ஜெயலலிதா பேரவை சார்பில், பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு வாடிப்பட்டி அருகே கடந்த 14 ஆம் தேதி முதல் அன்னதானம் வழங்கி வரும் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, “அ.தி.மு.க பலவீனமாக இருப்பது தமிழகத்திற்கு நல்லதல்ல என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை. ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதுபோல உள்ளது.

எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை ஆரம்பித்து, உங்கள் தாத்தாவை 11 ஆண்டு காலம் வனவாசம் போகச்செய்தார். அ.தி.மு.க-வின் 50 ஆண்டுகால வரலாற்றில், 31 ஆண்டுகள் நன்மதிப்பை பெற்று ஆட்சி பீடத்தில் இருந்தது.
குறிப்பாக, தி.மு.க ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையை அ.தி.மு.க உருவாக்கியது. 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க எதிர்க்கட்சியாக வர முடியவில்லை, இன்று இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக ஜெயலலிதா உருவாக்கினார். 234 தொகுதிகளிலும் தனியாக நின்று அ.தி.மு.க வரலாற்றுச் சாதனை படைத்தது.

உதயநிதி ஸ்டாலின் வாய்க் கொழுப்பாக பேசுவது வாடிக்கையாக உள்ளது. தமிழ் மண்ணுற்கு கிள்ளி கொடுக்கும் அளவுக்கு கூட சேவை செய்யவில்லை, மாறாக மண் அள்ளித்தான் போடுகிறீர்கள்.
அ.தி.மு.க பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், இரண்டு கோடியே 18 லட்சம் உறுப்பினர்களுடன் அ.தி.மு.க-வை தமிழகத்தில் முதலிடத்தில் வலுவாக வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
தமிழகம் முழுவதும் 68,000 மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வலிமையான பூத்துக்களை அ.தி.மு.க அமைத்துள்ளது. மதுரையில் எடப்பாடியார் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் 15 லட்சம் மக்கள் பங்கேற்றனர் என்பதை உதயநிதி புரிந்துகொள்ள வேண்டும்.
தி.மு.க இளைஞரணி மாநாட்டை உலக சாதனை படைக்கும் என்று மூத்த அமைச்சர் நேரு கூறுகிறார். ஜனநாயகத்தை பின்னுக்கு தள்ளி குடும்ப வாரிசு அரசியலில்தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.
52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, 2000 அம்மா மினி கிளினிக், 13 லட்சம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள்-ஆடுகள் திட்டம், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் வேலை வாய்ப்பு என இது போன்ற திட்டங்கள் மூலம் ஜெயலலிதாவும், எடப்பாடி பழனிசாமியும் உலக சாதனை படைத்தார்கள். ஆனால் இன்றைக்கு மடிக்கணினி, அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை எல்லாம் ரத்து செய்து தான் தி.மு.க உலக சாதனை படைத்துள்ளது.

ஸ்டாலின் நடத்திய உலக முதலீட்டார்கள் மாநாடு ஒரு நாடகம்தான். உலக முதலீட்டார்கள் மாநாடு குறித்து எடப்பாடி பழனிசாமி வெள்ளை அறிக்கை கேட்டும் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.
தி.மு.க இளைஞரணி மாநாட்டில் தமிழக உரிமைகளை மீட்கும் மாநாடாக இருக்கும் என ஸ்டாலின் கூறுகிறார். காவிரி, கச்சத்தீவு உரிமைகளை காவு கொடுத்தது யார்? .அதேபோல் முள்ளிவாய்க்காலில் 3 லட்சம் மக்கள் படுகொலைக்கு யார் காரணம் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கால் வலி காரணமாக பங்கேற்க முடியவில்லை என்று எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக கூறுகிறார். இது என்ன தேச குற்றமா? ஆனால், இதை கொச்சைப்படுத்தும் வகையில், நாவடக்கம் இல்லாமல் உதயநிதி பேசியுள்ளார். இதை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். எங்களுக்கும் பேசத் தெரியும், ஆனால் மக்கள் முகம் சுழிப்பார்கள் என்று அடக்கத்துடன் உள்ளோம். தொண்டர்கள் எல்லாம் கொதித்து போய் உள்ளனர். ஸ்டாலின், உதயநிதிக்கு முறையாக பயிற்சி கொடுத்தாரா? என்று தெரியவில்லை. இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
from Tamilnadu News https://ift.tt/7Il2B6r
