விருதுநகர் மாவட்டத்தில் அலுவல் சார்ந்த ஆய்வுப்பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று விருதுநகருக்கு வந்தார். தொடர்ந்து, ஸ்ரீவில்லிப்புத்தூரிலுள்ள மாவட்டப் பால் உற்பத்தியாளர்கள் நிலையத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். இதைத் தொடர்ந்து அவர், செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “ஆவின் பால் கொள்முதலை 27 லட்சம் லிட்டரிலிருந்து, 31 லட்சம் லிட்டராக உயர்த்தியிருக்கிறோம். ஆவின் கொள்முதலை முழுமையாக உயர்த்துவதற்கு ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்பொருட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆய்வு

ஆவின் பெயரைப் பயன்படுத்தி, ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் தனியார் விற்பனையாளர்கள் பொருள்கள் விற்பனையில் ஈடுபடுவது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சர் செந்தில் பாலாஜி விஷயத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல்வர்மீது குற்றம்சாட்டியிருப்பதை ஏற்கமுடியாது. ஏனெனில், தற்போது வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் மக்கள் தினம், தினம் துன்பப்படுகிறார்கள். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை மட்டும் ஏன் ஏற்கமறுக்கிறது… எனவே, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை தீர்க்கும் பிரச்னைகள் குறித்து அண்ணாமலை முதலில் பேசட்டும். அதன் பிறகு மற்றது குறித்துப் பேசலாம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை, அமைச்சராக இருப்பவரை அமைச்சரவையிலிருந்து நீக்குவதற்கு தமிழக முதல்வருக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆளுநர் என்பவர் அரசியல் சாசன விதிகளுக்குக் கட்டுப்பட்டவர். அரசியல் சாசனத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதை ஏற்று அதன்வழி வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தோடு நின்றுகொள்ளவேண்டும்.

மனோ தங்கராஜ்

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில், தமிழக ஆளுநர் ரவி அரசியல் நாடகம் நடத்துகிறார். ஏனெனில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவிருக்கும் சூழலில், அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயர்ந்திருக்கிறது. இதிலிருந்து மக்களை திசைத்திருப்பும் நோக்கத்துக்காகவே ஆளுநர் ரவி இப்படியொரு முயற்சியைச் செய்திருக்கிறார்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/Gset7jI