இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் கோவை மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்காக 9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கோவை நகரில் மெட்ரோ‌ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. தற்போது திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று (01/07/2023) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கோவை மெட்ரோ ரயில்

ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சித்திக், கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். “திட்ட அறிக்கை ஜூலை 15-ம் தேதி தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். முதற்கட்டமாக அவிநாசி சாலை மற்றும் சத்தி சாலையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிறது.

அவிநாசி சாலையில், உக்கடம் முதல் நீலாம்பூர் வரையிலும், சத்தி சாலையில் காந்திபுரம் முதல் வளையம்பாளையம் வரையிலும் ரயில் வழித்தடங்கள் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. திட்டம் செயல்படுத்தப்படவிருக்கிற 39 கிலோமீட்டர் தூரத்தில் 32 ரயில் நிலையங்கள் அமையவிருக்கின்றன. அவிநாசி சாலையில் 17 ரயில் நிலையங்களும், சத்தி சாலையில் 14 ரயில் நிலையங்களும் அமையவிருக்கிறது. ரயில்கள் அனைத்துமே உயர்மட்ட வழித்தடங்களில் செல்லும் வகையிலே திட்டமிடப்பட்டிருக்கிறது. சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஏதும் இல்லை. இந்த வழித்தடங்களில், 3 பெட்டிகளைக் கொண்ட மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். 5 – 7 நிமிட இடைவேளைக்கு ஒரு ரயில் இயக்கப்படவிருக்கிறது.

கோவை மெட்ரோ ரயில்

கட்டுமானப் பணிகளுக்காக 75 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். முதற்கட்ட பணிகள் நிறைவடைந்த பிறகு, திருச்சி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் பணிகள் தொடங்கப்படும். சுரங்கப்பாதை அமைப்பதைவிட, உயர்மட்ட வழித்தடங்கள் அமைப்பதில் இரண்டரை மடங்கு செலவு குறையும். மத்திய, மாநில அரசுகளின் அனுமதி கிடைத்த பிறகு பணிகள் தொடங்கப்படும். ஒன்றரை ஆண்டுக்குள் பணிகள் தொடங்கப்படும். மூன்று ஆண்டுக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

from Tamilnadu News https://ift.tt/FeybdVz