போயஸ் கார்டன்… இந்தப் பெயரைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல… இந்திய அரசியலைக்கூட முழுமையாக எழுதிவிட முடியாது. திமுக-வினருக்கு கோபாலப்புரத்திலுள்ள கலைஞர் கருணாநிதி வீடுபோல, அதிமுக-வினருக்குக் கோயில் ‘போயஸ் கார்டன் வேதா இல்லம்தான்.

வேதா இல்லம்

ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர் பட்டாளம் அங்கு குடியிருந்தாலும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அங்கு இருப்பதாலேயே போயஸ் கார்டன் பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டது. அந்த வேதா இல்லத்தில் ஜெயலலிதாவுடன் சுமார் 30 ஆண்டுகள் தங்கிருந்த சசிகலா, அவர் மறைவுக்குப் பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்றபோது, கடைசியாக போயஸ் கார்டனிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் அ.தி.மு.க-வின் அதிகாரம் மிக்க இடத்துக்கு வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, சசிகலாவை முற்றிலுமாகக் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தியது.

அதேபோல, சிறையிலிருந்து வெளியே வந்தாலும், சசிகலாவின் கைகளுக்கு வேதா இல்லம் போய்விடக் கூடாது என்பதற்காக, அதை அரசுடைமையாக்கியது அப்போதைய அதிமுக அரசு. தண்டனைக் காலம் முடிந்த பின்னர் வெளியே வந்த சசிகலா, போயஸ் கார்டனுக்குச் செல்ல முடியாத நிலையில் தி.நகரில் அபிபுல்லா சாலையிலுள்ள தன் உறவினர் இல்லத்தில் இரண்டு ஆண்டுகளாகத் தங்கியிருந்தார். இதற்கிடையே நீதிமன்றத்தின் வாயிலாக, வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும் தீபக்கும் பெற்றனர். தற்போது அவர்கள்தான் அங்கு வசித்துவருகிறார்கள்.

சசிகலா

இந்த நிலையில்தான் பல ஆண்டுகள் கழித்து போயஸ் கார்டனுக்குச் சென்றார் சசிகலா. ஆனால், இந்த முறை அங்கு சசிகலா சென்றது, தான் புதிதாகக் கட்டியிருக்கும் தனது சொந்த வீட்டுக்கு. வேதா இல்லத்தின் எதிரே இரண்டு மாடிகொண்ட பிரமாண்ட மாளிகையைக் கட்டி முடித்து, அங்கு கிரகப்பிரவேசம் செய்து குடியேறியிருக்கிறார் சசிகலா.

இது தொடர்பாக சசிகலாவுக்கு நெருக்கமான சிலரிடம் பேசினோம். “அம்மா மறைவுக்கு பிறகு சின்னம்மா சசிகலாவால் வேதா இல்லத்துக்குச் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. வேதா இல்லம் அரசு உடைமையாக்கப்பட்டபோது, சிறையில் இருந்த அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாவுக்குப் பிறகு அது தனக்கானது என்று நம்பிக்கொண்டிருந்த சின்னம்மாவுக்கு அந்தச் செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தது.

அதைத் தடுத்து நிறுத்த தினகரன் உள்ளிட்ட அவரின் உறவினர்கள் மூலமாக முயன்றார். ஆனால், தினகரன் உள்ளிட்ட யாருமே வேதா இல்லத்தைக் கைப்பற்றும் அளவுக்கு சசிகலாவுக்கு உதவவில்லை. இனி வேதா இல்லத்துக்குச் செல்லவே முடியாது என்ற நிலையில்தான், சிறையில் இருக்கும்போதே போயஸ் கார்டனிலேயே புதிய வீடுகட்ட முடிவுசெய்தார் சசிகலா. அதன்படிதான், வேதா இல்லத்துக்கான கார் பார்க்கிங்குக்காகப் பயன்படுத்தப்படும் தனது பெயரிலுள்ள இடத்தில் வீடுகட்ட முடிவானது. 2020 வாக்கில் அவர் சிறையில் இருக்கும்போதே பூமி பூஜையும் போடப்பட்டது.

சசிகலா வீட்டு கிரகப்பிரவேசம்

முன்னர், வேதா இல்லத்தில் சில மாறுதல்களைச் செய்ய வேண்டுமென்று அம்மா விரும்பியிருக்கிறார். அப்படி, அவர் விரும்பிய வடிவில்தான் இந்தப் புதிய இல்லம் கட்டப்பட்டது. வீடு எப்படி இருக்க வேண்டுமென்று டிசைன்களையும் சசிகலாதான் தேர்வுசெய்தார். இரண்டு மாடி வீட்டில், வேதா இல்லத்தைப்போலவே பால்கனி அமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய அளவில் ஹால், மீட்டிங் ஹால், அலுவலகம் என வேதா இல்லம்போலவே உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிறையிலிருந்து வெளியே வந்தபோது, வீட்டில் பணிகளைப் பார்வையிட அவரின் உறவினர்கள் அழைப்பு கொடுத்தபோதுகூட, ‘ அம்மாவோடு போயஸில் இருந்தவள் நான். அம்மாவே ‘இது உன் வீடு’ என்றுதான் சொல்லுவார். அப்படிப்பட்ட நான், சொந்த வீடு இல்லாமல் போயஸுக்கு வர மாட்டேன் என்று சிறையில் இருக்கும்போது முடிவு செய்தேன். புதிய வீடு கட்டும் பணி நிறைவடைந்து கிரகப்பிரவேசத்துக்குத்தான் இனி போயஸுக்கு வருவேன்’ என்று உறுதியாக இருந்தார். அதன்படி, 24-ம் தேதி கிரகப்பிரவேசம் நடந்திருக்கிறது. அம்மாவைப்போல சின்னம்மாவும் போயஸ் கார்டனிலிருந்து அரசியல் செய்வார்” என்றனர் விரிவாக.

“அம்மாவால்தான் போயஸ் கார்டன், அரசியலின் மையப்புள்ளியாக இருந்ததே தவிர, போயஸ் கார்டனால் அம்மா இல்லை” என்கிறது அதிமுக தரப்பு.

வேதா நினைவு இல்லம் திறப்பு விழா

தொடர்ந்து பேசியவர்கள் “தற்போது போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் தீபாதான் இருக்கிறார். ஆனால், தீபாவால் அரசியலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. தற்போது போயஸ் கார்டனிலிருந்து அம்மாவைப்போல அரசியல் செய்யலாம் என்று புது வீடுகட்டிக் கிளம்பியிருக்கிறார் சசிகலா. அம்மாவின் அரசியல் அவர் இருந்த வீட்டிலோ, போயஸ் கார்டனிலோ இல்லை.

வேதா இல்லத்தில் தீபா

அம்மாவின் துணிச்சல், திறமைதான் அவரின் அரசியலுக்கே அஸ்திவாரம். போயஸ் கார்டனில் குடியேறினால் அம்மாவாக ஆகிவிட முடியாது. அம்மா இருந்த இடத்திலிருந்து அரசியல் செய்ய வேண்டும் என்பது சசிகலாவின் பலநாள் பகல் கனவு. அதை இது போன்று புது வீடுகட்டி நிறைவேற்றப் பார்க்கிறார். அவ்வளவுதான்” என்கிறார்கள்!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

from Tamilnadu News https://ift.tt/X60nPNT