எந்த ஆட்சியாக இருந்தாலும் அரசு அதிகாரிகள் இடமாற்றுவது எதார்த்தமானது. ஆனால், சமீபத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் ஒரே நேரத்தில் பெரிய அளவிலான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் நடக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் 40-க்கும் மேற்பட்ட  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்  மாற்றப்பட்டனர். பிறகு மே மாதம் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவந்த பின்பு செயலாளர்கள் பொறுப்புகளில் பெரிய அளவு மாற்றம் நடந்தது. குறிப்பாக, உள்துறை, நிதித்துறை, சுகாதாரம், உணவு பாதுகாப்புத் துறை என முக்கிய துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் செய்யப்பட்ட மாற்றங்களில் சில பணியிட மாற்றங்கள் திரும்பப் பெறப்பட்டன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் அதிகாரிகள் நியமனங்களில் பல  குளறுபடிகள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டும் வர தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஆறு மாதங்களில் நடந்தவை பெறும் சொதப்பல்தான் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

முதல்வர் ஸ்டாலின்

இது குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், “திமுக ஆட்சிக்கு வந்தபின் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. கடந்த ஆட்சியைக் கணக்கிட்டால் இந்த ஆட்சியில் அதிகாரிகள் மாற்றம் பெரிதாக நடக்கவில்லை. இருப்பினும், சிறிய அளவிலான மாற்றங்களில் சொதப்பல்கள் அதிகம் நடந்திருக்கிறது என்கின்றனர்.

1.  திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்த வினித், கடந்த 16.5.2023 அன்று மாற்றுத்திறனாளி நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆனால், 22.5.2023-ம் ஆண்டு அதை ரத்து செய்து அவரை ஆவின் நிர்வாக இயக்குநராக நியமித்து பணி ஆணை வெளியிடப்பட்டது.

 2. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கனிமவளங்கள் துறையின் இயக்குநராக இருந்த நிர்மல்ராஜ் போக்குவரத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்ட ஓராண்டுக்குள் அவரை மீண்டும் அவர் கனிமவள துறைக்கே மாற்றியிருக்கிறது திமுக அரசு.

ஐஏஎஸ் அதிகாரிகள்

3. ஐ.ஏ.எஸ் அதிகாரி கமல் கிஷோர், தமிழ்நாடு ஃபைபர்நெட் நெட் கார்ப்ரேஷன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவர் செங்கல்பட்டு ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்தப் பணி ஆணை வந்த 6 நாட்களுக்குள்ளாகவே, அவர் மீண்டும் மாற்றத்திறனாளி துறை இயக்குநராக நியமிக்கும் அறிவிப்பை தலைமைச் செயலகம் வெளியிட்டது.

4. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ரகுல்நாத், அவர் தூத்துக்குடி ஆட்சியராக பணி மாற்றப்பட்டார். அவர் பணியில் சேர்வதற்குள் பணி ஆணை ரத்து செய்யப்பட்டு அவர் செங்கல்பட்டு ஆட்சியராக தொடர்வார் என்னும் ஆணை வெளியானது.

5. தூத்துக்குடி ஆட்சியராக பொறுப்பில் இருந்தவர் செந்தில் ராஜ், அவர் கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக நியமிக்கப்பட்டார். இந்த ஆணை வெளிவந்த 6 நாள்களுக்குள் அவர் மாற்றம் ரத்தாகி, மீண்டும் தூத்துக்குடி ஆட்சியராக தொடர்வார் என அறிவிப்பு வெளியானது.

6. கூட்டுறவு சங்கப் பதிவாளராக இருந்தவர் சண்முக சுந்தரம். அவரை பிற்படுத்தப்பட்ட நலத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டு ஆணை வெளிவந்த நிலையில், அந்த ஆணை ரத்து செய்யப்பட்டு அவர் போக்குவரத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

முதல்வர் ஆலோசனை கூட்டம்-ஐஏஎஸ் அதிகாரிகள்

இப்படியாக, பல மாற்றங்களில் சொதப்பல் நிலவியது. இது குறித்து பேசிய தலைமை செயலக நபர்கள் சிலர், “பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. சுகாதாரம், நெடுஞ்சாலை, உள்துறை என முக்கிய துறைகளில் இவர்கள் அடிக்கடியாக எந்த மாற்றங்களையும் கொண்டுவரவில்லை. மேலும், இரண்டு ஆண்டுகளில் மாவட்டங்களில் பணியாற்றிவர்களை துறைக்குள் (தலைமை செயலகத்துக்கு) நியமித்திருப்பதும் நல்ல நகர்வுதான். இப்படியாக பாசிட்டிவ் கருத்துகளை சொன்னாலும், மற்ற நியமனங்களில் குளறுபடிகளை இருப்பதைத் தவிர்த்துவிட முடியாது” என்கிறார்கள்

குபேந்திரன், பத்திரிக்கையாளர்

இது தொடர்பாகப் பேசிய மூத்தப் பத்திரிகையாளர் குபேந்திரன், “பொதுவாக அதிகாரிகள் மாற்றம் என்பது முதலமைச்சர், அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து தீர்மானிக்க வேண்டியது. கட்சி சார்பாக பார்த்தாலும் மாவட்ட செயலாளர்களிடமும் மாற்றம் குறித்து தெரியப்படுத்துவதும் அவர்கள் கருத்து கேட்பதும் எழுதப்படாத விதி. ஆனால், அந்த ஆலோசனைகள் திமுக ஆட்சியில் நடப்பதில்லை. அதனால், தலைமை செயலாளர்கள் தலைமையில் போட்டப்படும் அதிகாரிகள், கட்சி சார்ந்த எதிர்ப்புகள் கிளம்பி, அது மீண்டும் திரும்பப் பெறப்படுகிறது.

அதுதான் வாடிக்கையாக தொடர்கிறது. திமுக ஆட்சியில் ’நியமன குளறுபடிகள் இருக்கிறது’ அது தலைமை செயலாளர், முதலமைச்சர் பார்வையில்தான் நடக்கிறது என்பதையும் மறுக்க முடியாது” என்றார்.

அதிகாரிகள் நியமனம் என்பது சீரான நிர்வாகத்துக்கு முக்கியமானது. அதனால் இதில் மேற்கொண்டு சிக்கல்கள் இல்லாமல் அரசு செயலாற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

from Tamilnadu News https://ift.tt/d27onfs