மத்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ், இந்திய பொருளாதாரம், பணவீக்கம், ரஷ்யா- உக்ரைன் போரால் ஏற்படும் பாதிப்பு, வானிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார சவால் என பல விஷயங்கள் குறித்து பி.டி.ஐ ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “ 2024 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 6.5 சதவிதமாக உயரும், கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய வங்கியின் வட்டி விகிதம் 2.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதனால் அரசாங்கத்தின் விநியோக பக்க நடவடிக்கைகளுடன், கடந்த ஆண்டு ஏப்ரலில் 7.8 சதவிகிதமாக இருந்த பணவீக்கத்தை மே மாதத்தில் 4.25 சதவீதமாக குறைக்க உதவியது. நாங்கள் பணவீக்கத்தை குறைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் 2023-24 நிதியாண்டில் இந்திய பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து அதை 4 சதவிகிதமாக குறைப்போம்.
ரஷ்யா – உக்ரைன் போர் உலகளவில் பல பொருள்களின் விலை உயர்வுக்கு வழி வகுத்தது, அதேபோல் பணவீக்க உயர்வுக்கும் வழிவகுத்தது. ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இப்போது எந்த கவலையும் இல்லை. ஒரு பீப்பாப் கச்சா எண்ணெய் விலை 76 அமெரிக்க டாலர்கள் என்று உள்ளது. அதேபோல் சில பொருள்களின் மீதான வரி விலக்கு காரணமாக இந்திய அளவில் உணவுப் பணவீக்கமும் குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

பணவீக்க முன்னணியில் உள்ள சவால்கள் குறித்து கேட்டபோது, “உலகளவிலான காலநிலை மாற்றம் மற்றும் உள்நாட்டில் மாறுபடும் பருவமழையை பொருத்து பணவீக்கம் தீர்மானிக்கப்படும். நம் நாட்டில் வழக்கமான பருவமழை பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தாலும் எல்நினோ பற்றிய கவலை அதிகமாக உள்ளது. அது எவ்வளவு தீவிரமானது என்பதை நாம் பார்க்க வேண்டும். இதர சவால்கள் அனைத்தும் பருவநிலை சம்பந்தப்பட்டதாக இருக்கும் இது உணவு பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உணவு பொருள்கள் விலை உயரும் அபாயம் ஏற்படும்.
ரூ.2,000 நோட்டு வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி அறிவித்த பின்னர், புழக்கத்தில் இருந்த ரூ.3.62 லட்சம் கோடி 2000 ரூபாய் நோட்டுகளில் மூன்றில் இரண்டு பங்கு அதாவது ரூ.2.41 லட்சம் கோடி பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன. அதில் 85 சதவீதம் டெபாசிட்டுகளாகவும் மீதி உள்ளவை பணம் பரிமாற்றம் மூலமும் வந்துள்ளன’’ என தெரிவித்துள்ளார்.
from Tamilnadu News https://ift.tt/LPr7w5E
