நடிகர் விஜய்-யின் அரசியல் சார்பான நடவடிக்கைகள் தான் தமிழ்நாட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதேசமயம் எதிர்காலத்தில் விஜய் கட்சி தொடங்கி அரசியலுக்கு வந்தால், அது நாம் தமிழர் கட்சிக்குத்தான் பாதகமாக அமையும் என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுதிக்கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், `விஜய் அரசியலுக்கு வருவதால் எங்களுக்கு எந்த இழப்பும் இல்லை; திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கானத் தகுதியாகக் கூறுவது அவமானகரமானது!’ என சீமானும் எதிர்வினையாற்றிருக்கிறார். என்னதான் காரணம்?

Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள்

விருது விழாவில்… விஜய் அரசியல்:

தமிழ்நாடு முழுவதும் நடந்த முடிந்த 2023 பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பிக்கப்போவதாக விஜய் மக்கள் இயக்கம் அதிரடியாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஜூன் 17-ம் தேதி சென்னை நீலாங்கரையில் உள்ள R.K கன்வென்ஷன் மண்டபத்தில் `விஜய் கல்வி விருதுகள் வழங்கும் விழா’ கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொண்ட நடிகர் விஜய் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

அப்போது மாணவர்களிடம் பேசிய நடிகர் விஜய், “பாடப்புத்தகங்களைத் தாண்டி, அம்பேத்கர், பெரியார், காமராஜர் என எல்லாத் தலைவர்களையும் படியுங்கள். நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள். நம்ம விரலைவெச்சு நம்ம கண்ணையே குத்துற வேலைதான் நடந்துக்கிட்டிருக்கு. அதாவது, காசு வாங்கிட்டு ஓட்டுப்போடுவது. ஒருத்தருக்கு 1000 ரூபாய் கொடுத்து ஓட்டு வாங்குறார்கள் என்றால், அவர்கள் அதற்கு முன்பு எவ்வளவு சம்பாதித்திருப்பார்கள்? என்பதை யோசித்து பார்க்கவேண்டும். இனி ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் தங்கள் பெற்றோர்களிடம் `காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடக்கூடாது’ என சொல்லுங்கள். ஏனென்றால் அடுத்து நீங்கள்தான் முதல் தடவை வாக்களிக்கும் வாக்காளர்களாக வரப்போகிறீர்கள்!” என்று அரசியல் பேசினார்.

Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள்

நடிகர் விஜய்யின் இந்த விழாவும், பேச்சும் அவரின் அரசியல் வருகையை உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்ச்சகர்கள் முதல் விஜய் ரசிகர்கள் வரை பலரும் பலவிதமானக் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

Vijay Education Awards | விஜய் கல்வி விருதுகள்

விஜய்யின் வருகை… சீமான் அச்சமா?

இந்தநிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஏற்கெனவே மூன்றாவது அணியாக தமிழ்நாடு அரசியல் களத்தில் இருந்துவரும் நாம் தமிழர் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற பேச்சு எல்லா தளங்களிலும் எதிரொலித்தது. இதுகுறித்து பத்திரிகையாளர்களும் நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், “நடிகர் விஜய், அரசியலுக்கு வர விரும்புகிறார்.‌ அவர், படிக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதை வரவேற்கலாம், பாராட்டலாம். வாக்கு செலுத்துவதற்கு பணம் கொடுக்கவும் வாங்கவும் கூடாது என்ற எனது கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் பேசியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைக்கிறார். எனவே அவர் அரசியலுக்கு வருவதை வாழ்த்துவோம்!” என வரவேற்றார்.

அதேசமயம், “என்னுடைய பாதை வேறு அவருடைய பாதை வேறு. திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே ஒரு நாட்டை ஆள்வதற்கு, ஓர் இனத்தை வழிநடத்துவதற்குத் தலைவனாக இருப்பதற்கான தகுதியாகக் கூறுவது அவமானகரமானது. அதை எல்லோரும் சேர்ந்துதான் மாற்ற வேண்டும்!” என விமர்சிக்கவும் செய்தார்.

சீமான்

மற்றொரு பேட்டியில், “நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேறு, நான் வேறு. எங்களுக்குள் உள்ளது அண்ணன்-தம்பி பந்தம் மட்டும்தான். எந்த சலசலப்புக்கும் எங்கள் கட்சியும், தொண்டர்களும் அஞ்ச மாட்டார்கள்!” என்றார். இந்த பேச்சுகள் சமூக ஊடகங்களில், `சீமான் தம்பிகள் Vs விஜய் தம்பிகள்’ என்ற மோதலாகவும் வெடித்தது.

சீமான்

`விஜய் எதிர்ப்பு பரப்புரையை தொடங்குவோம்!’ – நா.த.க

இந்த விவகாரம் தொடர்பாக, நா.த.க இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் ஷேக்கிடம் பேசினோம். “நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது, `திரைப்படத்தில் நடிப்பது மட்டுமே நாடாள்வதற்கான தகுதி கிடையாது!’ என்று அண்ணன் சீமான் பதிலளித்தார். உடனே `சீமானும் சினிமாவிலிருந்து வந்தவர்தானே…? சினிமாக்காரர் தானே..?’ போன்ற விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள். அண்ணன் சீமான் அவர்கள் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பிருந்தே அரசியலில் இருந்தார். திரைக்களத்தில் பயணிக்கும் போதே அரசியல் தளத்தில், போராட்ட களத்தில் வீரியமாகக் களமாடினார். எனவே அவரை வெறும் சினிமாக்காரராக காட்டுவதை எங்களால் ஏற்கமுடியாது.

நடிகர் விஜய் கடந்த காலங்களில் மண்ணிற்கும் மக்களுக்குமாக நடைபெற்ற போராட்டங்களில் அவருடைய பங்களிப்பு என்ன? அவரின் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தவிர, வேறு ஏதாவது பொது மேடைகளிலோ இல்லை அவரே மேடை அமைத்தோ இந்த மண்ணிற்கான பிரச்னைகளைப் பற்றி பேசியிருக்கிறாரா? இன்று திடீரென மேடை ஏறி காமராஜரைப் படியுங்கள், பெரியாரைப் படியுங்கள் என்று சொல்கிற இவர் தன் முழு உயரக் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர் கூட்டங்களை ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? இன்னும் சொல்லப்போனால் இவரின் திரைப்படங்களில் மதுபான காட்சிகள் புகைப்பிடிக்கும் காட்சிகள் ஏராளம். படத்தின் வாயிலாக சந்ததிகளுக்கு இவர் சொல்லவரும் கருத்து இதுதானா? இப்படி ஆயிரம் கேள்விகள் நடிகர் விஜய்மீது இருக்கிறது. மக்களிடம் 10 கைதட்டு வாங்கும் எல்லா நடிகருக்கும் தோன்றுகின்ற ஆசைதான் இப்போது விஜய்க்கும் தோன்றியிருக்கிறது” என விமர்சித்தார்.

நா.த.க இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளந்தமிழன் ஷேக்

மேலும், “இப்படித்தான் நடிகர் ரஜினிகாந்த்தும் நான் வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி வராமல் போய்விட்டார்… இப்படித்தான் கமலஹாசனும் வந்தார் இன்று எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை! இப்போது விஜயும் வருவேன் என்பதுபோலச் சொல்கிறார். அப்படி விஜய் அரசியலுக்கு வந்தால் அவருடைய கொள்கையில் உள்ள பிழையை, அவருடைய செயல்பாட்டில் உள்ள பிழையை, நடிப்பது மட்டுமே நாடாளுவதற்கான தகுதி இல்லை என்ற கருத்தை முன்வைத்து எங்களுடைய அரசியல் பரப்புரையைத் தொடங்குவோம்..! அண்ணன் சீமான் அதை இப்போதே தொடங்கி விட்டார்” என பதிலளித்தார்.

from Tamilnadu News https://ift.tt/mZqePHn