பண மோசடி விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டபோது, நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சைக்குப் பின்னர் தற்போது செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை கடந்த வாரம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

கடந்த வார விசாரணையின்போதே, செந்தில் பாலாஜியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், ஆட்கொணர்வு மனுமீது பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றது. இருப்பினும் அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், முதலில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்கட்டும் எனக் கூறி வழக்கை ஜூலை 4-ம் தேதிக்கு மாற்றியது.
இத்தகைய சூழலில்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி ஆகியோர் அமர்வில் ஆட்கொணர்வு மனுமீதான விசாரணை இன்று தொடங்கியது. தொடக்கத்திலேயே, தாங்கள்தான் முதலில் வாதத்தைத் தொடங்க வேண்டும் என்று இரு தரப்பினரும் கூறினர். பின்னர் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ வாதாடுகையில், “அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டிருப்பதால் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். சட்டபூர்வ கைதாக இருந்தால், ஆட்கொணர்வு உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் அப்படி நடக்கவில்லை.

அமலாக்கத்துறை சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில் செந்தில் பாலாஜி வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நள்ளிரவு 11 மணி வரை செந்தில் பாலாஜியிடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது என்பதற்கான எந்தவொரு விளக்கமும் அமலாக்கத்துறையினர் குறிப்பிடவில்லை. அமலாக்கத்துறை ஐந்து முறை சம்மன் அனுப்பியபோது, செந்தில் பாலாஜி ஒரு முறையும், அவரின் ஆடிட்டர் நான்கு முறையும் ஆஜராகியிருந்தனர். இவ்வாறிருக்க, செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் வழக்கு பதிவுசெய்திருக்கிறது. எனவே, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான்.
மேலும், இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் கோருவது சட்டப்படி சரியானதுதான். குறிப்பாக பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள், இது சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரணை செய்யும்போது, போலீஸ் காவலில் எடுக்க அதிகாரமில்லை” என்று கூறினார். அதோடு வாதத்தின்போது, நடிகர் சஞ்சய் தத்தின் வழக்கு, நக்கீரன் கோபால் மீதான பொடா வழக்கு ஆகியவற்றை என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டினார்.

அதைத் தொடர்ந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு அமலாக்கத்துறை சார்பில் `ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது’ என்று உறுதியாக வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “கைது தொடர்பான ஆவணங்களை நாங்கள் வழங்கியபோது செந்தில் பாலாஜி அவற்றைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிறகு கைது நடவடிக்கை பற்றி அவரின் மனைவிக்கும், சகோதரருக்கும் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்தபோது, அவர்கள் எடுக்கவில்லை. சட்டப்படிதான் செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது. மேலும், மருத்துவ சிகிச்சை காலத்தை நீதிமன்றக் காவலாக கருதக் கூடாது” என்றார்.

அதன் பிறகும் நீண்ட இரு தரப்பின் வாதம் மொத்தமாக சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. வாதத்தின் இறுதியில், அமலாக்கத்துறை சார்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா, தங்களின் பதில் வாதத்துக்கு கால அவகாசம் வழங்குமாறு நீதிபதிகளிடம் கோரிக்கையை முன்வைத்தார். பின்னர் துஷார் மேத்தாவின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
from Tamilnadu News https://ift.tt/51hgIJG
