டெல்லி அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு சாதகமான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசு அவசரச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. இதற்கான சட்ட மசோதா அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க-வை ஆட்சியில் அமர்த்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வியூகம் அமைக்க பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சித் தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பின்போது, மத்திய அரசின் அவசரச் சட்டம் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை ஆம் ஆத்மி கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அப்போது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அந்தச் சட்டத்தை எதிர்ப்பதோ, முன்மொழிவதோ வெளியில் நடக்காது, நாடாளுமன்றத்தில்தான் நடக்கும். நாடாளுமன்றம் கூடும் முன்பு, அனைத்துக் கட்சிகளும் தாங்கள் எந்தப் பிரச்னையில் இணைந்து செயல்பட வேண்டும் என்பதை முடிவுசெய்கின்றன. அது ஆம் ஆத்மிக்கும் தெரியும். அதற்கு முன்பு வெளியில் ஏன் இவ்வளவு விளம்பரம் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் கூட்டம் முடிந்தபிறகு எதிர்க்கட்சித் தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர்.

அப்போது ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர், “டெல்லியின் மாநில அரசுக்கு எதிரான மத்திய அரசின் அவசரச் சட்டத்தை காங்கிரஸ் பகிரங்கமாக எதிர்க்கும் வரை, எதிர்க்கட்சிகளின் கூட்டங்களில் பங்கேற்க மாட்டோம். காங்கிரஸ் டெல்லி மக்களுடன் இருக்கிறதா அல்லது மோடி அரசுடன் இருக்கிறதா என்பதை முடிவுசெய்ய வேண்டும். காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே ஒருமித்தக் கருத்து இருக்கிறது என்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது. அதனால்தான் இந்த அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்கவில்லை” எனத் தெரிவித்தார்.
from Tamilnadu News https://ift.tt/bpjAi3c
