தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று சமீபத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பினை தமிழக அரசு வழக்கறிஞர்கள் மூலம் வாதாடி பெற்றுக் கொடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்து ஜல்லிக்கட்டு அமைப்புகளின் சார்பில் நன்றி தெரிவிப்பு கூட்டம் புதுக்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், ஜல்லிக்கட்டு பேரவையின் நிறுவனத் தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, ஜல்லிக்கட்டு அமைப்பினர் காளை உருவம் பொறித்த சிலையினை வழங்கினர். தொடர்ந்து உதயநிதி பேசும்போது, “ஜல்லிக்கட்டு நடக்கக்கூடாது என்று ஒரு கும்பல் பல இடையூறுகளை ஏற்படுத்தியது. தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதற்கு நீங்கள் நடத்திய போராட்டம் தான் காரணம் என்பதை அனைவரும் அறிவார்கள்.
தமிழகத்தில் அரசியல் ஜல்லிக்கட்டை பாசிச கட்சி துவங்கியிருக்கிறது. அந்த ஆட்டத்தைக் கூட அவர்களால் நேர்மையாக ஆட முடியவில்லை. ஜல்லிக்கட்டை பொருத்தவரை வாடிவாசல் வழியாகத் தான் காளைகள் வரும். ஆனால், பாசிச கட்சி புறவாசல் வழியாக வர பார்க்கின்றனர். அவர்களை தமிழக மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கான வெற்றி மக்களுக்கான வெற்றி. தமிழக மக்களின் ஒற்றுமை உணர்வுதான், ஒன்றிய அரசால் மூடப்பட்ட ஜல்லிக்கட்டு வாடிவாசலை திறக்க செய்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதே அ.தி.மு.க ஆட்சியில் தான். டிசம்பரில் 5 பேர் ஆரம்பித்த போராட்டம், ஜனவரியில் உலகம் முழுவதும் பெரும் போராட்டமாக மாறியது. போரட்டக்காரர்களை அழைத்து தீர்வு காண அ.தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது அ.தி.மு.க அரசு. ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, எந்த போராட்டத்தையும் முறையாக கையாளவில்லை. அ.தி.மு.க ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒடுக்க நினைத்த போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே முழு ஆதரவைக் கொடுத்தவர் தான் நமது முதலமைச்சர்.
ஜெயலலிதா அம்மையாரின் மறைவுக்கு பிறகு தமிழகத்திற்கு எப்படியாவது கால் ஊன்ற தீவிரமாக பா.ஜ.க முயற்சி செய்தி கொண்டிருக்கிறது. குறிப்பாக, அ.தி.மு.க என்ற கட்சியையே பா.ஜ.கவின் கிளை கழகம் போல பா.ஜ.க பாவித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க இல்லையென்றால், தமிழகத்தை எளிதாக அபகரித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

தி.மு.க என்ற இயக்கம் பல லட்சம் தொண்டர்களுடைய ரத்தத்தால், வியர்வையால் உருவான இயக்கம். மத்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளைக் கண்டு தி.மு.க என்றைக்குமே பயப்படாது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அடுத்த ஜல்லிக்கட்டினை புதிய ஸ்டேடியத்தில் முதலமைச்சர் திறந்து வைப்பார். பா.ஜ.க-வின் தொண்டர்படை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ தான். 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சி அமைந்த பிறகு அமலாக்கத்துறை 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது.115 பேர் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியை பாத்ரூம் கூட செல்ல விடாமல் 18 மணி நேர விசாரணை நடத்தியுள்ளனர்.
மோடி நெருக்கமாக இருக்கும் அதானி குறுகிய காலத்தில் பெரிதாக வளர்ந்துவிட்டார். ஆனால், அமலாக்கத்துறை அதானியிடம் விசாரணை நடத்தவில்லை. மோடிக்கும் பயப்பட மாட்டோம். இ.டிக்கும் (அமலாக்கத்துறை)பயப்பட மாட்டோம். எத்தனை மோடிகள், எத்தனை அமித்ஷா-கள், எத்தனை ஜி-க்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது. முதலமைச்சர் சொல்லுகின்ற இடத்தில் கவர்னர் கையெழுத்திட வேண்டும். கவர்னர் மத்திய அரசின் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் அவ்வளவு தான்.

21 கோப்புகளில் கவர்னர் கையெழுத்திடாமல் உள்ளார். இதில், முக்கியமானது அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் ஊழல் சம்மந்தமானது. முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சோதனை நடத்தினார்களே., எத்தனை பேரை கைது செய்தார்கள். கூட்டணி என்பதால், அனைத்தையும் மறந்துவிட்டார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் பா.ஜ.கவை ஓட,ஓட விரட்டினீர்கள். இதேபோல், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும்” என்றார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, ரகுபதி, மெய்யநாதன், மூர்த்தி, பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
from Tamilnadu News https://ift.tt/vRsLkQP
