பணமோசடி வழக்கில் கடந்த ஜூன் 14-ம் தேதி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக இதய அறுவை சிகிச்சை முடித்துவிட்டு மருத்துவமனையில் உடல்நலம் தேறிவருகிறார். இதற்கிடையில் அவர் வகித்துவந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகள் பிற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்துவந்தார்.

செந்தில் பாலாஜி

அப்போதும் கூட இலாகா மாற்றத்துக்கு மட்டும் ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இருப்பினும் தி.மு.க அரசு இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என அரசாணை வெளியிட்டது.

இத்தகைய சூழலில் நேற்றிரவு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக உத்தரவு பிறப்பித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் எந்த சட்ட விதியின் கீழ் செந்தில் பாலாஜி நீக்கப்பட்டார் என்பது குறித்து ஆளுநர் எதுவும் குறிப்பிடவில்லை. ஆளுநரின் இத்தகைய செயலுக்கு, ஆளும் தி.மு.க கூட்டணி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவிக்க, “அமைச்சரை நீக்கம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரமில்லை” என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி – ஆளுநர் ஆர்.என்.ரவி

ஆனால் அ.தி.மு.க, பா.ஜ.க தரப்பினர் ஆளுநர் செயலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இவையெல்லாம் அடுத்தடுத்து நடந்துகொண்டிருக்க ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக உத்தரவு பிறப்பித்த அடுத்த 5 மணிநேரத்துக்குள்ளேயே அந்த முடிவிலிருந்து பின்வாங்கியதாக தகவல் வெளியானது. மேலும், செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவுசெய்திருப்பதாகவும், செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைத்தது குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது.

அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்தது தொடர்பான கடிதம் தற்போது வெளியாகியுள்ளது. முதல்வருக்கு எழுதிய அந்த கடிதத்தில், செந்தில் பாலாஜி நீக்கம் பற்றி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்கப்பட்டுளதாகவும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலால் மறு உத்தரவு வரும் வரை தனது உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

from Tamilnadu News https://ift.tt/eKy2Rfw