ராமநாதபுரத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சி முன்கூட்டியே தொடங்கப்பட்டது குறித்து, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் எம்.பி நவாஸ்கனிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டது. பொதுமக்கள் முன்னிலையில், இருவரும் மாறிமாறி ஒருமையில் திட்டிக்கொண்டனர். இந்த அசாதாரண சூழலில், இருவரையும் சமாதானம் செய்யமுயன்ற மாவட்ட ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்டதாக நவாஸ்கனியின் உதவியாளர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த நிலையில், விவகாரத்தின் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகிகள், ‘‘ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும், மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்துக்கும் இடையே உட்கட்சிப்பூசல் இருந்து வருவது கட்சித் தலைமை வரை தெரியும். புதிதாக ராமநாதபுரத்தில் பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், முதலில் அமைச்சர் ராஜகண்ணப்பனைச் சந்தித்து மலர்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இது காதர்பாட்ஷாவுக்கும் அவர் ஆதரவாளராக செயல்பட்டுவரும் நவாஸ்கனிக்கும் புகைச்சலை ஏற்படுத்தியது. இதனுடைய வெளிப்பாடுதான் அமைச்சர் மற்றும் ஆட்சியருடனான நவாஸ்கனியின் இந்த நேரடி மோதல்.

எம்.பி நவாஸ்கனி, அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பனும் சர்ச்சைக்குப் பேர்போனவர்தான். கூட்டணிக் கட்சியிலிருந்து முதன் முறையாக எம்.பி ஆன ஒருவர், மூத்த அரசியல்வாதியான தன்னை எதிர்த்துப் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் டென்ஷனாகி வார்த்தையை விட்டுவிட்டார்’’ என்றனர்.

இந்த விவகாரம் குறித்து நவாஸ்கனி எம்.பி-யிடம் பேசியபோது, “மக்கள் பிரதிநிதியான எனக்குண்டான உரிமை, அன்றைய நிகழ்ச்சியின்போது கொடுக்கப்படவில்லை. அதைத்தான் ஆட்சியரிடம் கேட்டேன். புதிதாக வந்த மாவட்ட ஆட்சியர் இனிமேல் இதுபோல் செய்ய மாட்டார் என நம்புகிறேன். ஆட்சியர் கீழே விழுந்தது துரதிஷ்டவசமானது. மற்றபடி எனக்கும் அமைச்சருக்கும் எந்த மனக்கசப்பும் கிடையாது. நான் யாருடைய ஆதரவாளரும் இல்லை. தி.மு.க உட்கட்சி விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது’’ என்றார்.

ராமநாதபுரம் ஆட்சியர் விஷ்ணு சந்திரன்

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, “அமைச்சரும், எம்.பி-யும் விழா முன்கூட்டியே தொடங்கியது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை நான் சமாதானம் செய்ய முயன்றபோது, என்னை கீழே தள்ளிவிட்ட நபர் கண்டறியப்பட்டு, அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தை இதற்கு நான் மேல் பெரிதாக்க விரும்பவில்லை’’ என்றார்.

இது தொடர்பாக விளக்கம் கேட்க அமைச்சர் ராஜகண்ணப்பனைத் தொடர்புகொண்டோம். இணைப்பில் பேசிய அமைச்சரின் உதவியாளர், ‘‘ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் பேச விரும்பவில்லை என அமைச்சர் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்’’ எனக் கூறி இணைப்பை துண்டித்தார்.

from Tamilnadu News https://ift.tt/LDqG8xf