தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனாவை நியமிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது தலைமைச் செயலகம். இவர் தமிழகத்தின் 49-வது தலைமைச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த சிவ் தாஸ் மீனா?
1989-ம் ஆண்டு தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ் அதிகாியான சிவ் தாஸ் மீனா, 1964-ம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்தவர். ஜெய்ப்பூரிலுள்ள மாளவியா பிராந்திய பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினீயரிங் படித்தவர். ஜப்பானில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் இவர், 30 ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் பணியில் இருக்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது செயலர்களில் ஒருவராக இருந்தார். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, சிவ் தாஸ் மீனா மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார். அங்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் பணியாற்றினார். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக இருந்தார். இந்த நிலையில், தமிழகத்தில் முதல்வராக 2021-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அப்போது அவரை தமிழகத்துக்கு அனுப்புமாறு, மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து 2021 மே 27-ம் தேதி மத்திய அரசு அவரை விடுவித்தது. சிவ் தாஸ் மீனா 2024-ம் ஆண்டு மே மாதம் பணியிலிருந்து ஓய்வு பெறுவார்.

தமிழகமும் சிவ் தாஸ் மீனாவும்!
காஞ்சிபுரம், கோவில்பட்டி, வேலூர் போன்ற மாவட்டங்களில் தன் தொடக்க காலத்தில் பணியாற்றியிருக்கிறார் சிவ் தாஸ் மீனா. மேலும், முக்கியத் துறைகளான ஊரக வளர்ச்சித்துறை, நில நிர்வாகத்துறை, போக்குவரத்துத்துறை என பல்வேறு துறைகளில் செயலாளராகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார். கூட்டுறவு, உணவு ஆகிய முக்கியத் துறைகளில் முதன்மைச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இப்படியாகத் தொடர்ந்து இவருக்கு ’பாசிட்டிவ்’ பெயர்தான் இருந்தது.
2017-ம் ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு வரை மத்திய அரசுப் பணியில் இருந்தார். 2021-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மத்தியப் பணிக்காலம் முடியும் முன்பே, மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். தமிழகத்தை ஆட்சி செய்வது எந்தக் கட்சியாக இருந்தாலும், சிவ் தாஸ் மீனாவுக்கு முக்கியமானத் துறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. உயர்கல்வி, வணிகவரி, நகராட்சித்துறை, விவசாயத்துறை, நீர்வளத்துறை ஆகிய துறைகளில் நிர்வாக இயக்குநராக இவர் பணியாற்றியிருக்கிறார்.

முக்கிய பணிகள்!
2016-ம் ஆண்டு, அ.தி.மு.க ஆட்சியின்போது கோதுமை தட்டுப்பாடு நிலவியது. அப்போது, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த சிவ் தாஸ் மீனா, திறம்படச் செயலாற்றி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் துரிதமாகச் செயல்பட்டது பாராட்டுகளைப் பெற்றது.
இவ்வாறு தமிழகத்தை ஆட்சி செய்த மூன்று முதலமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றியிருப்பதும், இவரின் சிறப்பு எனச் சொல்லாம்.
அ.தி.மு.க ஆட்சியில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, முதலமைச்சர் அலுவலகத்தின் ஒரு செயலாளராக இருந்தார். எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றதும் அவர் டெல்லிக்கு மாற்றப்பட்டார். கடந்த தி.மு.க ஆட்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை நிர்வாக இயக்குநராக சிவ் தாஸ் மீனா இருந்தார். அந்த நெருக்கத்தாலும்தான் ஸ்டாலின் அவரை தலைமைச் செயலாளராக தற்போது நியமித்திருக்கிறார் என்கிறார்கள்.
ஏன் சிவ் தாஸ் மீனா?
வேற்று மாநிலத்தைச் சேந்தவராக இருந்தாலும், நேர்மையான அதிகாரி எனும் பெயரைப் பெற்றவர் சிவ் தாஸ் மீனா. அதுமட்டுமல்லாமல் டெல்லியிலும் இவருக்கு நல்ல பெயர்தான். எனவே, டெல்லி லாபியைசச் சரிகட்ட இவர்தான் சரியான நபர் என டிக்கடிக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது உள்ள அரசியல் சூழலில், அனைத்துக்கும் போராட வேண்டிய சூழல் இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசுக்கு ஒத்துப்போகாத அதிகாரிகளை நியமித்தால் சிக்கல் மேலும் அதிகமாகும். இதனால், அதை திறம்பட கையாள வேண்டும் என்னும் அடிப்படையில் சிவ் தாஸ் மீனா டிக் அடிக்கப்பட்டிருக்கிறார். இவரை நியமிப்பதில் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்புவின் விருப்பமும் இருந்ததாகவே சொல்லப்படுகிறது.
from Tamilnadu News https://ift.tt/hIriu1q
