவர் ஜெகதீசன்

இந்த நிலையில்தான், கணவர் ஜெகதீசனை கட்சியை விட்டு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்ததைப் போல கவுன்சிலர் நிரஞ்சனாவையும் கட்சியைவிட்டு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்திருக்கிறது தி.மு.க தலைமை. இதுதொடர்பாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த 51-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் நிரஞ்சனா ஜெகதீசன் கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்ததால் தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகாக நீக்கி வைக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/w3OSXYU