கரூர் மாவட்டம், கடவூர் அருகே இருக்கிறது வீரணம்பட்டி. இந்த கிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில், வருடாவருடம் ஜூன் மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் கடந்த ஜூன் 7 -ம் தேதி அந்த காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது, பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் சார்பாக கோயிலுக்குள் சென்று வழிபாடடு நடத்த முயன்ற சக்திவேல் என்ற இளைஞர், மாற்று சமூகத்தினரால் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த மற்றொரு தரப்பினர் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட, வருவாய்த் துறையினர் அனைத்து தரப்பினரும் கோயிலில் வழிபட வேண்டும் என பேச்சுவார்த்தை மூலம் வலியுறுத்தினர். ஆனால், அதற்கு ஒருதரப்பு உடன்படவில்லை. இதனால், அன்று தற்காலிகமாக கோயிலை பூட்டிய அதிகாரிகள், தொடர்ந்து இருதரப்பு மக்களிடமும் பேச்சுவார்தையில் ஈடுப்பட்டனர். ஆனால், அப்படியும் சுமூக உடன்பாடு ஏற்படாததால், அப்போதைய குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி, கோயிலை பூட்டி சீல் வைத்தார்.

இதனால், ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள், அவரது காரை மறித்து போராட்டம் நடத்தினர். அதோடு, மரங்களை வெட்டி சாய்த்து, காவல்துறையினர் அரசு அதிகாரிகளை நகரவிடாமல் செய்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் மேற்பார்வையில், கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸார் வீரணம்பட்டியில் குவிக்கப்பட்டனர். அதன்பிறகு, அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், மூன்று கட்டமாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் கோயிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், மாற்று சமூகத்தினர் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க தயக்கம் காட்டினார். ‘கோர்ட்டில் போய் பார்த்துகொள்ளுங்கள்’ என்று அவர்களிடம் முதலில் கடுமை காட்டிய ஆட்சியர், அதன்பிறகு தொடர்ந்து இருதரப்பிடமும் சுமூக முடிவு ஏற்பட தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டார்.
இந்நிலையில், பட்டியலின மக்களும் கோயிலுக்குள் சென்று வழிபட மாற்றுச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இசைவு தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தலைமையில் கோயிலை திறந்து, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அழைத்து வழிபாடு நடத்தும் நிகழ்வு நேற்று காலை 11.30 மணி அளவில் நடைபெறும் என இருதரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி, சம்பவ இடத்திற்கு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம், புதிதாக பொறுப்பு ஏற்றுக் கொண்ட குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் ஷோபா, கடவூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கோயில் முன்பு கூடினர்.
இதற்காக, கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்ட கண்காணிப்பு வாகனங்கள், வஜ்ரா வாகனங்கள், அதிவிரைவு படை போலீஸார் என 200 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதற்கிடையில், காளியம்மன் கோயில் பகுதிக்கு மிக அருகாமையில் உள்ள பட்டியலின மக்களை, கோயிலுக்குள் அழைத்துச்சென்று வழிபாடு நடத்த வைப்பதற்காக, குளித்தலை சரக டி.எஸ்.பி ஸ்ரீதர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பாக அழைத்து வந்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த அனைவரின் முன்னிலையிலும் காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அதிகாரியால் உடைக்கப்பட்டது. அதேநேரம், மற்றொரு தரப்பினர் கோயில் பூட்டப்பட்ட பூட்டுக்கான சாவியை அரசு அதிகாரியிடம் ஒப்படைக்காததால், பூட்டு உடைக்கப்பட்டு கோயில் கதவு திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடத்தப்பட்டு, கோவில் பூசாரி தீபாராதனை காட்டியதோடு, பொதுமக்கள் அனைவருக்கும் விபூதியும் வழங்கினார். பட்டியலின மக்களின் நெடுநாளைய கனவு பலித்த சந்தோஷத்தில், உற்சாகமாக காணப்பட்டனர்.
இந்நிலையில், பட்டியலின மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று வழிபடும் உரிமையை பெற்றுக்கொடுத்த, கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் செய்தியாளர்களிடம், “வீரணம்பட்டி காளியம்மன் கோயில் பிரச்னைக்கு முடிவு ஏற்படுத்தும் வகையில், கடந்த ஜூன் 14 – ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொடர்ந்து, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வீரணம்பட்டியில் நிலவிய அசாதாரண சூழல் களையப்பட்டு, இருதரப்பினரும் கோயிலில் ஒற்றுமையாக வழிபாடு செய்ய ஏதுவாக கோயில் திறக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையின் போது, பட்டியலின மக்கள் கோயிலில் உள்ளே சென்று வழிபாடு நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுத்த கோரிக்கை ஏற்கப்பட்டு, பிற ஊர்களுக்கு முன்மாதிரியாகவும், சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும், ஒற்றுமையை பேணிக்காக்கும் வகையிலும் கோயிலில் இன்று பொது வழிபாடு நடத்தப்பட்டது. மேலும், இதுபோன்று சுமூகமான சூழலை ஊக்குவிக்கும் வகையில் மேலப்பகுதி ஊராட்சிக்கு அரசு சார்பில் திட்டங்களை வழங்கியுள்ளோம்.

அதாவது, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் சுமார் ரூ. 1,50,00,000 மதிப்பீட்டில் குடிநீர் குழாய், தெரு விளக்குகள், சிமெண்ட் சாலைகள், ஓரடுக்கு கம்பி சாலைகள் என திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால், அனைத்து தரப்பு மக்களும் ஒருமனதாக அம்மனை வழிபடுவதற்கு, நீடித்த ஒற்றுமைக்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டடுள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இருதரப்பு மக்களின் இந்த முன்முயற்சியையே பாராட்டும் வகையில், மாவட்ட நிர்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள இருக்கிறோம். இருதரப்பும் இனி ஒற்றுமையாக இருக்க வேண்டும். அமைதியாக, இனி கோயில் திருவிழாவை கொண்டாட வேண்டும். குறிப்பாக, இளைஞர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். படித்து கலெக்டர், தாசில்தார், நீதிபதி என பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/myRkJ7I
