‘தமிழர் திருநாள்… தமிழக மக்கள் உற்சாகத்தோடு பொங்கி உண்பதற்கு அரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி-சேலை எல்லாவற்றையும் இந்த திராவிட மாடல் அரசு அன்புடன் இலவசமாகவே வாரி வழங்குகிறது. இதற்காக மட்டும் மொத்தம் 865 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1000 ரூபாய் வீதம் வழங்குவதற்கு, சுமார் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது’
-இப்படி பெருமை பொங்க அறிவித்தது தமிழக அரசு. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வழக்கம்போல புன்சிரிப்போடு திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அனைத்து ஊர்களிலும் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு அனைத்தும் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், உண்மை நிலவரம் என்ன?

‘எங்களுக்கு வேட்டி-சேலை தரவில்லை; எங்களுக்கு அரிசி, கரும்பு, சர்க்கரை தரவில்லை; எங்களுக்கு பணம் மட்டும்தான் கொடுத்தார்கள்’ இப்படி தமிழகம் முழுக்கவே பல ஊர்களிலும் குமுறல்குரல்கள் கேட்கின்றன. அதேசமயம், ‘அனைத்துப் பொருள்களும் பணமும் வழங்கப்பட்டுவிட்டது’ என்று வழக்கம்போல ரேஷன் கடைகளில் இருந்து எஸ்.எம்.எஸ் செய்தி 2 கோடியே 20 லட்சம் குடும்பத் தலைவர்களின் செல்போன்களுக்கும் சென்று சேர்ந்துவிட்டது, வழக்கம்போல! மொத்தத்தில் ஊருக்கு குறைந்தபட்சம் 100 பேர்… ‘எங்களுக்குக் கிடைக்கவில்லை’ என்று குமுறுகிறார்கள் சராசரியாக.
தமிழகம் முழுக்க மொத்தம் இரண்டு கோடியே 24 லட்சம் கார்டுகள் உள்ளன. இதில் 2 கோடியே 20 லட்சம் கார்டுகளுக்கும், இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க அரசு உத்தரவிட்டது. இதில் ரொக்கமாக வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் கிட்டத்தட்ட அனைவருக்கும் வழங்கப்பட்டு விட்டது. ஆனால், அரிசி, கரும்பு, சர்க்கரை, வேட்டி மற்றும் சேலை விஷயத்தில்தான் தமிழகம் முழுக்கவே குமுறல்கள்.
அதாவது, இந்த பொருள்களுக்காக 865 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 34 ஆயிரத்து 887 ரேஷன் கடைகள் உள்ளன. கடைக்கு சராசரியாக 650 குடும்ப அட்டைகள் உள்ளன. ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 100 பேர் பொருள்கள் கிடைக்கவில்லை என்கிற குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர். இதை வைத்து ஒரு குட்டிக் கணக்கு போட்டுப் பார்ப்போம். 34,887 (ரேஷன் கடைகள்) x 100 (குடும்ப அட்டைகள்) = 34,88,77. ஆக, தமிழக அளவில் சுமார் 35 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகையுடன் வழங்குவதாகக் கூறப்பட்ட பொருள்கள் கிடைக்கவில்லை.

அரசாங்கம் ஒதுக்கீடு செய்த தொகையில், 1,000 ரூபாய் போக, வேட்டி-சேலை, கரும்பு, சர்க்கரை மற்றும் அரிசி ஆகியவற்றுக்காக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 400 ரூபாய் வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பார்த்தால். 35,00,000×400 ரூபாய் =140 கோடி ரூபாய்.
இது உத்தேசக் கணக்குதான். உண்மையில் ஊருக்கு ஊர் மக்கள் கதறுவதைக் கணக்குப் போட்டுப் பார்த்தால்… கழகக் கதை கந்தல்தான். கடந்த ஆண்டும் இப்படித்தான் பல ஊர்களில் வேட்டி, சேலை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படவில்லை என்று மக்கள் கதறினார்கள். இந்த ஆண்டும் அதே கதறல்தான்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த 2021-ம் ஆண்டு, அரிசி, முந்திரி, ஏலக்காய், திராட்சை என்று கிட்டத்தட்ட பொங்கலுக்குத் தேவையான பொருள்களையெல்லாம் பொங்கல் பரிசாகக் கொடுத்தது. ஆனால், ஏலக்காய் சரியில்லை. அரிசி தரமாக இல்லை, முந்திரிப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இப்படி வகை வகையாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பொருள்களை சப்ளை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் படம் காட்டியது அரசு.

கடந்த கால அ.தி.மு.க ஆட்சியில் சத்துணவுக்காக பொருள்களை சப்ளை செய்தவர்கள் மீது அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த தி.மு.க ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. ஆனால், ஆட்சிக்கு வந்தபிறகு, அப்படி குற்றம்சாட்டப்பட்டவர்களுடனேயே கூட்டுப்போட்டுக் கொண்டு பொங்கல் பரிசு பொருள்களை வாங்கியது. அதில் கமிஷன் புகுந்து விளையாடிதால்தான் தரமற்ற பொருள்களை மக்கள் தலையில் கட்ட வேண்டிய நிர்ப்பந்தம். இதனால், தி.மு.க அரசு கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது. இப்போது, பொருள்களை கொடுக்காமலேயே கொடுத்தது போல எஸ்.எம்.எஸ் அனுப்பி கொள்ளையடித்துள்ளனர்.
பொங்கல் பரிசில் மட்டுமே சுமார் 140 கோடி ரூபாய் கொள்ளை போயிருக்கிறது. பல ஊர்களில் மக்கள் வாய் திறந்துபேசவே தயங்கும் நிலைதான் இருக்கிறது. காரணம்… ‘அதான் 1000 ரூபாய் கொடுத்துட்டாங்கள்ல… அரிசி கரும்புதானே… விட்டுத்தள்ளுவோம்’; ‘அட அந்த வேட்டி-சேலை வந்துதான் பொங்க வைக்கணுமா… 1,000 ரூபாய் கொடுத்துட்டாங்கள்ல… அதுபோதாதா?’ இப்படி மக்கள் தங்களுக்குத் தாங்களே சமாதானம் செய்துகொள்வதும். சில ஊர்களில் தி.மு.க புள்ளிகளுக்குப் பயந்துகொண்டும் வாயை மூடிக் கொண்டுவிட்டனர்.

வழக்கமாக ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கப் போனால், நாம் அரிசி மட்டும்தான் வாங்கியிருப்போம். ஆனால், புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு, சர்க்கரை அனைத்தும் வாங்கிவிட்டதாக எஸ்.எம்.எஸ் வரும். பெரும்பாலும் கண்டுகொள்ளாமலே கடந்துவிடுவோம். அது மொத்தமும் ரேஷன் கடையிலிருக்கும் ஊழியர் தொடங்கி, உயரதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வரை பங்கு போடப்பட்டுவிடும். அதே ஸ்டைலில்தான் தற்போதும் இந்த 140 கோடி ரூபாய் பங்குபோடப்பட்டிருக்கிறது. நம்முடைய பணம் நம் கண்முன்பாகவே கொள்ளையடிக்கப்படுகிறது. அப்படியிருந்தும் கையறு நிலையில்தான் இருக்கிறோம்.
சில ஊர்களில் மக்கள் போராட்டம் நடத்தி, அதிகாரிகளிடம் பேசியெல்லாம் பார்த்த சூழலில், கிடைத்த பதில் என்ன தெரியுமா? ‘சப்ளை இல்ல… அரசாங்கத்துக்கிட்ட இருந்து வந்ததே இவ்வளவுதான். வேட்டி-சேலை இன்னும் நெய்யவே இல்லையாம். பொங்கல் முடிஞ்சதும் வந்து வாங்கிக்கோங்க… பிரச்னை பண்ணாதீங்க’ என்கிற பதில்தான்.

பொருள்களையெல்லாம் கொடுத்துவிட்டதாக கைரேகை பெற்றுக்கொண்டு, எஸ்.எம்.எஸ்ஸையும் அனுப்பிவிட்டு, ‘பொங்கல் முடிந்தபிறகு வாங்கிக் கொள்ளுங்கள்’ என்று சொல்வதற்கு தனி தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்காகவே நிறைய செலவு செய்யவேண்டும். அதையெல்லாம் கணக்கிட்டு பார்த்தால்… இந்த 140 கோடி ரூபாய் என்பது வெறும் சைடிஷ்தான்!
– லெவின்
from Tamilnadu News https://ift.tt/3zcL4bP
