தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக 2019-ல் கே.எஸ்.அழகிரி பதவியேற்றிருந்தார். அவருடைய பதவிக்காலம் அண்மையில் முடிவடைந்திருந்த நிலையில், அடுத்து அந்தப் பதவிக்கு யார் வரப்போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இருப்பினும், அந்தப் பதவிக்கு ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன் ஆகியோரிடையே நீண்ட நாள்களாகக் கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இப்படியிருக்க, அந்த லிஸ்டில் தற்போது கர்நாடக மாநில முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், தமிழக காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளருமான சசிகாந்த் செந்திலின் பெயரும் அடிபடுகிறது. இப்படியான சூழலில், கே.எஸ்.அழகிரி டெல்லியில் நேற்றிரவு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினார்.
இதற்கிடையில், தன்னுடைய தலைவர் பதவியை நீட்டிப்பது குறித்துதான் கார்கேவிடம் அழகிரி பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில், தன்னுடைய தலைவர் பதவி நீட்டிப்பது குறித்துப் பேச டெல்லி வரவில்லை என்று அழகிரி விளக்கமளித்திருக்கிறார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், டெல்லி வந்ததன் நோக்கம் தலைவர் பதவி நீட்டிப்பு குறித்தா… என்ற கேள்விக்கு பதிலளித்த அழகிரி, “நான் பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவேன்.

என்னுடைய கட்சி என்னை மதித்திருக்கிறது. எனக்கு பெருமைகளையும் சிறப்புகளையும் கொடுத்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்ட காலத்தை விடவும் நான் அதிக காலம் செயல்பட்டிருக்கிறேன். காங்கிரஸும் அதன் தலைமையும் எனக்குக் கொடுத்த ஊக்கம்தான் அதற்குக் காரணம். தலைவர் பதவி நீட்டிப்பு குறித்த நோக்கத்தோடு இங்கு வரவில்லை. எனக்கு எந்தப் பணி கொடுத்தாலும் செய்வேன்” என்று கூறினார்.
மேலும், கார்கேவுடனான சந்திப்பில் தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்துப் பேசியதாக அழகிரி விளக்கமளித்தார்.
from Tamilnadu News https://ift.tt/cRJVOlb
