அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள், கொரோனா தொற்றால் பெற்றோர் இருவரையும் இழந்த இளைஞர்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பயின்ற நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியாகி இருந்தது. இந்த நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் மக்களவை உறுப்பினர் துரை.ரவிக்குமார் எம்.பி, “முதல் தலைமுறை பட்டதாரிகள், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற மகத்தான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கிறது. இதற்காக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் தலைமுறை பட்டதாரிகள் மற்றும் தமிழ் வழியில் பயின்றவர்கள் அதிகமாக விழுப்புர மாவட்டத்தில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதிலே அதிகமாக பயனடைவார்கள். விழுப்புரம் போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு வேண்டுகோள் என்னவென்றால் ஒப்பீட்டு அளவிலே, இந்தியாவிலேயே உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடுதான் முதலிடம் வகிக்கிறது. ஆனால், கல்லூரிகளின் எண்ணிக்கை எடுத்துக் கொண்டு பார்க்கும்போது ஒப்பீட்டு அளவிலே கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில பகுதிகளோடு ஒப்பிடும்போது தமிழகத்திலே 1000 முதல் 1500 கல்லூரிகள் கூடுதலாக தேவைப்படுகிறது.
எனவே, ஆண்டொன்றுக்கு 200 கல்லூரிகளை புதிதாக துவக்கினால் தான் இதை சரி செய்ய முடியும். இன்றைக்கு விழுப்புரத்தையே எடுத்துக் கொண்டாலும், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையும், அதிலிருந்து உயர்கல்வி சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது, ஆயிர கணக்கில் குறைவாக இருக்கிறது. அவர்கள் 12-ம் வகுப்புடன் படிப்பை பாதியிலேயே நிறுத்தக்கூடிய ஒரு சூழல் இருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கு போதுமான கல்லூரிகள் இல்லை. மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இதே விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவர் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு கல்லூரிகளை திறந்து வைத்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டத்திலும் கல்வி வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். ஆனாலும் கூட இன்னும் விழுப்புரம் மாவட்டத்திற்கு கூடுதலாக கல்லூரிகள் தேவைப்படுகின்றன. தமிழ்நாட்டுக்கே அதிகமான கல்லூரிகள் தேவைப்படுகின்றன. எனவே, ஆண்டொன்றுக்கு தமிழ்நாட்டிலே 200 புதிய கல்லூரிகளை திறப்பதற்கும், அதிலே கணிசமான எண்ணிக்கையில் அரசு கல்லூரிகளை திறப்பதற்கும் முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியின் துணைநிலை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் தமிழிசை அவர்கள், மீனை சைவ உணவிலே சேர்க்கலாம் என்று பரிந்துரை செய்திருக்கிறார். ஏற்கனவே மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் அப்படி இருக்கிறது. மீனவர்களுக்கு ஆதரவாக அவர் தெரிவித்திருக்கிற இந்த கருத்தை நானும் வரவேற்கின்றேன்.
ஆனால், இன்றைக்கு இந்தியாவில் உள்ள மீனவர்களை எல்லாம் பாதிக்கும் வகையில், ‘மீன் பிடிக்க லைசன்ஸ் வேண்டும்’ என்ற ஒரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. நான் நாடாளுமன்றத்திலே எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினாலும், புதுவை ஒட்டிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 மீனவர் கிராம மக்களை ஒன்றிணைத்து அவர்களின் தீர்மானத்தை மத்திய அரசுக்கு அளித்த காரணத்தினாலும் தான் இப்போது அந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. உண்மையிலேயே மீனவர்கள் மீது அக்கறை இருந்தால் டாக்டர் தமிழிசை அவர்கள், மத்திய அரசை வலியுறுத்தி அந்த மசோதாவை கைவிடச் செய்ய வேண்டும்.

மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடகாவின் மீன்வளத்துறை அமைச்சர், மத்திய அமைச்சரை நேற்று சந்தித்து பேசிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அங்கே ஆட்சி மாற்றம் நடைபெற்றாலும், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது பற்றி அவர்கள் ஒரே விதமான நிலைப்பாட்டைதான் எடுக்கிறார்கள். ஆனாலும் கூட, சட்ட ரீதியாக தமிழக அரசுக்கு இதிலே பாதுகாப்பு இருக்கிறது. எனவே இது குறித்து நாம் அச்சப்பட தேவையில்லை. இன்னும் சொல்லப்போனால் மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன் அவர்கள், இது பற்றி விரல் நுனியில் எல்லா விவரங்களும் வைத்திருப்பவர். எனவே, காவிரியிலே தமிழ்நாட்டுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.
from Tamilnadu News https://ift.tt/8rViv1n
