பீகார் முதல்வர் நிதிஷ் குமார், கடந்த ஆண்டு பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகிய நாள்முதல், 2024-ல் பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து வந்தார். அதன் ஒரு பகுதியாக 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு வியூகம் அமைக்க, பா.ஜ.க-வை எதிர்க்கும் மனப்பான்மையிலிருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவந்தார். அதன் அடுத்தகட்டமாக, பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் பா.ஜ.க-வுக்கு எதிராக இன்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், சரத் பவார், அகிலேஷ் யாதவ் உட்பட 16 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதேசமயம், `டெல்லியில் மத்திய அரசின் அவசரச் சட்டத்தைக் காங்கிரஸ் எதிர்த்தால் கூட்டத்துக்கு வருவேன்’ என நிபந்தனை விதித்த கெஜ்ரிவால், `நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன் அதைப்பற்றி முடிவெடுக்கலாம்’ என்று மல்லிகார்ஜுன கார்கே என்று கூறிய பிறகே கலந்துகொண்டார். இவ்வாறு ஒருபக்கம் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வர, மறுபக்கம் பா.ஜ.க இந்தக் கூட்டத்தை விமர்சித்து வருகிறது.
அந்த வரிசையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் பா.ஜ.க-வை, தேசிய ஜனநாயகக் கூட்டணியை, மோடியை ஒற்றுமையாக எதிர்க்கிறோம் என்ற செய்தியைத் தெரிவிக்க, பாட்னாவில் போட்டோஷூட் நடத்திவருகிறார். என்னதான் எதிர்க்கட்சித் தலைவர் கைகள் கோத்துக்கொண்டாலும், அவர்களின் ஒற்றுமை என்பது சாத்தியமற்ற ஒன்று. ஒருவேளை அவர்கள் ஒற்றுமையாக எதிர்த்தாலும்கூட, 2024-ல் மோடி அரசு 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதி” என்று ஜம்மு காஷ்மீரின் பகவதி நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கட்சி நிர்வாகிகளிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “அனைவரும் தங்களின் கருத்து வேறுபாடுகளை உதறிவிட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இதனை விமர்சித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “பிரதமர் மோடியைத் தனியாகத் தோற்கடிக்க முடியாது என்றும், அதற்கு மற்றவர்களின் ஆதரவு தேவை என்றும் பகிரங்கமாக அறிவித்த காங்கிரஸுக்கு நன்றி!” என்று கூறியிருந்தார்.
மாயாவதி, தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
from Tamilnadu News https://ift.tt/b9Ujn1Q
