உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டுவருகிறது. அதன் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருகிறது.

அயோத்தி செல்லும் மெகா மணி

விழாவில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பட்டன. ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விழாவைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்துவிட்டன. ‘இது ஓர் ஆன்மிக விழா அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதாயம் அடைவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி’ என்பது விழாவைப் புறக்கணிக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சியினர் சொல்லும் காரணம்.

அரசியல் காரணங்களுக்காக அரசியல் தலைவர்கள் விழாவைப் புறக்கணிக்கலாம். ஆனால், ஆன்மிகவாதிகளே விழாவை விமர்சிப்பதும், புறக்கணிப்பதும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜனவரி 22-ம் தேதியன்று, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவிருக்கிறது. அந்தச் சிலையை எடுத்துக்கொடுக்கவிருப்பவர் பிரதமர் மோடி. .

மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி

இந்த விவகாரத்தில் முதலில் கலகக்குரலை எழுப்பியவர், நாட்டின் முக்கிய இந்து மதத் தலைவர்களில் ஒருவரும், ஒடிசாவிலுள்ள பூரி மடத்தின் சங்கராச்சாரியாரான நிச்சலானந்தா சரஸ்வதி. ராமர் சிலையை பிரதமர் மோடி எடுத்துக்கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கும் பூரி சங்கராச்சாரியார், ‘அயோத்தியில் எல்லாவற்றையும் மோடி செய்துவிட்டால், பிறகு மத குருமார்களுக்கு என்ன வேலை?’ என்று கேட்டிருக்கிறார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் நான் பங்கேற்கப்போவதில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்த உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை.

மோடி

பிரதமர் மோடி கருவறையில் இருந்து ராமர் சிலையைத் தொட்டு பிரதிஷ்டை செய்வார். இதில் ஏதோ அரசியல் இருக்கிறது, அதாவது இந்த நிகழ்வுக்கு ஏதோ ஓர் அரசியல் கோணம் கொடுக்கப்படுகிறது. கண்ணியமான முறையில் இந்த நிகழ்வு நடத்தப்பட வேண்டும். நான் அதை எதிர்க்கவும் இல்லை, அதில் கலந்து கொள்ளவும் மாட்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

ராமர் கோயில் முழுமையாகக் கட்டிமுடிக்கப்படாத நிலையிலேயே, அதன் திறப்பு விழாவை நடத்துவதும் ஆன்மிகத் தலைவர்கள் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரகாண்டிலுள்ள ஜோதிஷ் பீடத்தின் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி, ‘ராமர் கோவிலில் ஒரு பகுதியில் மட்டுமே கட்டுமானப் பணிகள் முடிந்திருக்கின்றன. இந்த நிலையில், அங்கு கும்பாபிஷேகம் நடத்துவது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே’ என்று விமர்சித்திருக்கிறார்.

அயோத்தி ராமர் கோயில் (மாதிரி படம்)

மேலும், ‘சாஸ்திரங்களுக்கு எதிராக இந்த விழா நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்க மாட்டேன்’ என்றும் அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி கூறியிருக்கிறார்.

உத்தரகாண்ட் ஜோதிஷ் பீடத்தைச் சேர்ந்த சுவாமி முக்தானந்த், ‘இந்தியாவில் கடந்த 2500 ஆண்டுகளாக தகுதிவாய்ந்த ஆன்மிக மையங்களாக நான்கு சங்கராச்சார்யார்களின் மடங்களும் விளங்கிவருகின்றன. இந்த மடங்களின் தலைவர்களுக்கு, சனாதன தர்மத்தை மீறுபவர்களை எதிர்க்க வேண்டிய கடமை இருக்கிறது. மற்ற சங்கராச்சார்யார்களுடன் கலந்து பேசியிருக்கிறோம். கோவில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெறுவதற்கு முன்பாகவே நடத்தப்படும் திறப்பு விழாவில் பங்கெடுப்பதில் அவர்கள் அனைவருக்கும் விருப்பம் இல்லை’ என்றார்.

அயோத்தி ராமர் கோயில்

இந்த விழாவில் பங்கேற்குமாறு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உட்பட சுமார் 8000 முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுபோக, நாட்டிலேயே மிகப்பெரிய விழாவாக அதை நடத்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன், நாடு முழுவதிலுமிருந்து பல லட்சம் பேரைத் திரட்டிவருவதற்கான வேலைகளும் நடப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் உட்பட ராமர் கோவில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது என்று முடிவெடுத்திருக்கிற அரசியல் கட்சிகள் சொல்லும் அதே காரணங்களைத்தான், ஆன்மிகவாதிகளும் கூறுகிறார்கள். ‘ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு ஓர் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது… வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க ஆதாயமடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது’ என்பதுதான் அவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.

அயோத்தி விமான நிலையம்

விழாவில் பங்கேற்பதில்லை என்று அறிவித்த காங்கிரஸ் கட்சி மீது பாயும் பா.ஜ.க தலைவர்களும், மத்திய அமைச்சர்களும், இந்த ஆன்மிகத் தலைவர்களின் விமர்சனங்களைக் கண்டும் காணாததுபோல இருக்கிறார்கள்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

from Tamilnadu News https://ift.tt/prU4mcg