அமலாக்கத்துறை விசாரணை!
கடந்த 13-ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் விசாரணை தொடங்கினர். தமிழக அரசியல் களத்தில் அன்று பற்றிக்கொண்ட பரபரப்பு இதுவரை ஓயவே இல்லை. கடந்த 13-ம் தேதி இரவு அமைச்சர் இல்லத்திலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அவரை அழைத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அவரை ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அமைச்சரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு இதய ரத்தநாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதை உறுதிசெய்தனர். மேலும், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்தனர். அதைத் தொடர்ந்து அமைச்சரின் உறவினர்கள், அறுவை சிகிச்சைக்காக அவரை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரினர். ஆனால், அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கவே, இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது.
மருத்துவமனையில் செந்தில் பாலாஜி
நீதிமன்ற விசாரணையில் அவரை காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் அரசு மருத்துவமனையிலிருந்து காவேரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அந்த மருத்துவமனையின் ஏழாவது தளத்திலுள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார்.

அந்த மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் ஏர்.ஆர்.ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு செந்தில் பாலாஜியைப் பரிசோதனை செய்தது. மேலும், பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு முன்பு செய்யவேண்டிய ரத்தப் பரிசோதனை தொடங்கி பல்வேறு பரிசோதனைகளும் செய்து முடிக்கப்பட்டன. கடைசியாக இன்று (21.06.2023) காலை அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று கூறப்பட்டது. அதன்படி, இன்று காலை 5 மணியளவில் செந்தில் பாலாஜி அவரது அறையிலிருந்து அறுவை சிகிச்சை அரங்கத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நடந்து முடிந்த அறுவை சிகிச்சை!
அறுவை சிகிச்சை அரங்கில் கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து காவேரி மருத்துவமனை சார்பில் ஒரு மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மருத்துவர் ஏர்.ஆர்.ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அறுவை சிகிச்சையைச் செய்துமுடித்திருக்கிறது. அவருக்கு நான்கு இடங்களில் பைபாஸ் கிராஃப்ட் செய்யப்பட்டிருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அமைச்சரின் உடல்நலம் நன்றாக இருக்கிறது. மருத்துவர்கள் குழு அவரைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறுவை சிகிச்சை தொடர்பாக, இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிலரிடம் பேசினோம். “முதலில் வெளியான மருத்துவ அறிக்கையில் அவருக்கு மூன்று ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. தற்போது அவருக்கு நான்கு இடங்களில் பைபாஸ் கிராஃப்ட் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. மூன்று அடைப்புகளைத் தாண்டி பிரிந்து செல்லும் கிளை ரத்தநாளத்திலும் சிறிய அடைப்பு இருந்திருக்கலாம். அந்த அடைப்பையும் சரிசெய்ய, சிகிச்சை அளிக்கப்பட்டிருந்திருக்கலாம்.
மருத்துவமனையில் முழுமையான மருத்துவ அறிக்கையைப் பார்க்கலாம். எதற்காக நான்கு இடங்களில் பைபாஸ் கிராஃப்ட் செய்யப்பட்டது என்று கூற முடியாது. மேலும், அந்த அறிக்கையில் தற்போது அவர் ஹீமோடயனமிக்கலி ஸ்டேபிள் (Hemodynamically Stable) என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதாவது, மருத்துவரீதியாக அவரின் உடல் இயக்கம் அனைத்தும் சரியாக இருக்கின்றன என்று கூறப்பட்டிருக்கிறது. ஒரு பைபாஸ் அறுவை சிகிச்சை முடிந்ததுமே குறைந்தது ஒரு வாரத்திலிருந்து பத்து நாள்கள் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அடுத்து அவரின் உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்து அவர் அடுத்த ஓரிரு மாதங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும்” என்றனர் விரிவாக.

உச்ச நீதிமன்ற விசாரணை!
அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருக்கும் அதே நேரத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அமலாக்கத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் சூர்யகாந்த், எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறைத் தரப்பில் பேசிய மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “செந்தில் பாலாஜியை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியது, ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தது சரியானது அல்ல. இது மற்ற வழக்குகளில் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிட வாய்ப்பிருக்கிறது. விசாரணையை தாமதப்படுத்தவே செந்தில் பாலாஜி இவ்வாறு நடந்துகொண்டார். அவருக்கு அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சையே கேள்விக்குறியாக இருக்கிறது. எனவே, உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ளக் கூடாது” என்று வாதிட்டார்.
அப்போது பேசிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர், “மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்மீது அமலாக்கத்துறை தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இதயத்திலிருக்கும் அடைப்புகளை எப்படி போலியாகக் காட்ட முடியும்?” என்ற வாதத்தை முன்வைத்தார். அப்போது பேசிய நீதிபதிகள், “செந்தில் பாலாஜி பரிசோதனை செய்த பின்னரே தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவைச் சந்தேகிக்க முடியாது. மருத்துவமனையில் இருக்கும் ஒருவரைக் காவலில் எடுக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்கள்.

மேலும், தொடர்ந்து பேசிய நீதிபதிகள், “உடல்நிலை சரியில்லை என்று மருத்துவக்குழு கூறிய பின்னும், அவரைக் காவலில் எடுக்கக் கோருகிறீர்களா… அவரின் சிகிச்சை முடிந்த பின்னர் விசாரணை மேற்கொள்ளலாமே… உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது அதிருப்தியளிக்கிறது. இதில் மீண்டும் மருத்துவக்குழு அமைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனவே, இந்த வழக்கில் நாளை உயர் நீதிமன்ற விசாரணையில் தீர்ப்பு என்னவென்பதைப் பார்த்துவிட்டு விசாரிப்போம். அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனக் கூறி வழக்கை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
from Tamilnadu News https://ift.tt/usRB68r
