`மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு ஒருபுறம் பேசுபொருளாகி வருகிறது என்றால், அவர் நடித்த கதாபாத்திரம் முன்னாள் சபாநாயகர் தனபாலின் தழுவல் என சமூக வலைத்தளங்களில் மறுபுறம் பேசு பொருளாகி வருகிறது.
படத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஒருவர் சட்டமன்ற அவைத் தலைவராவது போல வரும் காட்சியே இந்த ஒப்பீடுக்கு காரணம்.

இதில் பலரும் தமிழகத்தின் முதல் தலித் சபாநாயகர் தனபால் என பதிவிட்டு வருகிறார்கள். ஆனால் வரலாற்றில் ஏற்கெனவே அந்தத் தடத்தினை வேறொருவர் பதிவு செய்துள்ளார். யார் அவர்? அவர் செய்தது என்ன?
1953ஆம் ஆண்டில் ஒரு அறிவிப்பு வெளிவருகிறது. நாளுக்கு மூன்று மணி நேரம் மட்டுமே பள்ளிக்கூடம். மற்ற நேரங்களில் பெற்றோரின் தொழில்களை பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது பெண் பிள்ளைகள் தாயாரோடு வீட்டு வேலைகளையும், ஆண் பிள்ளைகள் தந்தையின் தொழிலையும் செய்ய வேண்டும்.

ராஜாஜி கொண்டு வந்த இந்தக் கல்வித் திட்டம் படிப்படியாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு மாறத் தொடங்கியது. இது நிறைவேறினால் தகப்பன் தொழிலை மட்டுமே பிள்ளைகள் செய்யும் நிலை உருவாகும், பெண் கல்வி மறுக்கப்படும் என திராவிட சித்தாந்தத்தை கொண்டவர்களும், காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினரும் ‘குலக்கல்வி திட்ட’மென கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர் கோபாலன் இத்திட்டத்தினை கிடப்பில் போட சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தவழி செய்தார். நடந்த வாக்கெடுப்பில் 137-137 என்ற சமநிலை ஏற்பட்டது.

தமிழ்நாட்டின் எதிர்காலக் கல்வியை நிர்ணயம் செய்யும் அந்த ஒற்றை வாக்கினை பதிவு செய்தார் ஒருவர், அந்த ஒற்றை வாக்கு குலக்கல்வித் திட்டத்தை கிடப்பில் போட வைத்தது. பின்னாளில் காமராசரால் அத்திட்டத்தை ரத்து செய்ய வழிவகை செய்தது. அந்த ஒற்றை வாக்கினை செலுத்தியவர் சிவசண்முகம் பிள்ளை. அவரே தமிழகத்தின் பட்டியல் சமூகத்தின் முதல் சபாநாயகர்.
அரசியல் ஈடுபாடு கொண்ட சிவசண்முகம் பிள்ளை இளமையிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிவர். மகாத்மா காந்தியின் தீவிர சீடரான பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் கலைப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இங்குள்ள நுங்கம்பாக்கத்தில் வசித்த இவர் லயோலா கல்லூரியிலும், பிரசிடென்சி கல்லூரியிலும் தனது படிப்பினை முடித்தார்.

31 வயதில் சென்னை மாநகராட்சி உறுப்பினரானார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான எஸ். சத்யமூர்த்தியால் ஒருமனதாக மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இதனால் மாநகராட்சியின் முதல் தலித் மேயர் என்ற பெருமையினைப் பெற்றார்.
இதைத் தொடர்ந்து காந்தி, “நீங்கள் மேயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது அன்பான வாழ்த்துக்கள். நீங்கள் தனித்துவத்துடன் கொண்டாடப்படுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.” என்ற வாழ்த்தினை அனுப்பினார். 1951-ல் மெட்ராஸ் மகாணத்தின் சட்டமன்ற சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் . இதன் மூலம், ‘சுதந்திர இந்தியாவில், தமிழகத்தின் முதல் சட்டமன்ற அவைத் தலைவர்’ என்கிற அடையாளத்தையும் அவர் பெற்றார்

1951 முதல் 1955 வரை சிறந்த சபாநாயகராக செயல்பட்ட அவர், 1955 முதல் 1961 வரை மத்திய பணி ஆணையத்தின் (Union Public Service Commission) உறுப்பினராகவும் கடமையாற்றினார். 1962-ல் இந்திய பாராளுமன்றத்தின் மேலவையான ராஜ்ய சபாவிற்கும் தேர்வு செய்யப்பட்டார். அரசியல் செயல்பாட்டில் மட்டுமல்லாமல், வரலாற்று திரட்டல்களிலும், எழுத்துப் பணியிலும் தனது சிறந்த பணியைச் செய்திருக்கிறார். பிரிட்டனின் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவப்படையில் இருந்த, ஆதிதிராவிடரின் வரலாற்றை ஆவணத்துடன் அச்சில் ஏற்றினார்.
ஆதிராவிடர்களின் வரலாற்றைக் கூறும் ‘The History Of The Adi -Dravidas’ எனும் நூலை இயற்றிய இவர். பட்டியலின மக்களின் முக்கிய தலைவரான எம்.சி.ராஜாவின் வாழ்வையும் சிந்தனை செயல்பாடுகளையும் “ராவ்பகதூர் எம்.சி.ராஜாவின் வாழ்வும், தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள் மற்றும் உரைகள்”என்ற நூலின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார். இதனை 1930 ஆம் ஆண்டில் ‘THE INDIAN PUBLISHING HOUSE’ வெளியிட்டுள்ளது.
மேலும் “பிள்ளை” என்கிற பெயர் எவ்வாறு தலித் பெயராகும் என்ற கேள்வியும் பலருக்கு இருக்கிறது. ஆனால் ஆங்கிலேயர் ஆட்சியின் போது எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், பல்வேறு சாதியினர் இப்பட்டத்தைப் பயன்படுத்தியுள்ளதாக மானுடவியலாளர் எட்கர் தர்ஸ்டன் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
தற்போதைய கணக்கெடுப்புகளில் அகமுடையார், அம்பலக்காரர், கொல்லர், இடையர், நாயர், பறையர், நோக்கர், பணிசவர், பணக்கர், சாயக்காரர், செம்படவர், சேனைக்குடியர் ஆகிய சாதியினருக்குரிய பட்டப்பெயராக இது பதியப்பட்டுள்ளது. தேவதாசிகளின் ஆண் சந்ததியினரும் பிள்ளை என்ற பட்டத்தைத் தரித்துக் கொள்ளுகின்றனர். ஐரோப்பியரிடம் பட்லர்களாகப் பணிபுரியும் பல பறையர்கள், பிள்ளை என்ற பட்டப்பெயரைத் தங்கள் பெயரோடு இணைந்துக் கொள்கின்றனர்.

இச்செய்தி உண்மை என்பதற்குச் சான்றுகள் பல உள்ளன. டியூப்ளேயிடம் தலைமைத் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை, யாதவர் குலத்தைச் சார்ந்தவர். சென்ற நூற்றாண்டில் புகழ் பெற்றிருந்த நாயனக்கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.அவ்வாறு தான் தமிழ்நாட்டின் சட்டமன்றத் தலைவராக விளங்கிய சிவசண்முகம் பிள்ளை ஆதிதிராவிடர் சமுகத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். இன்றும் தஞ்சை மாவட்டக் கள்ளர் சாதியினரிடமும் கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியர் சாதியினரிடமும் ‘முதலி’, ‘பிள்ளை’ என்ற பட்டங்கள் வழக்கிலுள்ளது.
from Tamilnadu News https://ift.tt/ElkuIpz
