அரசுமுறைப் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு தரப்பைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களைச் சந்தித்துப் பேசி வருகிறார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா தலைமையகத்தில், பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஐ.நா அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் 195 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “மணிப்பூர் பற்றி எரியும்போது நமது பிரதமர் ஐ.நா-வில் யோகா செய்து கொண்டிருந்தார். மும்பை தாக்குதலுக்கு காரணமான சஜித் மிரை சர்வதேச தீவிரவாதி என்று அறிவிப்பதை சீனா தடுத்தபோது, பிரதமர் மோடி ஐ.நா-வில் யோகா செய்து கொண்டிருந்தார். இந்தச் சம்பவங்கள் ரோம் எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ பிடில் வாசித்ததை நினைவுபடுத்தவில்லையா?
மோடி ஆட்சி நீரோ ஆட்சிக்கு நிகரானதல்லவா… மணிப்பூர் பற்றி எரியும்போது ‘உலக தரிசனத்தில்’ இருக்கும் ஒரு பிரதமரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்… மோடி ஒரு சிறந்த நிகழ்ச்சி மேலாளர் என்று அவரது வழிகாட்டியான அத்வானி மேற்கோள் காட்டியிருக்கிறார். உண்மைதான் கடந்த 9 ஆண்டுகளில் பிரதமராக அவரது செயல்பாடு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதைத் தவிர மற்ற எல்லா துறைகளிலும் மோசமாகவே இருக்கிறது’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
from Tamilnadu News https://ift.tt/GOTD8qc
