மகாராஷ்டிராவில் சிவசேனா இரண்டாகப் பிரிந்த பிறகு உத்தவ் தாக்கரேயிடம் இருக்கும் நிர்வாகிகளை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவினர் மிரட்டி தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்படி இருந்தும் இதுவரை மும்பை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் 12 பேரை மட்டுமே ஷிண்டே தரப்பினரால் தங்கள் வசம் இழுக்க முடிந்திருக்கிறது.
அதோடு மாநிலம் முழுவதும் ஆங்காங்கே இரண்டு கட்சி நிர்வாகிகளும் மோதிக்கொள்கின்றனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவில் சோஷியல் மீடியா ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் அயோத்தியா பால். இவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மும்பை அருகிலுள்ள கல்வாவுக்குச் சென்றார். அவரை சூழ்ந்து கொண்ட மர்ம நபர்கள் அவர் மீது மையை தெளித்தனர். அதோடு விடாமல் அவரை அடித்து உதைத்திருக்கின்றனர்.

முகத்தில் தெளிக்கப்பட்ட மையோடு அயோத்தியாவின் புகைப்படத்தை சாம்னா (Saamana) பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. அயோத்தியா மீது மை தெளிக்கப்பட்டதோடு, அவரைத் தாக்கியும் இருக்கின்றனர் என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அயோத்தியா பாலை நிகழ்ச்சி ஒன்றுக்கு திட்டமிட்டு வரவழைத்து, தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அயோத்தியா பால் தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்துவிட்டு வெளியில் வந்த போது மீண்டும் சில பெண்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்றும், போலியான நிகழ்ச்சிக்கு வரவழைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். இது குறித்து மற்றொரு தரப்பினர், “நிகழ்ச்சியில் அயோத்தியா பால் ஒவ்வொரு தலைவர் படத்திற்கும் மாலை போட்டு விட்டு கடைசியாக பாபாசாஹேப் அம்பேத்கர் படத்திற்கு மாலையிட்டதாக கூறி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் அயோத்தியாவை திட்டமிட்டு வரவழைத்து தாக்கி இருப்பதாக உள்ளூர் சிவசேனா (உத்தவ்) நிர்வாகிகள் தெரிவித்தனர். கல்வா பகுதி முதல்வர் ஷிண்டேயிக்கு செல்வாக்குள்ள பகுதியாகும். எனவே ஷிண்டே ஆதரவாளர்கள் இத்தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம்” என்று கூறுகின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/uBVYREg
