அமலாக்கத்துறை பிடியிலிருக்கும் தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை முடித்துவிட்டு, தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கிறார். அதோடு செந்தில் பாலாஜி, தான் கவனித்துவந்த துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு, தி.மு.க அரசின் அரசாணையின்படி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக நீடித்துவருகிறார்.

முன்னதாக இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், தி.மு.க அரசு தாமாக அரசாணை வெளியிட்டது. இவ்வாறிருக்க நேற்று முன்தினம் (ஜூன் 29) இரவு ஆளுநர் ஆர்.என்.ரவி, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
`அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரியில்லை’ என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதன் பின்னர், உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணிநேரங்களிலேயே உள்துறை அமைச்சகத்தின் கேட்டுக்கொண்டதின்பேரில் செந்தில் பாலாஜியின் பதவி நீக்கத்தை ஆளுநர் நிறுத்திவைத்தார். இருப்பினும்கூட, மக்கள் பிரதிநிதியான ஓர் அமைச்சரை ஆளுநர் எவ்வாறு பதவி நீக்கம் செய்ய முடியும் என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதில், `செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக ஆளுநர் அறிவித்திருப்பது?’ என்று கேள்வி கொடுக்கப்பட்டு, `சரி, தவறு, கருத்து இல்லை’ என மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி அதிகபட்சமாக `58 சதவிகிதம் பேர், ஆளுநர் அறிவித்தது தவறு’ என்று தெரிவித்திருக்கின்றனர். அடுத்தபடியாக, `40 சதவிகிதம் பேர், ஆளுநர் அறிவித்தது சரி’ என்றும், `2 சதவிகிதம் பேர் கருத்து இல்லை’ என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
from Tamilnadu News https://ift.tt/aF68U7J
