தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கடந்த ஒரு வாரமாக ஏற்பட்டுள்ள மாற்றம் இன்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. சரத் பவார் மற்றும் அஜித் பவார் ஆகிய இருவரும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை இன்று கூட்டினர். இக்கூட்டத்தில் பங்கேற்க சரத் பவார் சார்பாக அக்கட்சியின் கொறடா ஜிதேந்திர அவாட் கொறடா உத்தரவு பிறப்பித்து இருந்தார். இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தொடங்கும் முன்பாக அஜித் பவார் அணியை சேர்ந்தவர்கள், மற்ற எம்.எல்.ஏ.க்களை தொடர்பு கொண்டு போனில் பேசினார்கள் என்ர தகவல்கள் வெளியானது. எங்களுடன் சேர்ந்தால் 2024-ம் ஆண்டு தேர்தல் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்றும், உங்களது தொகுதியில் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை முடிக்க தேவையான நிதி ஒதுக்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியதாக தகவல்கள் வெளியானது.

மேலும், சரத் பவார் மீது மரியாதை வைத்திருப்பதாகவும், அதேசமயம் தற்போது நிலைமை மாறிவிட்டதாகவும், அதற்கு ஏற்றபடி நாம் மாறிக்கொள்ளவேண்டும் என்றும், நடைமுறைக்கு சாத்தியமான முடிவை எடுக்கும்படியும் எம்.எல்.ஏ.க்களிடம் அஜித் பவார் கோஷ்டியை சேர்ந்தவர்கள் கேட்டுக்கொண்டனர் என்றெல்லாம் மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
மும்பை பாந்த்ராவில் இன்று கூட்டம் தொடங்கும் முன்பாகவே அஜித் பவார் வந்து சேர்ந்தார். கூட்டத்திற்கு வரும் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இக்கையெழுத்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அஜித் பவாருக்கு நெருக்கமானவர்கள் குறிப்பிட்டனர். சரத் பவாரின் கூட்டம் ஒரு மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாகவே அஜித் பவாரின் கூட்டம் தொடங்கியது.
அஜித் பவார் கூட்டத்தில் அமைச்சர் சகன் புஜ்பால் தொடக்கவுரையாற்றினார். அஜித் பவார் கூட்டிய கூட்டத்தில் 30 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். சட்டமேலவை உறுப்பினர் நான்கு பேரும் அஜித் பவார் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஆனால் தங்களுக்கு 40 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய கூட்டத்தில் பேசிய பிரபுல் பட்டேல், “அஜித் பவார் எந்தவித தவறும் செய்யவில்லை. அவரை களங்கப்படுத்த முயற்சி நடக்கிறது” எனக் குறிப்பிட்டார். இதில் பேசிய அஜித் பவார், மகாராஷ்டிரா மக்களின் நலனை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்ததாகவும், பிரதமர் மோடி போன்ற ஒரு தலைவர் தேவை என்றும் குறிப்பிட்டார்.
அதேசமயம் சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 15 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இன்னும் 8 எம்.எல்.ஏ.க்கள் எந்த அணி கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட சில எம்.எல்.ஏ.க்கள் சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டனர். அஜித் பவார் அணி கட்சி தாவல் தடுப்பு சட்டத்தில் இருந்து தப்பிக்கவேண்டுமானால் 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. ஆனால் இப்போது அஜித்பவார் அணியில் 30 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கின்றனர். இதனால் அஜித் பவாரால் தேசியவாத காங்கிரஸ் கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரமுடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித்தலைவர் ராஜ்தாக்கரே கூறுகையில், “மாநிலத்தில் தற்போது நடந்திருப்பது அருவருப்பானது. இச்செயல் வாக்காளர்களை அவமதிக்கும் செயலாகும். மகாராஷ்டிராவில் இது போன்ற நிகழ்வுகளை சரத் பவார்தான் தொடங்கி வைத்தார். மகாராஷ்டிராவில் இது போன்ற நிகழ்வுகளை இதற்கு முன்பு கண்டதில்லை. இவை அதனைத்தையும் சரத் பவார் தொடங்கி வைத்தார். இப்போது அவரிடமே வந்து முடிந்திருக்கிறது. தற்போது ஏற்பட்டு இருக்கும் அரசியல் நிகழ்வுகளுக்கு சரத்பவார் கூட காரணமாக இருக்கலாம். பிரபுல் பட்டேல், திலிப் வல்சே பாட்டீல், சகன் புஜ்பால் ஆகியோர் சரத் பவாரின் ஆதரவு இல்லாமல் அஜித் பவாருடன் சென்றிருக்க வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தார்.

`உத்தவ் தாக்கரேயிடம் செல்ல முடிவு?’
அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசில் பங்கேற்று இருப்பது குறித்து சிவசேனா அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் எம்.எல்.ஏ.சஞ்சய் சிர்ஷாத் அளித்த பேட்டியில், “நாங்கள் மகிழ்ச்சியாக இல்லை. இதற்கு முன்பே நாங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளோம்” என்று குறிப்பிட்டார். இதே போன்று மற்றொரு சிவசேனா எம்.எல்.ஏ.வான கோகாவாலாவும் தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இதனால் 15 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் உத்தவ் தாக்கரே அணிக்கு செல்லும் மன நிலையில் இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்தனர். ஆனால் வெறும் 10 பேருக்கு மட்டுமே அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
from Tamilnadu News https://ift.tt/icDS8oq
