மகாராஷ்டிரா அரசியலில் அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இதற்காக இரண்டு நாள்களுக்கு முன்பு முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்து பேசிவிட்டு வந்தனர். இதனால் சிவசேனாவிலிருந்து பிரிந்து வந்தவர்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று பிற்பகல் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.

சரத் பவார்

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். அதோடு அஜித் பவாருடன் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அவர்களில் சரத் பவாருக்கு மிகவும் நெருக்கமான சகன் புஜ்பால், திலிப் வல்சே பாட்டீல், தனஞ்சே முண்டே, ஹசன் முஸ்‌ரீப், ராம்ராஜே நிம்பல்கர் ஆகியோரும் அடங்குவர். சரத் பவார் தனுடைய மகளை கட்சியின் செயல் தலைவராக நியமித்த அடுத்த சில நாள்களில், அஜித் பவார் கட்சியை உடைத்துக்கொண்டு பா.ஜ.க-வுடன் சேர்ந்து துணை முதல்வராகியிருக்கிறார்.

அஜித் பவார் – ஷிண்டே

பா.ஜ.க-வுடன் இணைந்து அஜித் பவார் ஆட்சி அமைப்பது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க-வுடன் சேர்ந்து அதிகாலையில் ஆட்சி அமைத்தார். ஆனால் அந்த அரசு சில நாள்கள் மட்டுமே நீடித்தது. தற்போது இரண்டாவது முறையாக பா.ஜ.க-வுடன் ஆட்சியில் சேர்ந்திருக்கிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியில் மொத்தமுள்ள 53 எம்.எல்.ஏ-க்களில் 43 பேர் தனக்கு ஆதரவாக இருப்பதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

இன்று அமைச்சர்களாக பதவியேற்கும் முன்பு தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அஜித் பவார் இல்லத்தில் கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலேயும் கலந்துகொண்டார். கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அஜித் பவார் கடந்த சில நாள்களுக்கு முன்புதான் தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகப்போவதாகத் தெரிவித்திருந்தார். அதோடு தனக்கு கட்சியில் பதவி கொடுக்கவேண்டும் என்று சரத் பவார் முன்னிலையில் கட்சியின் ஆண்டு விழாவில் கேட்டுக்கொண்டார்.

இன்று காலையில் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூடி ஆலோசனை நடத்தியது குறித்து தனக்கு தெரியாது என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். கடந்த மாதமே அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் சேர்ந்து பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவோ அல்லது பா.ஜ.க-வில் சேரவோ திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளியானது. ஆனால் அதனை அஜித் பவார் தொடர்ந்து மறுத்து வந்தார். சரத் பவாரும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பின்னர் ராஜினாமாவை சரத் பவார் திரும்ப பெற்றுக்கொண்டார்.

அஜித் பவார்

ஏற்கெனவே சிவசேனாவை பா.ஜ.க இரண்டாக உடைத்து அதனை ஏக்நாத் ஷிண்டேயிடம் கொடுத்துவிட்டது. இப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் இரண்டாக உடைத்து, தனக்கு மிகவும் வேண்டப்பட்ட அஜித் பவாரிடம் கொடுக்க பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது. வரும் மக்களவைத் தேர்தலுக்குள் எதிர்க்கட்சிகளை முழுமையாக உடைத்தால்தான் மகாராஷ்டிராவில் போதிய அளவு எம்.பி-க்களைப் பெற முடியும் என்ற நோக்கத்தில், பா.ஜ.க இவ்வாறு செயல்பட்டு வருகிறது. அஜித் பவார் பதவியேற்றது குறித்து முதல்வர் ஷிண்டே, “முன்பு இரட்டை இன்ஜின் அரசாக இருந்தோம். இப்போது மூன்று இன்ஜின்கள் கொண்ட அரசாக மாறியிருக்கிறோம். மகாராஷ்டிராவின் வளர்ச்சிக்கு அஜித் பவாரையும், அவருடன் சேர்ந்த தலைவர்களையும் வரவேற்கிறேன். அஜித் பவார் மிகுந்த அனுபவசாலி” என்று குறிப்பிட்டார்.

அஜித் பவாரால் ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ-க்களுக்கு கிடைக்கவேண்டிய அமைச்சர் பதவிகள் பறிபோயிருக்கின்றன.

from Tamilnadu News https://ift.tt/bsEtTQX