மியான்மரில் கிளர்ச்சிப் படைகளுக்கும் ராணுவ படையினருக்கும் இடையே மோதல் தொடங்கிய நிலையில், நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து, தஞ்சமடைந்திருக்கின்றனர். இதனால் மிசோரம் அரசு, `அண்டை நாட்டிலிருந்து நுழையும் வீரர்களை உடனே திருப்பி அனுப்பி வைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்!’ என மத்திய அரசை வலியுறுத்தியிருக்கிறது.
நிகழ்ந்து வரும் கடுமையான மோதல்களுக்கு மத்தியில், மியான்மர் ராணுவ வீரர்கள் 600 பேர் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். மேற்கு மியான்மர் மாநிலமான ரக்கைனில் உள்ள இன ஆயுதக் குழுவான அரக்கான் படை போராளிகளால் ராணுவ படையின் முகாம்கள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர்கள் மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், அவர்கள் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, ஷில்லாங்கில் நடைபெற்ற வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் மிசோரம் முதல்வர் லால்துஹோமா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் இடையே அவசர பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ள மியான்மர் ராணுவ வீரர்களை விரைவாகத் திருப்பி அனுப்ப வேண்டியதன் அவசியத்தை, மிசோரம் வலியுறுத்தியதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிகரித்து வரும் பதற்றம், அது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மிசோரம் முதல்வர் லால்துஹோமா, “மியன்மரிலிருந்து மக்கள் அடைக்கலத்திற்காக எங்கள் நாட்டிற்குள் தப்பி வருகிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் உதவி செய்கிறோம். மியான்மர் வீரர்கள் அடைக்கலம் தேடித் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள். முன்னதாக நாங்கள் அவர்களை விமானம் மூலம் திருப்பி அனுப்பினோம். சுமார் 450 ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், மூன்று சிறுபான்மைப் இன படைகள் ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடங்கி, சில நகரங்களையும் ராணுவ நிலைகளையும் கைப்பற்றி, சிப்பாய்களைத் தப்பி ஓடச் செய்த பின்னர், 2021 ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மியன்மாரின் ஜெனரல்கள் மிகப்பெரிய சோதனையை தற்போது எதிர்கொள்கின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/WsLRFjM
