புதுச்சேரியில் நடைபெற்று வரும் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி ஆட்சியில், முதல்வராக இருக்கிறார் ரங்கசாமி. ஆட்சிக்கு வந்த நாளிலிருந்தே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அரசுக்கு அதிகாரம் இல்லை எனத் தொடர்ச்சியாக பேசி வருகிறார் முதலமைச்சர் ரங்கசாமி. மேலும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்த தடையாக இருப்பதாகவும், கேள்விகள் எழுப்புவதாகவும் அரசு விழாக்களிலும், தன்னை சந்திக்க வரும் அரசியல் கட்சியினர், அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக இயக்கத்தினரிடம் புலம்பி வருகிறார்.

முதல்வர் ரங்கசாமி – ஆளுநர் தமிழிசை

இந்நிலையில், சில நாள்களுக்கு முன்பு, கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள செவிலியர் பணியிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என முதல்வரை சந்தித்து வேண்டுகோள் வைத்தனர்.

அவர்களுடன் எதிர்கட்சித்தலைவர் சிவா, எம்.எல்.ஏக்கள் நாஜிம், கென்னடி, நாகதியாகராஜன், சம்பத், செந்தில்குமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அப்போது அவர்களிடம் முதல்வர் ரங்கசாமி, “முன்பிருந்த நிர்வாகம் வேறு. தற்போது இருக்கும் நிர்வாகம் வேறு. உங்களுக்கு வேலை இல்லை, எடுத்து விடுங்கள் என்று அதிகாரிகள் கூறியும் 3 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தத்தை நீட்டித்து தருகிறேன். இங்கு 18 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர்களுக்கே என்னால் எதையும் செய்ய முடியவில்லை. இதை உங்களிடம் சொல்வதற்கு எனக்கு அசிங்கமாகத்தான் இருக்கிறது. இந்த முதலமைச்சர் இருக்கையில் ஏன் உட்கார்ந்திருக்கிறோம் என்று நினைக்கிறேன்.

முதல்வர் ரங்கசாமி

அப்படியே எழுந்து பின்பக்கமாக வெளியே சென்றுவிடலாம் போல இருக்கிறது. முன்பெல்லாம் முதலமைச்சர் சொன்னால் அது நடக்கும். ஆனால் இப்போது அதுபோல் எதுவும் நடப்பதில்லை” என்று விரக்தியாக பேசியிருந்தார்.

அதுகுறித்து ஆளுநர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “அரசு வேலைவாய்ப்புகளில் உயர்நீதி மன்றம் சில தடைகளை விதித்திருக்கிறது. அதனை பின்பற்றுவதில்தான் பிரச்னை ஏற்படுகிறதே தவிர ஆளுநரின் அழுத்தம் எதுவும் இல்லை. மற்றபடி எனக்கும் முதல்வருக்கும் இருக்கும் பிரச்னை அண்ணன் தங்கை பிரச்னைதான்” என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் கூட்டு போராட்டக் குழு சார்பில் நடைபெற்ற கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினரும், புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவருமான வைத்திலிங்கம், “புதுச்சேரி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அவற்றில் வரும் வருமானம்  முதல்வருக்கும், கவர்னருக்கும்தான் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து அரசு சார்பு நிறுவனங்களும் முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வருவதற்கு முன் சிறப்பாகவும், லாபத்துடனும் இயங்கியது.

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

ஆனால் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு சர்க்கரை ஆலை, ஸ்பின்கோ, ஏ.எஃப்.டி, சுதேசி, பாரதி உள்ளிட்ட பஞ்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. முதல்வர் ரங்கசாமிதான் அதற்கு காரணம். மதுபானக் கடைகள் அனுமதிக்கு மட்டும்தான் தங்கை (கவர்னர் தமிழிசை) கையெழுத்து போடுகிறார். ஆனால் மற்ற கோப்புகளுக்கு கையெழுத்து போடுவதில்லை.

அண்ணன் (முதல்வர் ரங்கசாமி) தங்கைக்கு சீர்வரிசை செய்திருக்க மாட்டார். அதனால்தான் அடிக்கடி அண்ணன் – தங்கைக்குள் பிரச்னை ஏற்படுகிறது. தங்கைக்கு கோபம் வரவில்லை. ஆனால் மாமியார் (ஒன்றிய அரசு) வீட்டிலிருந்து கோபப்படுத்தி விடுகிறார்கள். என்ன பிரச்னை இருந்தாலும் முதல்வர் ரங்கசாமி வெளிப்படையாகப் பேச வேண்டும்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/xmHz4uj