பண மோசடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை, `பா.ஜ.க-வின் எத்தேசத்திகரா போக்கு, அரசியல் பழிவாங்கல்’ என தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து, பா.ஜ.க-வுக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பா.ஜ.க-வுக்கு எதிராக, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கோயம்புத்தூரில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்திவருகின்றன. இதில், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய ஆ.ராசா, “செந்தில் பாலாஜியைக் கைதுசெய்துவிட்டால், கொங்கு மண்டலத்தில் தாமரை மலர்ந்துவிடும் என நினைக்கிறார்கள். அடுத்தாண்டு கலைஞர் நூற்றாண்டு விழாவை கோவையில் நடத்துவோம். அப்போது பிரதமர், முதல்வர் எல்லாம் கலந்துகொண்டு ‘கலைஞர் வாழ்க’ எனச் சொல்வார்கள். அப்போது மோடி, அமித் ஷா இந்தியாவில் இருக்கமாட்டார்கள்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பா.ஜ.க-வைச் சாடிய திருமாவளவன், “அவர்களின் இலக்கு செந்தில் பாலாஜி இல்லை. அவர்களின் இலக்கு முதல்வர் ஸ்டாலின். அகில இந்திய தலைவர்கள் ஒருங்கிணைவதை முறியடிக்கும் முயற்சியாக அவருக்கு குறிவைத்திருக்கின்றனர். இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்திதான் என ஸ்டாலின் முதன் முதலாகக் கூறினார். அதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் மோடியை தூக்கி வீசிவிடுவார்கள் என அவர்கள் யூகிக்கிறார்கள். பா.ஜ.க-வை வீழ்த்துவதுதான் முதல் இலக்கு என்று பேசும் இந்தியாவின் ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். அதனால்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி அவ்வப்போது அரசியல் நெருக்கடி கொடுக்கிறார். அது ஆளுநர் மாளிகையா… ஆர்.எஸ்.எஸ் மாளிகையா எனத் தெரியவில்லை.

ஸ்டாலின் பின்வாங்கவில்லை. திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார். முதல்வரின் முழுமையான ஆற்றல் பா.ஜ.க-வினருக்குத் தெரியவில்லை. அவருக்கு உற்ற துணையாக இருப்பதால் செந்தில் பாலாஜியைக் குறிவைத்திருக்கின்றனர். மேற்கு மாவட்டத்தில் செந்தில் பாலாஜி இருக்கும்வரை, பா.ஜ.க-வால் வாலாட்ட முடியாது எனத் தெரிந்துகொண்டு இப்படிச் செய்கிறார்கள். சிதறிக் கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது அவர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இது செந்தில் பாலாஜிக்கு வைக்கப்பட்ட செக் அல்ல. முதல்வர் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட செக். அண்ணன் (ஸ்டாலின்) அவர்களே துணிந்து முன்னேறுங்கள். உங்களுக்குத் துணையாக நாங்கள் இருப்போம்” என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசுகையில், “அண்ணாமலையே போலீஸ் புத்தியுடன் நடந்துகொள்ள வேண்டாம். தமிழக மக்களுக்கு என்று ஒரு பொது புத்தி இருக்கிறது. தி.மு.க தலைவரின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு அமைதியாக இருக்கிறோம். இதே பழைய தி.மு.க-வாக இருந்திருந்தால், அண்ணாமலை இப்படி பேச முடியுமா… தொண்டர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தளபதி வாய்பூட்டு போட்டிருக்கிறார். தி.மு.க மாநில சுயாட்சிக்கான இயக்கம். வடநாட்டு கும்பல்களே… அண்ணாமலை கும்பல்களே… அதிகாரம் இருக்கிறது என்பதற்காக ஆட்டம் போடதே. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்” என்றார்.

மேலும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன் பேசுகையில், “கரூரில் வருமான வரித்துறை ரெய்டின்போது நடந்த சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மின்சாரம் தடைபட்டதற்கு செந்தில் பாலாஜி எப்படி பொறுப்பாக முடியும். வழக்கை வைத்து செந்தில் பாலாஜியை மிரட்டியிருக்கின்றனர். வழக்கைச் சந்திக்கத் தயார் என செந்தில் பாலாஜி கூறியதுதான் இவர்களுக்கு இவ்வளவு கோபம்.
உள்ளாட்சித் தேர்தலின்போது கொங்கு மண்டலத்தில் நாம் அதிகம் வெற்றி பெற்றோம். கோவையில் 100 சதவிகிதம் வெற்றி பெற்றோம். அதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மற்ற மாநிலங்களில் நடந்தது இங்கு நடக்காது. இந்த செயல்களால் பா.ஜ.க-வே, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்திருக்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய பிரதமர்தான் டெல்லியில் பதவியேற்பார்” என்று கூறினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “எங்கெல்லாம் ஊழல் என்று சொல்லி ரெய்டுகளை ஏவிவிடுகிறார்களோ, அங்கெல்லாம் பா.ஜ.க தோல்வியடையும். அதற்கு கர்நாடகாதான் உதராணம். காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமாரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற சிவக்குமார் முக்கிய காரணம். சிவக்குமாரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க டெபாசிட்கூட பெறவில்லை. அதுதான் இங்கேயும் நடக்கும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/O6TjRha
