“நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதே நேரம், அரசியலில் ஈடுபட திரைப்பட பாப்புலாரிட்டி மட்டும் போதாது என்கிற திருமாவளவனின் கருத்திலும் உடன்படுகிறேன்.” என்று பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேசியிருக்கிறார்.

பாஜக ஆட்சியின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்க கண்காட்சியினை சிவகங்கையில் திறந்து வைத்த ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, “சீமான் தமிழ் தேசிய பிரிவினைவாத கொள்கையை கைவிட்டு, பகுத்தறிவுடன் சிந்தித்தால் பாஜகவுடன் நெருங்கி வரலாம். சீமான் பேசிய கருத்துக்களை நான் முன்பே பேசியிருக்கிறேன். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம். இந்திய தேசியமே ஒற்றுமையை உண்டாக்கும், மற்றப்படி திராவிடத்தை அவர் எப்படி ஏற்றுக்கொள்ளவில்லையோ, அதுபோல் நானும் ஏற்றுக்கொள்ளவில்லை.
நாட்டின் குடிமகன் ஒவ்வொருவரும் அரசியலுக்கு வரலாம். அந்த வகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதே நேரம் அரசியலில் ஈடுபட திரைப்பட பாப்புலாரிட்டி மட்டும் போதாது என்கிற திருமாவளவனின் கருத்திலும் உடன்படுகிறேன்.

மெட்ரோ ரயில் ஊழல் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில், சிபிஐ விசாரணை கோரினால், ஸ்டாலினால் மூடப்பட்ட கதவுகள் தூள் தூளாகி விடும். சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டிருக்கிறது. அமைச்சர் சேகர் பாபுவின் அடாவடித்தனம் இன்னும் 3 மாதங்களில் முடிந்துவிடும். ஏனென்றால் திமுக அரசு நீடிக்காது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, மக்களை திரட்டி 46 கோயில்களுக்குள் சென்று அறநிலையத்துறை அதிகாரிகளை வெளியேற்றுவோம்.

2014-ல் இந்தியாவின் பிரதமராக மோடி வரவில்லை என்றால், பாகிஸ்தான், இலங்கையை விட இந்தியா பிச்சைக்கார நாடாக மாறி இருக்கும். நெல்லையில் பிஷப் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. ஞான திரவியம் எம்.பி-யிடம் விளக்கம் கேட்டால் மட்டும் போதாது அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது, கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் தனி விமானத்தில் பயணித்தனர். இவர்கள் எப்படி நேர்மையான ஆட்சியைத் தருவார்கள்? அவர்களில் யார் பிரதமர் என்பதைக்கூட முடிவு செய்யவில்லை, இரண்டாவது கூட்டம் நடப்பது சந்தேகம்தான்” என்றுப் பேசினார்.
from Tamilnadu News https://ift.tt/2hY4o9O
