1985-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, பூட்டான், மாலத்தீவு, நேபாளம் ஆகிய ஏழு நாடுகள் ஒன்றிணைந்து தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (SAARC) என்ற அமைப்பை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து 2007-ல் நடைபெற்ற சார்க் மாநாட்டில் 8-வது உறுப்பு நாடாக ஆப்கானிஸ்தான் இணைந்துகொண்டது. 18 சார்க் மாநாடு முழுமையாக நடத்தப்பட்டதையடுத்து, 2016-ல் 19-வது சார்க் மாநாடு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், அந்த ஆண்டில் ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடத்தியதையடுத்து, மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இந்தியாவைத் தொடர்ந்து இன்னும் சில நாடுகள் மாநாட்டைப் புறக்கணித்ததால், அந்த மாநாடு ரத்துசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சார்க் மாநாட்டை நடத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், பாகிஸ்தானின் தீவிரவாதத்தால் இந்தியா தொடர்ந்து புறக்கணிக்க இன்றுவரை மாநாடு நடைபெறாமலேயே இருக்கிறது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானால்தான் சார்க் மாநாடு நடத்தப்படாமல் இருப்பதாக நேரடியாக பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்திருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சார்க் மாநாடு நடைபெறாமல் இருப்பது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “சார்க் அமைப்பில் நல்ல உறுப்பினர் என்ற அடிப்படைக்கு இணங்காத ஓர் உறுப்பினர் (பாகிஸ்தான்) இருப்பதால், சார்க் மாநாட்டை நாங்கள் நடத்தவில்லை. இன்று சார்க் மாநாட்டுக்கு இதுதான் தடையாக இருக்கிறது.

தீவிரவாதச் செயல்பாடுகளுடன் தொடர முடியாது என்று நாங்கள் முன்பே கூறியிருந்தோம். இருப்பினும் அது தவிர பிற விஷயங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தோம். மேலும், அங்கு பிரச்னைகள் இருக்கிறதென்று நினைக்கிறன். எனவே பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து, இரவில் தீவிரவாதமும், பகலில் வர்த்தகமும் நடைபெறுவதை அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற செயலால் அந்த நாட்டுக்கு நன்மை விளையும் என்றும் நான் நினைத்ததில்லை” என பாகிஸ்தானை மறைமுகமாகச் சாடினார்.
from Tamilnadu News https://ift.tt/h4bn7Re
