சென்னை க்ரீன்வேஸ் சாலையில் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜூன் 13-ம் தேதி சோதனை நடத்த தொடங்கினர். அப்போது தொடங்கிய பரபரப்பு தமிழ்நாடு அரசியலையே தொடர்ந்து அதிரடித்துக் கொண்டிருக்கிறது. அமைச்சரைக் கைது செய்வதாக அமலாக்கத்துறையினர் தகவல் சொன்ன பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரத்த நாளங்களில் மூன்று அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியானது. பின் நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தற்போது சிகிச்சையில் இருக்கிறார்.

இதற்கிடையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தரப்பு மனு தாக்கல் செய்யவே, கஸ்டடியில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்தது அமலாக்கத்துறை. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் மனுவை நிராகரித்து, 8 நாள்கள் அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து செந்தில் பாலாஜியை விசாரிக்க அனுமதி வழங்கியிருக்கிறது.

செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது

ஜூன் 16-ஆம் தேதி வழக்கு விசாரணையில், அடுத்த 8 நாள்களுக்கு கஸ்டடியில் செந்தில் பாலாஜியை எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. மூன்று நாள்கள் கடந்த நிலையில், இதுவரை விசாரணை தொடங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மொத்தம் 8 நாள்கள்தான் கஸ்டடிக்கு அனுமதி என்றே நிலையில் ஏன் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை… வாதாடிப் போராடி வாங்கப்பட்ட கஸ்டடிக்கான அனுமதியை ஏன் அமலாக்கத்துறை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஜெகதீஸ்வரன் “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு பின் பரிசோதனையில் மூன்று அடைப்புகள் ஏற்பட்டதாக ஓமந்தூரார் மருத்துவமனையின் அறிக்கை சொல்கிறது. மேலும் விரைந்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப் பரிந்துரைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்நிலையில் அமலாக்கத்துறையினர் அவரை விசாரித்தால் கூடுதல் அழுத்தம் ஏற்படலாம். இதனால் உடல்நிலை மேலும் பாதிக்கக்கூடும். கஸ்டடியில் எடுப்பது செந்தில் பாலாஜிக்கு பெரும் கஸ்டத்தை கொடுக்கும், விசாரணை தொடங்காமல் இருக்க அவரது உடல்நிலையே காரணமாக இருக்கலாம்” என்கிறார் அவர்.

செந்தில் பாலாஜி – காவேரி மருத்துவமனை

அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, `முதலில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து இவர்கள் சொல்லும் தகவல்களில் ஆயிரம் சந்தேகங்கள் இருக்கின்றன. ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவின்றி இருப்பதாகவும், மற்றொருவர் நலமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். முதல்வர் பார்க்க வந்தவுடன் எழுந்து அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். எது உண்மை… முதல்வர் வரும்போது அமர்ந்து பேச முடியும் என்றால் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்து கேட்டாலும் அவரால் பேச இயலும் என்றுதானே அர்த்தம்.

செந்தில் பாலாஜி – அமலாக்கத்துறை

ஆனால் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் விசாரிக்கவிடாமல் காலம் தாழ்த்துவதே அவர்களின் திட்டம். அதற்காகவே காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை விசாரிக்க வரும்போதெல்லாம் எனக்கு அசௌகரியமாக இருக்கிறது என்பார்கள். உடல்நலன் சார்ந்த விஷயம் என்பதால், மருத்துவர்களும் ஓய்வு தேவை என்று தான் சொல்வார்கள்

பின் எப்படி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள முடியும். எய்ம்ஸ் மருத்துவர்கள் வரவேண்டும், அவர்கள் மீண்டும் செந்தில் பாலாஜியை பரிசோதிக்க வேண்டும். இல்லையெனில் அமலாக்கத்துறை விசாரிப்பதே கடினம்’ என்கிறார்கள்

அறுவை சிகிச்சை

`அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 21-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அறுவை சிகிச்சைக்கு முன்பு விசாரிப்பதும் அறுவை சிகிச்சைக்குப் பின்பு விசாரிப்பதும் எளிதான காரியமல்ல. மருத்துவர்களும் விசாரிக்க உகந்த நேரம் அல்ல என்பதையே வலியுறுத்துவார்கள்.

ஆகவே நீதிமன்றம் அனுமதியளித்துவிட்டாலும் உடல்நிலை ஒத்துழைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அமலாக்கத்துறை அதிகாரிகளை பொறுத்தவரை எய்ம்ஸ் மருத்துவர்களின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அதனை பொறுத்தே அடுத்த நடவடிக்கை எடுக்க முன்வருவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகை தாமதப்படுவதற்கான காரணமும் சரிவர தெரியவில்லை. நீதிமன்றம் அனுமதியளித்துள்ள 8 நாள்களில் அமலாக்கத்துறையினரின் விசாரணைக்கு வாய்ப்புகள் மிக மிகக் குறைவு’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

செந்தில் பாலாஜி

இதனிடையே, செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மனுவை நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்.!

from Tamilnadu News https://ift.tt/xQUvzjR