மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அஜித் பவார் கட்சியை உடைக்கும் முன்பு, அதாவது… கடந்த 2-ம் தேதி ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் சேரும் முன்பாக, அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்திருக்கிறார். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தன் வசம் கொண்டுவர என்ன செய்யவேண்டுமோ அதையெல்லாம் செய்திருக்கிறார். நேற்று சரத் பவார், அஜித் பவார் என இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தைக் கூட்டினர். இதில் அஜித் பவார் கூட்டிய கூட்டத்தில் 32 எம்.எல்.ஏ-க்களும், சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 18 பேரும் கலந்துகொண்டனர். சில எம்.எல்.ஏ-க்கள் இரண்டு கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.

அஜித் பவார் தரப்பில் தேர்தல் கமிஷனில் ஒரு மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள், சட்டமேலவை உறுப்பினர்கள் என மொத்தம் 40 பேர் கையெழுத்திட்டிருக்கின்றனர். அதாவது கட்சியை உடைப்பதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, 30-ம் தேதி கட்சியின் தலைவர் பதவியிலிருந்து சரத் பவாரை நீக்கிவிட்டு அஜித் பவாரை தலைவராகத் தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறி, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியிருக்கின்றனர்.
அதோடு தங்களுக்குப் பெரும்பான்மை எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதால், தங்களுக்கே கட்சி மற்றும் கட்சியின் சின்னத்தை ஒதுக்கவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சரத் பவார் தரப்பில் ஜெயந்த் பாட்டீலும் தேர்தல் கமிஷனுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். அதில் சில எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சரத் பவார் நேற்றைய கூட்டத்தில் இது குறித்துப் பேசுகையில், “நம்முடன் எத்தனை எம்.எல்.ஏ-க்கள் இருக்கின்றனர் என்பது குறித்துதான் இன்றைக்கு விவாதிக்கிறோம்.

இதற்கு முன்பு என்னிடம் 68 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். நான் சில காலம் வெளியில் சென்றிருந்தபோது, என்னைவிட்டு 62 பேர் சென்றுவிட்டனர். தேர்தலில் அவர்களில் 4 பேரால் மட்டுமே திரும்ப வெற்றி பெற முடிந்தது. நாங்கள் புதுமுகங்களுடன் வெற்றி பெற்றோம்” என்றார். அஜித் பவார் சட்டபூர்வமாக கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமானால், இன்னும் சில எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அப்படி கிடைக்காதபட்சத்தில் அஜித் பவாருக்குச் சிக்கல் ஏற்படும். சரத் பவார் பேசும்போது, “நாங்கள் சட்டபூர்வமான போராட்டத்தில் ஈடுபடப்போவதில். மக்களின் தீர்ப்புக்காக காத்திருக்கப் போகிறோம்” என்றார். சிவசேனா உடைந்தபோது உத்தவ் தாக்கரே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த அனைத்து வழக்குகளிலும் அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைக்கவில்லை.
from Tamilnadu News https://ift.tt/mU8i0c1
