முதலாம் உலகப் போர் இப்படிப் பேரழிவுகளை உருவாக்கிக் கொண்டிருந்தபோது ஒரு மிக வித்தியாசமான நிகழ்வும் நடந்தது. அதை ‘கிறிஸ்துமஸ் போர்நிறுத்தம்’ (Christmas Truce 1914) என்று அழைத்தனர். அந்த கிறிஸ்துமஸ் தினத்தன்றும் அதற்கு முன் தினமும் இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு ஒருவரோடொருவர் இணைந்து (ஆம்!) அந்த நாளைக் கொண்டாடினார்கள். போருக்காகத் தங்களை நிலைநிறுத்திக்கொண்ட பகுதிகளுக்கு இடையே உள்ள பகுதிக்கு வெளியேறி இந்தக் கொண்டாட்டங்களை நடத்தினார்கள். ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள். தங்களிடமுள்ள உணவு மற்றும் மதுவைப் பகிர்ந்து கொண்டார்கள். கொஞ்ச நேரத்துக்குக் கால்பந்து கூட ஆடினார்கள்! இயல்பாக வெளியான இந்த நிகழ்வு கடும் போரின் நடுவிலும் ஒரு மனித உணர்வை வெளிப்படுத்தியது. அதுவும் கடும் குளிர் நிலவிய அந்தக் காலகட்டத்தில் இது இரு தரப்பினிடையே நிலவிய பகைமையைக் கொஞ்சம் (அதாவது இரண்டு நாள்களுக்கு மட்டும்!) தணித்தது.

1915 தொடக்கத்தில் கிழக்குப் போர்முனையில் (The Eastern Front) நடைபெற்ற தாக்குதல்கள் மிக முக்கியமானவை. (மேற்குப் போர்முனை (The Western Front) என்பது பெல்ஜியம் மற்றும் பிரான்ஸில் நடைபெற்ற போரைக் குறித்தது.) குளிர்காலப் போர் (Winter Battle) என்றும் கிழக்குப் போர்முனை அழைக்கப்பட்டு இது, 1915 ஜனவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றது.
ஜெர்மானிய ராணுவத் தளபதி பால் ஹிண்டன்பெர்க் தலைமையில் நடந்தது இந்தத் தாக்குதல். இதன் முக்கிய நோக்கம் ரஷ்யத் துறைமுகங்களைத் தாக்கி தங்கள் வசம் கொண்டு வருவதுதான். ஜெர்மானிய ராணுவம் பல சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தது. அதன் உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தது. அதுவும் திடீரென்று அது தாக்கியதால் ரஷ்ய ராணுவம் கொஞ்சம் நிலைகுலைந்து போனது உண்மை.
ரஷ்ய ராணுவ வீரர்கள் பலர் இருந்தபோதிலும், ரஷ்ய நிலப்பகுதிகளில் கணிசமானவை ஜெர்மனி வசம் வந்தன. எல்லாவற்றையும்விட உச்சமாக வார்சா மாஸ்கோ ரயில் பாதையை அவர்களால் துண்டிக்க முடிந்தது. இதன் காரணமாக நேச நாடுகளிலிருந்து ரஷ்ய ராணுவத்துக்குச் செல்ல வேண்டிய உணவு மற்றும் போர்த்தளவாடங்கள் நின்றன.
என்றாலும் பிப்ரவரி மாதத்திலேயே ஜெர்மன் ராணுவம் சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்கியது. குளிர்காலம் தொடங்கியதன் காரணமாக அவர்களுக்குரிய சப்ளைகள் வந்து சேரவும் தாமதமானது. இதற்குள் ராணுவ ஜெனரல் நிக்கோலாய் இவனோவ் தலைமையில் ரஷ்ய ராணுவம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. எண்ணிக்கை குறைந்தபோதும் மீதமிருந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் திறமையாகச் செயல்பட்டு ஜெர்மன் ராணுவத்தைப் பின்வாங்கச் செய்தனர்.

இரு தரப்புக்குமே இந்தப் போர் மிகுந்த சேதம் விளைவித்தது. இதில் மொத்தம் இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சுமார் 6,00,000. ஆக, இந்த முதலாம் உலகப் போரிலிருந்து ரஷ்யாவை ஒட்டுமொத்தமாக விலக்கிவிட வேண்டும் என்று ஜெர்மனியின் நோக்கம் நிறைவேறவில்லை. தவிர ஜெர்மனியால் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாத நிலையில் ஜெர்மனி மக்களின் பலரும் அதிருப்தியடைந்தனர். தங்கள் நாட்டு நிர்வாகம் பலவீனமாக இருப்பதாக நினைத்தனர். இதன் விளைவாகப் பின்னர் அந்த சாம்ராஜ்யமே நொறுங்கியது.
ரஷ்யாவைப் பொறுத்தவரை இந்தக் குளிர்கால போர் அதற்கு வெற்றி என்று கூறலாம். எனினும் இதற்காக அது கொடுத்த விலை மிக அதிகம். என்றாலும் இந்த வெற்றி ரஷ்ய மக்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்தது. தங்கள் ராணுவத்தின் போர் முயற்சிகளுக்கு அவர்கள் ஆதிக்க ஆதரவு அளிக்கத் தொடங்கினர்.
இப்போது ரொமேனியா முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட பின்னணியைப் பார்ப்போம்.
ஹங்கேரி, உக்ரைன், செர்பியா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது ரொமேனியா. முதலாம் உலகப்போரில் தான் எந்த அணியில் சேர வேண்டும் என்று ரோமானியா தீர்மானித்ததற்கு அதற்கு முன்பு நடந்த பால்கன் போர்களும் காரணங்களாக அமைந்தன.
தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது பால்கன் தீபகற்பம். அதில் அமைந்த நாடுகளை பால்கன் நாடுகள் என்பார்கள். அல்பேனியா, போஸ்னியா, பல்கேரியா, குரேஷியா, கிரிஸ், மான்டனெக்ரோ, வடக்கு மாசிடோனியா, ரொமேனியா, செர்பியா, ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் இதில் அடக்கம்.
1912ல் நடைபெற்ற முதலாம் பால்கன் போர் மேற்படி நாடுகளின் எல்லைகளைக் கணிசமாக மாற்றியமைத்தது. முக்கியமாக ஒட்டாமன் சாம்ராஜ்யம் தன்னிடமிருந்த பெரும்பாலான ஐரோப்பியப் பகுதிகளை பால்கன் நாடுகளிடம் இழந்தது.

என்றாலும் பால்கன் நாடுகளிடையே ஒரு பதற்ற நிலை தொடர்ந்து நிலவியது. அது அடுத்த ஆண்டே (1913ல்) இரண்டாவது பால்கன் போராக வெடித்தது. முக்கியமாக, செர்பியா மற்றும் கிரீஸ் நாடுகளால் தான் வஞ்சிக்கப்பட்டதாக பல்கேரியா நினைத்தது. காரணம் அந்த இரு நாடுகளும் பல புதிய பகுதிகளைத் தங்கள் வசப்படுத்தியதுதான். ஜூன் 1913ல் செர்பியா மற்றும் கிரீஸ் மீது பல்கேரியா தாக்குதல் நடத்தியது. ரொமோனியாவும் இந்தத் தாக்குதலுக்குத் தோள் கொடுத்தது. இதன் விளைவு, பல்கேரியாவுக்குப் பெரும் சேதத்தை அளித்தது. செர்பியா, கிரீஸ், ரொமேனியா, ஒட்டாமன் சாம்ராஜ்யம் ஆகிய ஒட்டுமொத்த சக்திகளுக்கு எதிராக பல்கேரியாவால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஆகஸ்ட் 1913ல் அது ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட நேரிட்டது.
அதன்படி முதலாம் பால்கன் போரில் தான் பெற்றிருந்த புதிய எல்லைப் பகுதிகளையெல்லாம் அது இழக்க நேரிட்டது. செர்பியாவும் கிரிஸும் அதிக அளவிலும், ரோமானியா ஓரளவிலும் புதிய நிலப்பகுதிகளை அடைந்தன. 6,960 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியை அதிகப்படியாக அடைந்தது ரொமேனியா.
முதலாம் உலகப் போரின் தொடக்கத்தில் நடு நிலைமையாக இருக்கலாம் என்று ரொமேனியா தீர்மானித்தது. என்றாலும் அதன் மன்னர் முதலாம் கரோல் ஜெர்மானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். எனவே அவரது கனிவுப்பார்வை ஜெர்மனி அணி மீது பதிந்தது. ஆனால் ரோமானிய மக்களில் பலர் பழைமைவாத சர்ச் (Orthodox Church) பிரிவைச் சேர்ந்தவர்களாகவும் லத்தினை அடிப்படையாகக்கொண்ட மொழியைப் பேசுபவர்களாகவும் இருந்ததால் (பிரெஞ்சு மொழியும் லத்தீனை அடிப்படையாகக் கொண்டது) அவர்கள் பிரான்ஸ் உள்ள அணியில்தான் ரொமேனியா இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள்.

தவிர 1914ல் ரொமேனியாவின் மன்னர் முதலாம் கரோலும் இறந்து விட, மேலே குறிப்பிட்ட (ரொமேனியாவுக்கு ஆதரவாக அமைந்த) உடன்படிக்கைக்கு பிரான்ஸ் நாடு வெளிப்படையாகவே ஆதரவுக் குரல் கொடுக்க, நேச நாடுகளின் பக்கமாக நிற்க ரோமானியா தீர்மானித்தது.
– போர் மூளும்
from Tamilnadu News https://ift.tt/tbyjgqL
