கடந்த 14-ம் தேதி அதிகாலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைதுசெய்தனர்.

ஆனால், கைதுசெய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு, செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில், அவசரமாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார்.

Senthil Balaji: செந்தில் பாலாஜி

பின்னர் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில், செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவுக்கு வந்ததையடுத்து, காவேரி மருத்துவமனையில் இருந்தபடியே காணொளி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணையில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். முன்னதாக செந்தில் பாலாஜியின் இலாகா மாற்ற விவகாரத்தில், `செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் இருப்பதாலும், அவர்மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாலும், அவர் அமைச்சராகத் தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று தெரிவித்திருந்தார்.

அதையடுத்து தமிழக அரசு, `செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் (Minister Without Portfolio)’ என அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், `செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகிறார்’ என அறிவிப்பு வெளியிட்டு, அரசியல் அரங்கில் அனலைக் கிளப்பியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இது தொடர்பாக ஆளுநரின் ராஜ் பவனிலிருந்து வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பில், `அமைச்சர் செந்தில் பாலாஜி பணி நியமனங்களுக்குப் பணம் வாங்கியது, பண மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். அமைச்சர் என்ற பதவியைப் பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்து, வழக்கு விசாரணைக்கு இடையூறு விளைவிக்கிறார்.

அதேபோல, தற்போது அவர் குற்றவியல் வழக்கில் நீதிமன்றக் காவலில் இருக்கிறார். இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. மேலும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இன்னும் சில வழக்குகளில் மாநிலக் காவல்துறை செந்தில் பாலாஜியை விசாரித்து வருகிறது. எனவே இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வது, வழக்கு விசாரணையில் இடையூறை ஏற்படுத்தும். மேலும், அரசியலமைப்பு இயந்திரத்தின் செயல்பாட்டையும் பாதிக்கும். எனவே மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களால் மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து உடனடியாக நீக்கி உத்தரவிட்டிருக்கிறார்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

from Tamilnadu News https://ift.tt/YDHaLNj