மகாராஷ்டிராவில் முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் தொடர்ந்து சரத் பவாருக்கு தலைவலியாக இருந்துவருகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அஜித் பவாருக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றால் முதல்வர் பதவி அஜித் பவாருக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு மாநில எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் அஜித் பவாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், அடிக்கடி சரத் பவாருக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். கடந்த மாதம் அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க-வில் சேரப்போவதாகச் செய்தி வெளியானது. இதையடுத்து, சரத் பவார் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் என்று கூறி, அஜித் பவாரை பா.ஜ.க பக்கம் போகவிடாமல் தடுத்துவிட்டார்.

ஆனால், ராஜினாமாவை சரத் பவார் திரும்பப் பெற்ற கையோடு தன்னுடைய மகள் சுப்ரியா சுலேவுக்கு கட்சியில் செயல் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறார். இது அஜித் பவாருக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார் தற்போது மீண்டும் கட்சித் தலைமை அதிர்ச்சியடையும் வகையில் ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். கட்சியின் 24-வது தொடக்க நாள் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய அஜித் பவார், “கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான பதவிகளில் நான் பணியாற்றியிருக்கிறேன். எனக்கு எதிர்க்கட்சித் தலைவராக விருப்பம் இல்லை. ஆனால், எம்.எல்.ஏ-க்கள் விரும்பினார்கள். கட்சித் தலைமை அனுமதி கொடுத்தது. அதனால் இந்தப் பதவியில் இருக்கிறேன். நான் அரசுக்கு எதிராகக் கடுமையாக இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். நான் ஆட்சியாளர்களின் கழுத்தையா பிடிக்க முடியும். அதனால், இந்தப் பதவி எனக்குப் போதும் என்று நினைக்கிறேன். எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து என்னை விடுவித்துவிட்டு கட்சியில் ஏதாவது பதவி கொடுங்கள். இதன் மூலம் கட்சியின் செயல்பாட்டை தெரிந்துகொள்ள முடியும். மற்றவர்கள் அவர்களின் விருப்பத்தைச் சொல்லும்போது நானும் எனது விருப்பத்தைச் சொல்கிறேன்.

கட்சி அமைப்புகளில் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள். அதிலும் சிறப்பாகச் செயல்படுவேன். வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் மட்டும் கட்சி முதலிடத்துக்கு வந்துவிடாது. அதிகமானோர் அமைச்சர்களாகின்றனர். தேர்தலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால், அடுத்தவர்களின் வெற்றிக்கு உதவுவது கிடையாது. பேசுபவர்கள் கட்சிக்காகவும் பாடுபட வேண்டும்” என்றார். அஜித் பவார் பேசிய பிறகு சரத் பவார் பேசினார். இதில் அஜித் பவாரின் கோரிக்கை குறித்து எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/pb2NSDQ
