“செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது எதற்காக?”
“காணாமல்போனவர்களுக்கு மட்டுமே ஆட்கொணர்வு என்று மனு இல்லை. ஒரு மனிதன் கைதுசெய்யப்படும்போது, கைதுக்கான காரணங்களை உடனடியாகச் சொல்ல வேண்டும். சட்டப்பிரிவு 21-ஐ மீறி கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். இந்த இரண்டையும் மீறினாலும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம்.”
“செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அமலாக்கத்துறை கைதுசெய்கிறது. இதில் விதிமீறல் எங்கே?”
“தி.மு.க ஆட்சி அமைந்த பிறகுதான் அமலாக்கத்துறை வழக்கு பதிந்தது. அப்போதுகூட அமலாக்கத்துறையிடம் எந்த ஆவணமும் இல்லை. அதற்காக நீதிமன்றத்திலும் மாறி மாறி முறையிட்டார்கள். ஆவணங்கள் இல்லாவிட்டாலும் ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்கு பதியலாம் என்பது உச்ச நீதிமன்றத்தின் கருத்து. ஆனால் 2015-ல் பதியப்பட்ட வழக்கு தொடர்பாக, அப்போதே செய்திகள் வந்துவிட்டன. தி.மு.க ஆட்சி அமையும் வரை அமலாக்கத்துறை காத்திருந்தது ஏன்… எனவே, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வழக்கு பதிந்தார்கள் என்பதுதான் எங்கள் தரப்பு வாதம்.”
“ஆனால் கைதுக்கான சம்மனை செந்தில் பாலாஜி வாங்கிக்கொள்ளவில்லை என அமலாக்கத்துறை குற்றம்சாட்டுகிறதே?”
“`சம்மன் கொடுத்தேன், வாங்கிக்கொள்ளவில்லை’ என்றுதான் விதிமீறும் எல்லா அதிகாரிகளும் சொல்வார்கள். ஏன் சம்மனை கையில் வாங்காவிட்டால் படித்துக்காட்ட வேண்டியதுதானே… படித்துக்காட்டினால் செந்தில் பாலாஜி காதை மூடிக்கொள்வாரா… அப்படி படித்துக்காட்டியதாக அமலாக்கத்துறை குறிப்பிடவில்லையே… ஓமந்துரார் மருத்துவமனையில் இரண்டு நிமிடங்கள் செந்தில் பாலாஜியைச் சந்தித்தேன். சம்மனைக் கொடுத்து உடனே வர வேண்டும் என்றார்கள். அவகாசம் கொடுத்து நேரில் வரச் சொல்வதுதானே சம்மன்?
`இது கைதா இல்லையா’ என்று செந்தில் பாலாஜி கேட்டதாகச் சொன்னார். `சொன்னா வாங்க…’ என்று வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதாகவும் அவர் கூறினார். `நெஞ்சு வலிக்கிறது என்று சொன்ன பிறகும் நம்பவில்லை. பிறகுதான் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்கள். கைது செய்தார்களா, இல்லையா என்றே எனக்குத் தெரியவில்லை’ என்கிறார் அவர்.”

“செந்தில் பாலாஜியின் மனைவியிடம் சம்மன் கொடுத்துவிட்டோம் என்கிறார்களே?”
“செந்தில் பாலாஜியின் மனைவி அப்போது வீட்டில் இல்லை. அவருக்கு இ-மெயிலும் அனுப்பப்படவில்லை.”
“சரி, அமலாக்கத்துறை இதில் எங்காவது எல்லை மீறிச் சென்றிருக்கிறது என்று கருதுகிறீர்களா?”
“தேவையற்ற கைதுதான் மிகப்பெரிய எல்லை மீறல். ஒவ்வொரு கைதுக்கும் ஒரு நியாயம் இருக்க வேண்டும், ஏழு வருடங்களுக்குக் குறைவான தண்டனையுள்ள குற்றங்களுக்குக் கைதுசெய்ய வேண்டுமென்றாலே நியாயமான காரணம் இருக்க வேண்டும். ஜொஹிந்தர் குமார் வழக்கிலும் உச்ச நீதிமன்றம் இதைத் தெளிவாகச் சொல்கிறது.”
“சரி, இதயநோய்க்காக சிகிச்சையில் இருக்கும் நபரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியுமா… சட்டம் என்ன சொல்கிறது?”
“பைபாஸ் சர்ஜரி செய்தவரை காவலில் எடுப்பேன் என்றால் மனிதாபிமானம் வேண்டாமா… சூழலைப் பொறுத்துத்தான் நீதிபதிகள் காவல் வழங்க வேண்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைதுசெய்தால் 24 மணி நேரத்துக்குள் மாஜிஸ்ட்ரேட்டிடம் நிறுத்த வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நீதிமன்றக் காவலோ அல்லது போலீஸ் காவலோ கேட்கலாம். ஆனால் PMLA சட்டப்படி அமலாக்கத்துறைக்கு காவல் நிலைய அதிகாரிக்கான அதிகாரம் மறுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் PMLA சட்டப்படி அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள்தான் தண்டனை கிடைக்கும். அந்த தண்டனைக்கு அதிகபட்சமாக 24 மணி நேரம் விசாரித்தால் போதுமானது. முதலில் ஒருவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அதற்கான காரணங்கள் நியாயமாக இருக்க வேண்டும். தனிமனித உரிமைகளைப் பாதுகாப்பதில் சென்னை உயர் நீதிமன்றம் எப்போதும் முன்னோடியாக இருக்கிறது. தீவிரவாதம் சார்ந்த வழக்குகளில்கூட தேவையில்லாமல் காவல் தர மறுத்த வரலாறுகளும் இருக்கின்றன. PMLA வழக்குகள் பெரும்பாலும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுசெய்யப்படுபவை. அதற்குக் காவல் எதற்கு… நீதிமன்றக் காவலில் இருக்கும்போதேகூட விசாரிக்கலாம்.”
“செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பில் சந்தேகம் இருக்கிறது என அமலாக்கத்துறை சொல்வது எதற்காக?”
“செந்தில் பாலாஜியை எப்படியாவது கைதுசெய்து, அவரை வேறு எங்காவது அழைத்துச் சென்று சித்ரவதை செய்து, அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென்ற நோக்கம்தான் அமலாக்கத்துறைக்கு இருந்திருக்கிறது. காவல்துறை அதிகாரிகளிடம் அளிக்கும் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்புடையது அல்ல. அமலாக்கத்துறை, சுங்கத்துறையிடம் அளிக்கும் வாக்குமூலங்கள் கருத்தில்கொள்ளப்படும். ஒரு மனிதனிடம் எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டு, முடியும்வரை அடித்துக் கையெழுத்துவிட்டால் அதுவும் நீதிமன்றத்தில் கருத்தில்கொள்ளப்படும்.”

“செந்தில் பாலாஜியிடம் விசாரணையின்போது வாக்குமூலம் ஏதாவது பெறப்பட்டதா?”
“செந்தில் பாலாஜியிடம் கேள்வி எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது. ஆனால் நீதிமன்றத்தில் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.”
“மகாராஷ்டிரா, டெல்லி, மேற்கு வங்க மாநிலங்களில் பதியப்பட்டிருக்கும் அமலாக்கத்துறை வழக்குகளுக்கும், செந்தில் பாலாஜி வழக்குக்கும் ஏதாவது ஒற்றுமை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?”
“நிச்சயமாக. லஞ்சம் வாங்கியதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு. சரியா, இல்லையா என்பதற்குள் நான் போகவில்லை. அது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவேண்டிய விஷயம். செந்தில் பாலாஜி வாங்கியதாகக் குற்றம்சாட்டப்படுவதே 2 அல்லது 3 கோடி ரூபாய்தான். ஆனால் சி.விஜயபாஸ்கரிடம் 85 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதே… சி.பி.ஐ அவருக்கு ஒரு சம்மனாவது அனுப்பியதா… வேறு எங்கோ 500 கோடி ரூபாய்க்கு மேல் சிக்கியதே, சி.பி.ஐ அதுகுறித்து விசாரித்ததா… அறிக்கை தாக்கல் செய்ததா… பா.ஜ.க-வுக்கு நண்பர்களாக இருந்தால், தோழமைக் கட்சிகளாக இருந்தால் அவர்களை நெருங்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமையாக இருக்கிறது.”
“அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது. செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை மீண்டும் விசாரிக்க முடியுமா?”
“இன்றைக்கு இருக்கும் சட்டத்தின்படி பார்த்தால், அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கும் 15 நாள்கள் அவகாசம் முடிந்துவிட்டால், மீண்டும் போலீஸ் காவல் எடுக்க முடியாது. அதற்குப் பிறகு வேண்டுமானால் சிறைக்குச் சென்று விசாரிக்கலாம். ஜாமீனில் வெளியே வந்தால், சம்மன் கொடுத்து வரவழைத்து விசாரிக்கலாம்.”
“ஜாமீன் மனுவைவிட ஆட்கொணர்வு மனுவுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருகிறீர்களா?”
“அப்படியல்ல. ஜாமீன் மனுவுக்குத் தகுந்த காலம் இன்னும் வரவில்லை. அதற்கு முன்பாக, கைது விவகாரத்தில் பறிபோன அடிப்படை உரிமைகளுக்காக, விதிமீறல்களுக்கு எதிராக வாதிடுகிறோம்.”

“எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிசோதிக்க வேண்டுமென்று அமலாக்கத்துறை கேட்டவுடன், `மதுரை எய்ம்ஸ் வேண்டாம்’ என்று கிண்டலாகக் கூறியது தற்செயலாக நடந்ததா?”
“ஆமாம். தற்செயலாக நடந்ததுதான். செந்தில் பாலாஜிக்கு இதய அடைப்பு இருக்கிறது என்பதை நாங்கள் நம்பவில்லை என்றார்கள். எய்ம்ஸ் மருத்துவர்களை வரவைத்து பரிசோதிக்க வேண்டுமென்று கேட்டார்கள். அப்படி ஒருவேளை அவர்கள் வந்து பரிசோதித்து இதய அடைப்பு இருந்ததை உறுதிசெய்துவிட்டால், அதைவிட வேறு சிறப்பு என்ன இருக்கப்போகிறது… அதனால் `தாராளமாக…’ என்று சொன்னபோது, `அதற்காக மதுரை எய்ம்ஸ் மருத்துவர்களை அழைத்துவந்து விடாதீர்கள்’ என்று சொன்னேன். பின்னர் அந்த வாதம் வைரலானது என்று கேள்விப்பட்டேன்.”
from Tamilnadu News https://ift.tt/7BEpmhY
