மத்தியில் கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க-வின் ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டுக்குள் முடிவடையவிருக்கிறது. ஏற்கெனவே இந்த ஒன்பது ஆண்டுகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கி, மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் பா.ஜ.க, ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் போன்றவற்றை அமல்படுத்த தீவிரம் காட்டிவருகிறது.

பொது சிவில் சட்டம்

அதற்கேற்றாற்போல பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும், தங்கள் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைத்துவருகின்றனர். கடந்த வாரம்கூட, நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவதற்குப் பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம் என்று 22-வது சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், பா.ஜ.க ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, பொது சிவில் சட்டம் அனைவருக்கும் பலனளிக்கும் என்றும், அனைத்து மாநிலங்களும் அதை அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்து இன்று பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “நாட்டுக்குப் பொது சிவில் சட்டம் தேவை. அதை அமல்படுத்த வேண்டும் என்பதே நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. 2022-ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த பிறகு பொது சிவில் சட்டம் அமல்படுத்த குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ஆட்சியமைத்தவுடன் முதலில் பொது சிவில் சட்டத்துக்கு குழு அமைக்கப்பட்டது.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

பொது சிவில் சட்டம் இன்று நாடு முழுவதும் விவாதிக்கப்படுகிறது. சிலர் அதை எதிர்க்கின்றனர். ஆனால், பொது சிவில் சட்டம் அனைவருக்கும் பலனளிக்கும். எனவே, அனைத்து மாநிலங்களும் அதை அமல்படுத்த வேண்டும்” என்றார்.

இதற்கு முன்கூட கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில், உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தின் வரைவு தொடர்பான 90 சதவிகிதப் பணிகளைக் குழு முடித்துவிட்டதாக முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamilnadu News https://ift.tt/Txbl6k5