திருவாரூர் மாவட்டம், காட்டூரில் நடந்த கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “வருகிற 23-ம் தேதி பிகார் மாநிலம், பாட்னாவில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடக்கிறது. ‘ஜனநாயகம் என்பது வீட்டுக்கு விளக்கு. சர்வாதிகாரம் என்பது காட்டுத் தீ’- என்று சொன்னார் கருணாநிதி.

கலைஞர் கோட்டம் திறப்பு விழா – ஸ்டாலின்

பா.ஜ.க கடந்த பத்தாண்டு காலமாகப் பரப்பி வரும் சர்வாதிகார காட்டுத் தீயை அணைக்க வேண்டிய கடமை நமக்கெல்லாம் இருக்கிறது. அதற்கான முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்றுவதற்கான ஏற்பாட்டை நிதிஷ்குமார் தொடங்கி வைக்க இருக்கிறார். நானும் பாட்னா செல்கிறேன். உங்களுடைய அன்போடு செல்கிறேன். உங்களுடைய நம்பிக்கையோடு செல்கிறேன். ஜனநாயகப் போர்க்களத்தில் கருணாநிதியின் தளபதியாக நானும் பங்கெடுக்க இருக்கிறேன்.

இந்திய ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான காலத்தில் இன்றைக்கு நாம் இருக்கிறோம். இதைச் செய்யாவிட்டால் மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுப் பழமை கொண்ட தமிழ்நாடு என்ற மாநிலமே இல்லாமல் போய்விடும். இன்னும் சொல்கிறேன். கருணாநிதியின் உயிரினும் உயிரான உடன்பிறப்புகளே, இங்கே அமர்ந்திருக்கிறீர்களே, அவருடைய உடன்பிறப்புகள் இதனை நீங்கள் செய்யாவிட்டால் வேறு யாராலும் இதனைச் செய்ய முடியாது.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக

மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் , இந்திய நாட்டுக்கும், இந்தியாவின் எதிர்காலத்துக்கும் அது கேடாக முடியும். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தமிழகத்தில் எப்படி ஒருமுகமாக இருந்து செயல்படுகிறோமோ, செயல்பட்டு வெற்றியைப் பெறுகிறோமோ, அத்தகைய செயல்பாடும் ஒருங்கிணைப்பும் அகில இந்திய அளவில் ஏற்பட்டாக வேண்டும்.

வெற்றி வேண்டும். வெற்றிக்கு முன்னால் ஒற்றுமை வேண்டும். அதனுடைய முன்னோட்டமாகத் தான் பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள கூட்டம் அமையவிருக்கிறது. மீண்டும் சொல்கிறேன் கருணாநிதியின் உடன்பிறப்புகளே, நாம் ஒருதாய் மக்கள். அந்த உணர்வோடு பணியாற்றி அவரின் கனவுகளை நிறைவேற்றுவோம்.

மோடி – அமித்ஷா

அவருக்கு நான் மட்டும், மகனல்ல. நீங்கள் அனைவரும் கருணாநிதியின் பிள்ளைகள்தான். கொள்கைவாதிகள் தான், கொள்கை வாரிசுகள்தான். அடக்குமுறை ஆதிக்கங்களுக்கு எதிரான திராவிடத்தின் வாரிசுகளான நாம் இந்தியா முழுமைக்குமான அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராவோம்” என பேசினார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். “மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது என்பது தமிழகத்திக்கு ஆபத்து என்று அவர் கூறியதை தமிழ்நாட்டுக்கு ஆபத்து என எடுத்துக்கொள்ளக்கூடாது. நமக்கு என்று இருக்கும் பண்பாடு, கலாசாரம், ஒற்றுமை, மொழி போன்றவற்றுக்கு ஆபத்து வந்துவிடும் என்று தான் ஸ்டாலின் கூறுகிறார்.

ப்ரியன்

தமிழக ஆளுநர் இந்தியா முழுவதும் ஒரே கலாசாரம் தான் என்று கூறுவதை நம்மால் பார்க்க முடிகிறது. மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்குத்தான் எதிர்க்கட்சிகள் பாட்னாவில் ஒன்றிணைகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் நிறைய முரண்பாடுகள் இருப்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக டெல்லியில் காங்கிரஸ் தோல்விக்கு கெஜ்ரிவால் தான் காரணம்.

எனவே அவரை சந்திக்க கூடாது என அங்கிருக்கும் காங்கிரஸ் கட்சியினர் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். எனவே தான் கெஜ்ரிவாலுக்கு சந்திக்க நேரம் வழங்க முடியாமல் ராகுல், கார்கே இருக்கிறார்கள். இதேபோல் மேற்கு வங்கத்திலும் பிரச்னை இருக்கிறது. தேர்தலில் மோடியை எதிர்த்து வெற்றி பெற வேண்டும் என்றால், இதுபோன்ற பிரச்னைகளை மறந்து அனைவரும் ஒருஅணியில் நிற்க வேண்டும். இல்லையென்றால் மீண்டும் பா.ஜ.க தான் ஆட்சிக்கு வரும்” என்றார்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். “பாஜக-வுக்கு வாக்களித்தால் ஜம்மு காஷ்மீர் என்ற ஒன்றை இல்லாமல் ஆக்கி விட்டார்கள். அவர்களுடைய நோக்கம் முதல்வர் என்று யாரும் இருக்க கூடாது. பிரதமர் மட்டுமே இருக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. அதை குறிப்பிட்டு தான் முதல்வர் பேசியிருக்கிறார். வரும் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் இணைந்து வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கிறது. அதில் தலைவர் பங்கேற்கிறார்” என்றார்.

இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமனிடம் விளக்கம் கேட்டோம். “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் சுடுகாடாக மாறிக்கொண்டிருக்கிறது. கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை அதிகமாக இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் இறந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் முழுமையாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. டாஸ்மாக் முறைகேட்டில் அமைச்சர் இன்று இலாகாவை இழந்து மருத்துவமனையில் இருக்கிறார்.

அஸ்வத்தாமன்

பட்டப்பகலில் படுகொலைகள் சர்வசாதாரமணமாக நடக்கிறது. சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதற்கிடையில் பால்விலை, மின்சார கட்டணம், சொத்துவரி உயர்வு போன்றவற்றால் மக்களை எறும்புகளாக நசுக்குகிற ஒரு வஞ்சகமான பேயாட்சி நடந்து கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்நாடு திமுக என்ற பிசாசு கையில் இருந்து காப்பாற்றபட வேண்டும் என்றால் பாஜக வந்தால் தான் முடியும் என்று மக்கள் நினைக்கிறார்கள்” என்றார். .

from Tamilnadu News https://ift.tt/06IiMjV